வெள்ளிமணி

அனுகூலமான தசா புக்திகள் உண்டா? | படிப்புக்கேற்ற உத்யோகம் கிடைக்குமா? | பொன்னான மனம் கிடைக்குமா? | எந்த திசையில் சம்பந்தம் கிடைக்குமா? | வெளிநாட்டில் பணி கிடைக்குமா?

ஜோதிடம் தொடர்பான வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர், சென்னை.

கே.சி.எஸ். ஐயர்
ஹர ஹர மஹா தேவா!



எனது மகனுக்கு சனி தசை நடக்கிறது. சனி தசை நான்காவதாக வந்தால் ஆயுள் பங்கம் ஏற்படும் என்கிறார்கள். இது சரியா? அவனுடைய எதிர்காலம் எப்படியிருக்கும்?

ஜெயராமன், சென்னை-54.

நான்காவதாக வரும் சனி தசையும், ஐந்தாவதாக வரும் செவ்வாய் தசையும், ஆறாவதாக வரும் குரு தசையும், ஏழாவதாக வரும் ராகு தசையும் முடிவு ஏற்படுத்தும் தசைகளாக ஜோதிட கிரந்தங்களில் கூறப்பட்டிருப்பது உண்மையே. ஆனால் இதே கிரந்தங்கள் "இது பொதுவான விதி' என்றுதான் வரையறுத்துச் சொல்கின்றன.

அதாவது, ஜனன கால ஜாதகத்தைப் பொறுத்து, இந்தப் பொது விதி மாற்றம் பெறும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

உங்கள் மகனுக்கு சனி பகவான் நீச்சபங்க ராஜயோகம் பெற்று இருப்பதாலும், பாக்யாதிபதியான குரு பகவானால் பார்க்கப்படுவதாலும், லக்னாதிபதியையும் குரு பகவான் பார்வை செய்வதாலும் அவருக்கு சனி தசை யோகங்களைக் கொடுக்க முடியுமேயன்றி, முடிவை ஏற்படுத்த வாய்ப்பேயில்லை.

மேலும் மார்க்கண்டேயன் என்ற பக்தனுக்காக எமனையே சம்ஹாரம் செய்து, பின்னர் உயிர்ப்பித்தவர் சிவபெருமான். அப்படிப்பட்ட கடவுள் இருக்கும்போது கவலைப்படுவது ஏன்? ஜாதக ரீதியாகவும் உங்கள் மகனுக்கு துன்பம் இல்லை. மேலும் சிவபெருமானை வழிபட்டுக் கொண்டிருந்தால் செல்வ வளமும் பெருகும்! ஆயுள் பலமும் கூடும்! ஹர ஹர மஹா தேவா!

அனுகூலமான தசா புக்திகள்!

எனது சகலையின் மகனுக்கு எப்பொழுது திருமணம் நடைபெறும்? பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா?

எஸ்.சீனிவாசன், கோவை.

உங்கள் சகலை மகனின் ஜாதகத்தில் களத்ர ஸ்தானாதிபதி சத்ருஸ்தானாதிபதியுடன் இணைந்திருப்பதற்கு ஏற்ற சமதோஷம் பார்த்து சேர்க்க வேண்டும். மற்றபடி அவருக்குக் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து அனுகூலமான தசா புக்திகள் ஏற்பட்டுள்ளதால் திருமண முயற்சிகள் வெற்றிபெறும். பிரதி செவ்வாய்க் கிழமைகளில் முருகப் பெருமானையும், துர்கையையும் வழிபட்டு வரச் சொல்லவும்.

படிப்புக்கேற்ற உத்யோகம்!

எனது மகளுக்கு 30 வயது ஆகிறது. இதுவரை திருமணம் கைகூடவில்லை. எப்போது அவளுக்குத் திருமணம் நடக்கும்? பரிகாரம் என்ன செய்ய வேண்டும்? மேலும் அவளுக்குப் படிப்பிற்கேற்ற நல்ல உத்யோகம் கிடைக்குமா?

எஸ்.வி.கண்ணன், மதுரை.

