பொதுவாக எல்லாக் கடவுளரையுமே "சுவாமி' என்கிறோம். ஆனால் வடமொழி அகராதியான "அமரம்' என்ற நூல், "சுவாமி' என்ற சொல்லின் பொருள் முருகப் பெருமானே என்கிறது. "வைதாரையும் வாழ வைக்கும்' வள்ளல் பெருமானான கந்தக் கடவுள், தந்தைக்கே உபதேசித்த "சுவாமிநாதன்' அல்லவா? அவ்வகையில், சுப்பிரமணிய சுவாமி என்ற திருநாமத்துடன் முருகப் பெருமான் வீற்றிருந்து அருள்புரியும் திருக்கோயில்களுள் ஒன்றுதான் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள எண்கண்.
இந்தத் தலத்தில் முருகப் பெருமான் ஆறுமுகத்தோடு, பன்னிரு கரத்தோடு, மயில் மேல் அமர்ந்து, வள்ளி-தேவசேனை சமேதராய் தென்திசை நோக்கிக் காட்சி தருகிறார்.
சிற்பக் கலையின் இலக்கணத்துக்கு மாபெரும் சான்றாக விளங்குகிறார் இந்த சுப்பிரமணிய சுவாமி. பெருமானின் முழு எடையும் அவரைத் தாங்கி நிற்கும் மயிலின் இரண்டு கால்களின் ஆதாரத்தில் நிற்கின்றது என்பது அதிசயிக்கத் தக்க அம்சம்.
சிக்கலில் கட்டை விரலையும், எட்டுக் குடியில் கண்ணையும் இழந்தார் "சிற்பா' என்ற சில்ப முனிவர். அந்நிலையிலும் தனது எண்ணமே கண்ணாகக் கொண்டு முருகனுக்கு சிலை வடித்தார். அதனால்தான் இத்தலத்துக்கு "எண்கண்' எனப் பெயர் வந்தது என்பர். (எண்ணமே கண்- எண்கண்). மேலும் அச்சிற்பி வேலவனுக்கு சிலை அமைத்து முடியும் தருவாயில், அருகில் உதவி செய்த அவரது மகளின் கையில் உளிபட்டு ரத்தம் பீறிட்டது. பீறிட்ட ரத்தம் சிற்பியின் கண்களில் பட்டு, முனிவருக்கு பார்வையை மீட்டுத் தந்தது. உடனே "என் கண் கொடுத்த வேலவனே' என உளமுருகி அந்தக் கலைஞர் பாடினார்.
தல வரலாறுப்படி படைக்கும் நாயகனாம் நான்முகனுக்கு முருகப் பெருமான் பிரணவ உபதேசம் செய்து சிருஷ்டித் தொழிலை திரும்பவும் தருகின்றார். அப்போது பிரம்மா தனது எட்டு கண்களாலும் முருகனை கண் குளிரக் கண்டு பூஜித்தமையால் இத்தலம் "அஷ்ட நேத்திர புரம்' என அழைக்கப்படுகிறது. சூரியனால் பூஜிக்கப்பட்டதால் "பாஸ்கர தலம்' என்றும் அழைக்கப்படுகிறது. பிரம்மனுக்கே குருவானதால் முருகப் பெருமானின் கருவறை, "ஞான சபை' என்றழைக்கப்படுகிறது. பிருகு முனிவராலும், சிம்மவர்ம மன்னராலும் பூஜிக்கப் பெற்றது. அம்மன்னனுக்கு மயில் வாகனத்துடன் கந்தக் கடவுள் காட்சியளித்ததாகவும் கூறுவர்.
இத்தலத்தில் அருணகிரி நாதர் அற்புதமான திருப்புகழ் ஒன்று அருளியுள்ளார். அந்தத் திருப்புகழில் குழந்தைக் கந்தவேள் சிலம்பு, தண்டை, வெண்டையம் ஆகியவை ஒலித்துக் கொண்டு ஆடி வரும் அழகை "தந்த தந்த தந்த' என்று வரும் சந்தத்தில் காட்டுகிறார்.
