மாமாயன் மாதவன்!
சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள அருள்மிகு மாதவப்பெருமாள் கோயில் பற்றி அறியாதார் மிகச் சிலரே! இத்திருக்கோயில் அருள்மிகு முண்டகக் கண்ணி அம்மன் திருக்கோயிலுக்கு எதிர்ப்புறம் அமைந்துள்ளது. அருள்மிகு கபா
சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள அருள்மிகு மாதவப்பெருமாள் கோயில் பற்றி அறியாதார் மிகச் சிலரே! இத்திருக்கோயில் அருள்மிகு முண்டகக் கண்ணி அம்மன் திருக்கோயிலுக்கு எதிர்ப்புறம் அமைந்துள்ளது. அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலுக்கு வடக்குப் பக்கத்திலும், சென்னை வானொலி நிலையத்திற்கு மேற்கிலும், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலைக்குத் தென்புறத்திலும் அமையப் பெற்றுள்ளது.
மிக அழகான ராஜகோபுரத்துடன் கூடிய இத்திருக்கோயில், சென்னையின் மிகப் புராதனமான ஆலயங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வார் திருவல்லிக்கேணியைப் பற்றிக் குறிப்பிடும்போது, ""மாட மாமயிலைத் திருவல்லிக்கேணி'' என்றே குறிப்பிட்டுள்ளதால் அக்காலத்தில் திருவல்லிக்கேணியும் மயிலையும் ஒரே பகுதியாக அமைந்திருந்து, காலப்போக்கில் விரிவடைந்துள்ளது என்று கொள்ளலாம்.
இத்தலம், "மங்களா சாஸனம்' செய்யப்பட்ட தலமாகக் கருதப்படவில்லையெனினும் மேற்சொன்ன திருமங்கையாழ்வாரின் குறிப்பின்படி பாடல் பெற்ற தலமாகக் கொள்ளலாம். மேலும் ஆண்டாள் நாச்சியாரும் ""வங்கக் கடல் கடைந்த மாதவனை, கேசவனை'' என்று திருப்பாவையில் குறிப்பிட்டுள்ளபடி இதே மயிலையில் அமைந்துள்ள ஆதிகேசவப் பெருமாளின் திருக்கோயிலும் திவ்யதேச அந்தஸ்தைப் பெறுவது மட்டுமில்லாமல், மயூரபுரி மஹாத்மியத்தின்படி இரண்டு திருக்கோயில்களுமே பேயாழ்வாரின் அவதார ஸ்தலத்தில் அமைந்துள்ள பெருமையைப் பெறுகின்றன.
மயூரபுரி மஹாத்மியப்படி, "கலியுகத்தில் கலி தோஷமில்லாத, தவம் செய்ய சிறந்த இடம் எது?' என வினவிய வேத வியாசருக்கு, "பிருகு முனிவர் ஆஸ்ரமம் அமைந்த இந்த மாதவபுரமே சிறந்தது' என ஸ்ரீமன் நாராயணன் கூறியதாகப் பிரம்மாண்ட புராணத்தின் மூலம் அறியப்படுகிறது. முதல் ஆழ்வார்களில் ஒருவரான பேயாழ்வார், இத்திருக்கோயிலின் தென் கிழக்கே உள்ள "மணி கைரவம்' என்ற தீர்த்தத்தில் அவதரித்தார்.
1956ஆம் ஆண்டு இத்திருக்கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள சமஸ்கிருத கல்லூரியில் காஞ்சி மஹா பெரியவர் இரண்டு திங்கள் தங்கியிருந்து, இத்திருக்கோயிலின் உள்ளே அமைந்துள்ள சந்தான புஷ்கரிணியில் நித்தமும் நீராடி மாதவனை வழிபட்டார் என்பது திருக்கோயிலுக்கு மேலும் சிறப்பைத் தரும் விஷயமாகும்.
இத்திருக்கோயிலில் அமைந்துள்ள திருக்குளம்தான் பிருகு முனிவர் ஆஸ்ரமத்தில் அமைந்திருந்த புஷ்கரிணி என்றும், மாசி மாத மக நட்சத்திரத்தில் சகல புண்ய தீர்த்தங்களும் இத்திருக்குளத்தை வந்தடைவதால் அவ்வமயம் இங்கு நீராடி அமிர்தவல்லி உடனுறை கல்யாண மாதவனை வணங்கி வழிபடுவோர்க்கு சந்தானப் பிராப்தி ஏற்படுவதாகவும், இப்பேற்றைப் பலர் பெற்றுள்ளனர் என்பது கண்கூடு என்றும் இப்பகுதியில் வாழும் பல பெரியவர்கள் மூலம் அறிய முடிகிறது.