 உங்கள் மகளுக்குத் தொழில் ஸ்தானாதிபதி வலுவாக உள்ளதாலும் தற்சமயம் நடப்பது யோகாதிபதியின் தசையாக இருப்பதாலும் படிப்புக்கேற்ற அரசு உத்யோகம் கிடைத்துவிடும். அவருக்குக் களத்ர ஸ்தானத்திலும் அஷ்டம ஸ்தானத்திலும் அசுபக் கிரகங்கள் அமர்ந்திருப்பதால் அதற்கேற்ற சமதோஷம் பார்த்து சேர்க்க வேண்டும். இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குப் பிறகு திருமணம் கைகூடும்.

வியாழக்கிழமை விரதம்!

எனது மகளுக்கு உத்யோகம் பார்க்கும் வரன் அமையுமா? அவளின் ஜாதகத்தில் தோஷம் ஏதேனும் உள்ளதா? பரிகாரம் என்ன செய்ய வேண்டும்?

ஊர், பெயர் வெளியிட விரும்பாத வாசகர்.

உங்கள் மகளுக்கு சர்ப்பதோஷம் உள்ளது. லக்னாதிபதி சுபக்கிரகமாகி மற்றொரு கேந்திரத்தில் அமர்ந்திருப்பதற்கு ஏற்ற சமதோஷம் பார்த்து சேர்க்க வேண்டும். இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு திருமணம் கைகூடும். உத்யோகத்திலுள்ள வரன் அமையும். பிரதி வியாழக் கிழமைகளில் குரு தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வரவும். முடிந்தால் உங்கள் மகளை பிரதி வியாழக் கிழமைதோறும் ஒரு பொழுது விரதமிருந்து வரச் சொல்லவும்.

பொன்னான மனம்!

எனக்கு 28 வயது ஆகிறது. கடந்த ஐந்து வருடங்களாக எனக்கு வரன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நான் கறுப்பாக இருப்பதால் வருகின்ற வரன்கள் அனைத்தும் என்னைத் தட்டிக் கழிக்கின்றன. இதனால் நான் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளேன். எப்போது எனக்குத் திருமணம் நடக்கும்?

செல்வி, மதுரை-12.

இந்த உலகத்தில் சாதனை சிகரத்தில் ஏறியவர்களில் பலர் கவர்ச்சியான நிறமோ, உடல் அழகோ இல்லாதவர்கள்தான். இறைவன் மேனியழகில் சில குறைகளை ஏற்படுத்தினால் வேறு வகையில் நீங்கள் போற்றத் தகுந்த பெண்ணாக மாறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருவார். எனவே உள்ளம் தளராதீர்கள். உங்களின் பொன்னான மனதைப் பார்த்து வாழ்க்கை தருவதற்கான வரன் விரைவில் உங்களைத் தேடி வரும். உங்கள் ஜாதகப்படி களத்ர ஸ்தானாதிபதி அசுபக் கிரக சேர்க்கை மற்றும் பார்வை பெற்றிருப்பதற்கு ஏற்ற சமதோஷம் பார்த்து சேர்க்க வேண்டும். இல்லையேல் மணவாழ்க்கையில் குழப்பம் ஏற்படும். மற்றபடி உங்களுக்கு வருகிற 10.5.11க்குப் பிறகு சமதோஷமுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி சனிக் கிழமைகளில் சனி பகவானை வழிபட்டு வரவும்.

வடக்கு திசையில் சம்பந்தம்!

எனது மகனுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? கணினித் துறையில் படித்தவர் மனைவியாக அமைவாரா? எந்த திசையில் சம்பந்தம் ஏற்படும்? அவனது ஜாதகப்படி பெற்றோரின் எதிர்காலம் எப்படியிருக்கும்?

சி.தங்கவேலு, சேலம்.

 உங்கள் மகனுக்கு இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குப் பிறகு திருமணம் கைகூடும். கணினித் துறையில் படித்து உத்யோகம் பார்க்கும் பெண் மனைவியாக அமைவார். உங்கள் மகனின் ஜாதகப்படி லக்னாதிபதியும், பூர்வபுண்ய ஸ்தானாதிபதியும் இணைந்திருப்பதாலும், தற்சமயம் பூர்வபுண்ய ஸ்தானாதிபதியின் தசை நடக்கத் தொடங்கியுள்ளதாலும் எதிர்காலம் சிறப்பாக அமையும். லக்னம், குடும்பம் ஆகிய ராசிகளுக்கு ஏற்ற சமதோஷம் பார்த்து சேர்க்க வேண்டும். அவரது ஜாதகப்படி பெற்றோரின் எதிர்காலமும் சீராக அமையும். நீங்கள் வசிக்கும் ஊரிலிருந்து வடக்கு திசையில் சம்பந்தம் ஏற்படும். பரிகாரம் எதுவும் தேவையில்லை.