காஞ்சிபுரம் சிதம்பர முனிவரின் ஷேத்திரக் கோவை பிள்ளைத் தமிழ்ப் பாடலிலும் "எண்கண்' இடம் பெறுகின்றது. ("சீராரு மயில் காண....' என்று தொடங்கும்.)
அங்காரக தோஷ பரிகார ஸ்தலமாக விளங்குகிறது எண்கண். எதிரி பயம் நீங்கவும், கண் சம்பந்தமான நோய் நிவாரணம் வேண்டியும் இத்தலத்து முருகனை வேண்டி பக்தர்கள் கூட்டம் எப்பொழுதும் வந்த வண்ணம் உள்ளது. மூலவரைப் போன்றே உற்சவ மூர்த்தியும் மிக நேர்த்தியாய் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்திருக்கோயிலில் அழகன் முருகன் சந்நிதியுடன் அருள்தரும் ஈசன் சந்நிதி (பிரம்மபுரீசுவரர்), அம்மன் சந்நிதி (பெரியநாயகி) மற்றும் ஒரு சிவாலயத்திற்கு அடையாளமான அனைத்து சந்நிதிகளும் செவ்வனே அமைந்துள்ளன. ஆறுமுக வேலரின் ஞானசபை (மூலவர்), தேவசபை (உற்சவர்) ஆகியன ஈஸ்வரனுக்கும், ஈஸ்வரிக்கும் இடையில் அமைந்தது ஒரு தனிச் சிறப்பு.
திருக்கோயிலின் தெற்குபுற வாயிலில் தனிக்கோயில் கொண்டுள்ளார் ஸ்ரீ ஆதி நாராயணப் பெருமாள். மூலக் கருவறையில் கருடாழ்வாரின் மேல் அமர்ந்த அற்புதக் கோலம். வன்னிமரம் தல விருட்சமாகும்.
தமிழக இந்து சமய அறநிலையத் துறையின்கீழ் சிறப்பாக நிர்வகிக்கப்படும் இந்த ஆலயத்தில் தற்போது பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும் மர வாகனங்கள் பழுதுபார்க்கவும், வெளிப்புற தளவரிசை சீர்படுத்தவும், மற்றும் கொடிமர மண்டபம் அமைக்கவும் உபயதாரர்களை எதிர் நோக்கியுள்ளது ஆலய நிர்வாகம். முருகனடியார்கள் மனது வைத்தால் முறைப்படி எல்லா வேலைகளும் பூர்த்தியாகி, குடமுழுக்கு வைபவம் இனிது நடைபெறும். கடைசியாக இவ்வாலயத்தில் 1991ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மயிலின் தோகை விரித்தாடும் தோற்றம் பிரணவ மந்திரத்தின் வடிவம். "ஓங்காரத்துள்ளே முருகன் திருவுருவம் காண வேண்டும்' என்று கந்தரலங்காரம் இயம்பும். ஆதிசங்கர பகவத் பாதாள் தனது சுப்ரமண்ய புஜங்க தோத்திரத்தில் தனக்கு திவ்ய தரிசனம் அளித்த முருகப் பெருமானை "மயில் வாகனத்தில் வருபவர், மகான்களின் மனதை வீடாகக் கொண்டவர்' என்றெல்லாம் போற்றுகின்றார்.
எனவே சில்பி மானசீகமாகக் கண்டு உருவாக்கிய என்கண் முருகப் பெருமானை நாம் நமது மனதையே மயில் வாகனமாகக் கருதி நம் மனதில் இருத்தி அவன் புகழ்பாடுவோம். அவன் ஆலயத் திருப்பணி வேலைகளில் பங்கேற்று அபரிமிதமான அருளைப் பெறுவோம்.
நன்கொடைகள் அளிக்கத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : த. பிச்சைக்கனி, செயல் அலுவலர், அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில், எண்கண் (அஞ்சல்)- 612603, செம்மாங்குடி (வழி), திருவாரூர் மாவட்டம். தொலைபேசி தொடர்புக்கு 04366-278531, 244570 மற்றும் செல்: 9943056903.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.