அழகான கோபுர வாசலைத் தாண்டி உள்ளே சென்றால் விஸ்தாரமான அமைப்பில் துவஜ ஸ்தம்பம், முன் மண்டபம், அதில் ஆழ்வாராதிகள் சந்நிதி என அமைந்துள்ளன. அதையும் தாண்டி மூல ஸ்தானத்தில் கல்யாண மாதவன் அமர்ந்த கோலத்தில் சதுர்புஜதாரியாய் ஸ்ரீதேவி-பூமாதேவியுடன் மிக மிகக் கம்பீரமாகக் காட்சியளிக்கிறார். இங்கு பிரதான உத்ஸவர்களாக இரண்டு உத்ஸவர்கள் உள்ளனர். இவர்கள் அரவிந்த மாதவன், சின்ன மாதவன் என்று அழைக்கப்படுகிறார்கள். பெரிய மாதவன் யசோதையின் வளர்ப்பால், மதர்ப்பால் புஷ்டியுடன் பெரிய திருமேனியுடன் காட்சியளிப்பதால் சின்ன மாதவனே பல உத்ஸவங்களையும் கண்டருளுகிறார்.
பிராகாரம் வலம் வருகையில் சந்தான புஷ்கரிணி சற்று சிறிய அளவில் அமைந்துள்ளதைக் காண்கின்றோம். ஆயினும் இங்கு பிரதி வருடமும் தெப்ப உத்ஸவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது என்பது மட்டுமின்றி, மாதவனும்-மாதவ நாயகியும் ஒன்றாய் தெப்ப உத்ஸவம் கண்டருள்வது தனிச் சிறப்பு.
திருக்குளத்தையடுத்து பிருகு முனிவரின் மகளாய் அவதரித்து, மாதவனை மணம் புரிந்து வரப்பிரஸôதியாய் காட்சியளிக்கிறார் அன்னை அமிர்தவல்லி. அடுத்து லஷ்மி வராஹன் சந்நிதி, ஆண்டாள் சந்நிதி, சொர்க்க வாசல், ராமர் சந்நிதி என்று அமைந்து கடைசியாக வாகன மண்டபம் அமைந்துள்ளது. இங்குதான் கோயிலின் முக்கிய விழாக்கள் பலவும் நடைபெறுகின்றன. அதையடுத்து அனுமனின் சந்நிதியும் அமைந்துள்ளது. இந்த வீர ஹனுமாரும் பலவிதங்களில் பக்தர்களின் இஷ்டங்களைப் பூர்த்தி செய்து வருகிறார்.
மாதவன் சந்நிதிக்குச் செல்லும் வழியில் ஆழ்வார்களின் சபையில் நடுநாயக சந்நிதியாக ஸ்ரீபேயாழ்வாரின் சந்நிதி அமைந்துள்ளது. இவருக்கு ஐப்பசி மாதத்தில் அவதார உத்ஸவம் 10 நாட்கள் விசேஷமாகக் கொண்டாடப்படுவதுடன், ஒரு நாள் "திருக்கோவலூர் வைபவம்' என்ற வைபவமும் சிறப்பாக நடைபெறுவது தனிச் சிறப்பு. திருக்கோவலூரில் முதலாழ்வார்கள் சந்தித்துக் கொண்டதன் நினைவாக இவ்வைபவம் கொண்டாடப்படுகிறது. இவ்வைபவத்தை நேரில் தரிசித்து அனுபவித்தவர்களுக்கே அதன் ஆனந்தம் புரியும்.
இத்திருத்தலத்தில் தினம் தினம் திருவிழா என்றபடி விசேஷங்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. மேற்குறிப்பிட்ட எம்பெருமான்களைத் தவிர திருநாராயணபுரம் வைரமுடி சேவையும் இங்கு எழுந்தருளியுள்ள செல்வப்பிள்ளைக்கு நடந்து வருவதும், தேர்வு சமயங்களில் ஞானப்பிரானான வராஹனுக்கு விசேஷ ஹோமம் செய்யப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு விசேஷ ரக்ஷை அளிக்கப்படுவதும் தனிச் சிறப்பாகும்.
இத்திருக்கோயிலில் வரும் மே மாதம் 5ந் தேதி முதல், பிரதான உத்ஸவமான பிரம்மோத்ஸவம் நடைபெறவுள்ளது. மே 8ல் கருட சேவை, 12ல் தேரோட்டம் 14ல் புஷ்பப் பல்லக்கு என்று இவ்வருடம் நடக்கவுள்ளது. அன்பர்கள் பிரம்மோத்ஸவ வைபவங்களில் கலந்து கொண்டு மாதவனை வணங்கினால், "மா தவம்' செய்த பலனை அடைவது திண்ணம்!