வெளிநாட்டில் தங்கிப் பணிபுரிவார்!

என் அண்ணனுக்கு 38 வயது ஆகிறது. கடந்த ஆறு வருடங்களாக வெளிநாட்டில் ஏ.சி. மெக்கானிக்காகப் பணிபுரிகிறார். அவர் தொடர்ந்து வெளிநாட்டிலேயே பணிபுரிய வாய்ப்பு உள்ளதா? மேலும் என் அண்ணனுக்கு எப்போது திருமணம் நடக்கும்?

பெயர் வெளியிட விரும்பாத

கல்லிடைக்குறிச்சி வாசகர்.

உங்கள் அண்ணனுக்கு இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் திருமணம் கைகூடும். லக்னம், குடும்ப ஸ்தானங்களுக்கு ஏற்ற சமதோஷம் பார்த்து சேர்க்க வேண்டும். அவருக்காக பிரதி திங்கள் கிழமைகளில் அம்பாளை வழிபட்டு வரவும். அவர் தொடர்ந்து வெளிநாட்டிலேயே தங்கிப் பணிபுரிவார்.

ஏப்ரலுக்குப் பின் திருமணம்!

நான் பி.இ. படித்திருக்கிறேன். நல்ல வேலையில் இருக்கிறேன். எனக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. திருமணஞ்சேரி, காளஹஸ்தி, இராமேஸ்வரம் உள்ளிட்ட தலங்களில் பரிகாரம் செய்துள்ளோம். வேறு ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? எப்போது எனக்குத் திருமணம் நடக்கும்?

பி.முனீஸ்வரி, சிவகாசி.

உங்களுக்கு இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு திருமணம் கைகூடும். சுகஸ்தானத்தில் உள்ள கிரகங்களுக்கு ஏற்ற சமதோஷம் பார்த்து சேர்க்க வேண்டும். மற்றபடி இதுவரை நீங்கள் செய்துள்ள பரிகாரங்கள் சரியானவை மற்றும் போதுமானவை. வேறு பரிகாரம் தேவையில்லை.

பொறியியல் துறை ஏற்றது!

எனது மகன் பனிரெண்டாம் வகுப்பு படிக்கிறான். அவன் ஜாதகப்படி பொறியியல் அல்லது மருத்துவத் துறையில் மேற்படிப்பு படிக்கும் வாய்ப்பு உண்டா? மேலும் நான் சொந்தமாக வீடு கட்டுவேனா?

வி.எஸ்.ஈஸ்வரன், வா.வேலூர்.

உங்கள் மகனுக்குப் பொறியியல் படிப்பு ஏற்றது. மருத்துவத் துறையில் படித்தாலும் பயோ  - பொறியியல் துறையில் சேர்ந்து படிக்கலாம். லக்ன சுபர்கள் தொழில் ஸ்தானத்தில் வலுவாக அமர்ந்திருப்பதால் உத்யோகத்தில் நல்லபடியாக முன்னேறிவிடுவார். உங்கள் ஜாதகப்படி தற்சமயம் நடக்கும் பூர்வபுண்ய ஸ்தானாதிபதியின் தசை யோக தசையாக அமையும். அதனால் எதிர்காலம் பிரகாசமாகவே இருக்கும். இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு சொந்த வீடு அமையும்.

மகாலட்சுமியை வழிபடவும்!

எனது மகன் அரசு மருத்துவராகப் பணிபுரிகிறார். அவரது திருமணத்திற்காகக் கடந்த 3 ஆண்டுகளாகப் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் தடை ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. அவருக்கு எப்போது திருமணம் நடக்கும்? மருத்துவத் துறையில் பணிபுரிபவர் மனைவியாக அமைவாரா? பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா?

துரை.வி. கலியபெருமாள், நெய்வேலி-1.

உங்கள் மகனின் ஜாதகப்படி களத்ர ஸ்தானாதிபதி அசுபர் சாரம்  பெற்றிருப்பதும், அஷ்டமாதிபதி சஷ்டமாதிபதியுடன் களத்ரஸ்தானத்தில் இணைந்திருப்பதும் திருமண தாமதத்தை ஏற்படுத்துகிறது. மற்றபடி லக்னாதிபதி சுப பலத்துடன் இருப்பதால் மேற்கூறிய குறைகளுக்கு ஏற்ற சமதோஷமுள்ள பெண் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப் பிறகு வட கிழக்கு அல்லது கிழக்கு திசையிலிருந்து அமைந்து திருமணம் கைகூடும். மருத்துவத்துறையைத் தவிர்த்து மற்ற துறைகளில் பணிபுரியும் பெண் அமையவும் வாய்ப்புஉள்ளது. பிரதி வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டு வரவும்.

பரிகாரங்கள் போதுமானவை!

எனக்கு எப்போது திருமணம் நடக்கும்? காளஹஸ்தி, திருப்பாம்புரம் ஆகிய தலங்களுக்கு சென்று பரிகாரம் செய்துள்ளோம். வேறு ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

வி. சண்முகசுந்தரம், காவேரிப்பாக்கம்.

உங்களுக்கு 2012ஆம் ஆண்டு, மே மாதத்திற்குள் திருமணம் கைகூடும். நீங்கள் இதுவரை செய்துள்ள பரிகாரங்களே போதுமானவை.

இணைந்து வாழ்வீர்கள்!

நானும் எனது கணவரும் இணைந்து வாழும் வாய்ப்பு உண்டா? எங்களுக்கு  செய்வினைக் கோளாறு இருக்கிறதா? என்னுடைய குழந்தையின் எதிர்காலம் எப்படியிருக்கும்?

பெயர் வெளியிட விரும்பாத கோவை வாசகி.

உங்கள் மற்றும் உங்கள் கணவரின் ஜாதகங்களை ஆராய்ந்து பார்த்ததில் நீங்கள் இருவரும் 2012ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் இணைந்து விடுவீர்கள். அதனால் பெரியவர்களின் துணையுடன் இணைந்து வாழ்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவும். உங்கள் குடும்பத்தில் செய்வினைக் கோளாறு எதுவும் இல்லை. உங்கள் குழந்தையின் எதிர்காலம் சிறப்பாகவே அமையும். பிரதி வியாழக் கிழமைகளில் குரு தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வரவும்.

சொந்த வீடு அமையும்!

என்னுடைய குழந்தைகளின் எதிர்காலம் எப்படியிருக்கும்? நான் சொந்த வீடு வாங்கும் யோகம் உண்டா? வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என்கிற என்னுடைய எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

பகவதி பெருமாள், நாகர்கோவில்.

உங்கள் ஜாதகப்படி மே, 2012ஆம் ஆண்டுக்குப் பிறகு சொந்த வீடு அமையும். பூர்வபுண்ய புத்திர ஸ்தானாதிபதி வலுவாக உள்ளதால் குழந்தைகள் நல்லபடியாக மேற்படிப்பை முடித்து உத்யோகத்தையும் பெற்று விடுவார்கள். லக்னாதிபதியை குரு பகவான் பார்வை செய்வதால் உங்கள் எதிர்பார்ப்பு நிச்சயம் நிறைவேறும்.

எதிர்பாராத சிறப்புகள்!   

எனது மகனுக்கு எப்போது உத்யோகம் கிடைக்கும்? ராகு தசையில் அவனுக்கு எப்படிப்பட்ட பலன்கள் உண்டாகும்?

பி.புருஷோத்தமன், சென்னை-50

உங்கள் மகனுக்கு விரைவில் நல்ல உத்யோகம் அமையும். அவருக்கு 22.3.2012 வரை ராகு தசையில் பாக்யாதிபதியின் புக்தி நடப்பதால் எதிர்பாராத சிறப்புகளும் உண்டாகும்.

பணியில் மாற்றம்!

எனது மகன் டெல்லி விமான நிலையத்தில் ஒப்பந்தத் தொழிலாளராகப் பணிபுரிகிறான். அவனுக்கு வேறு வேலை கிடைக்குமா? வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டா? அவன் தந்தையின் பேச்சை மதித்து நடந்துகொள்வானா?

எஸ். கோவிந்தராஜன், தஞ்சாவூர்-6

உங்கள் மகனுக்கு இந்த ஆண்டுக்குள் பணியில் மாற்றம் ஏற்படும். இன்னும் 3 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிநாடு சென்று பொருளீட்டும் யோகம் உண்டாகும். பாக்யஸ்தானமும், சுகஸ்தானமும் வலுவாக உள்ளதால் தந்தையை அனுசரித்து நடந்து கொள்வார்.

தேர்ச்சி பெறுவீர்கள்!

நான் பி.இ. படிக்கிறேன். தேர்வுகளில் நல்ல முறையில் வெற்றி பெறுவேனா?

என். கோபிசங்கர், பருப்புக்கோட்டை.

உங்கள் ஜாதகப்படி கல்வி ஸ்தானாதிபதி பூர்வபுண்ய புக்தி ஸ்தானாதிபதியுடன் லாபஸ்தானத்தில் அமர்ந்து புக்தி ஸ்தானத்தைப் பார்வை செய்வதால் படிப்பை நல்லபடியாக முடித்துவிடுவீர்கள். இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு உங்களுக்கு அனுகூலமான காலங்கள் பிறப்பதால் படிப்பில் தேர்ச்சி அடைந்து நல்ல உத்யோகத்தில் அமர்ந்து விடுவீர்கள். பிரதி வியாழக் கிழமைகளில் குரு தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வரவும்.

வெளிநாடு செல்லும் வாய்ப்பு!

எனது மகளுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? காளஹஸ்தி, திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம், கீழ்ப்பெரும்பள்ளம், ஆலங்குடி, பட்டீஸ்வரம், வைத்தீஸ்வரன் கோயில், திருமணஞ்சேரி, தென்குடித்திட்டை, திருவிடந்தை ஆகிய தலங்களுக்கு சென்று பரிகாரம் செய்துள்ளோம். வேறு ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவளுடைய உத்யோகத்தில் முன்னேற்றம் ஏற்படுமா?

என். விஜயராகவன், சென்னை-41.

உங்கள் மகளுக்குக் கடந்த ஆண்டு ஜூலை மாதத்திலிருந்தே அனுகூலமான தசாபுக்திகள் நடக்கத் தொடங்கியுள்ளதால் உடனடியாகத் திருமணம் கைகூடும். தற்சமயம் நடப்பது பாக்யாதிபதியின் தசையாக உள்ளதால் உத்யோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உள்ளது. மற்றபடி லக்னகேந்திரத்திற்கு ஏற்ற சமதோஷம் பார்த்து சேர்க்கவும். வேறு பரிகாரம் தேவையில்லை.

பாதிப்புகள் ஏற்படாது!

என் இளைய மகன் பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ளான். ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிகிறான். அவனுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? உத்யோகத்தில் முன்னேற்றம் ஏற்படுமா?

எஸ்.சுசீலா, தஞ்சை-3.

உங்கள் மகனுக்கு சர்ப்பதோஷமுள்ள பெண்ணாகப் பார்க்க வேண்டும். அவருக்கு இந்த ஆண்டு மே மாதத்திற்குள் படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். உங்கள் மகன் தற்சமயம் வேலை பார்க்கும் கல்லூரியிலேயே நல்ல முன்னேற்றம் உண்டாகும். தற்சமயம் ஏழரை சனியில் ஜென்ம சனி நடப்பதால் நவம்பர் மாதம் வரை சிறிது குழப்பமான சூழ்நிலை நிலவும். அதேசமயம் தற்போது நடப்பது அனுகூலமான தசாபுக்தியாக இருப்பதால் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. உங்கள் மகன் தனியார் துறையிலேயே நல்லபடியாக முன்னேறுவார்.

போட்டித் தேர்வுகளை எழுதவும்!

எனது மகன் தனியார் கல்லூரியில் பணிபுரிகிறார். அவருக்கு எப்போது நிரந்தர வேலை அமையும்? அரசு உத்யோகம் கிடைக்க வாய்ப்பு உண்டா? மேலும் எனது மகனுக்குத் திருமணம் எப்போது நடக்கும்?

ரவிச்சந்திரன், பவானி.

உங்கள் மகனுக்கு இந்த ஆண்டுக்குள் திருமணம் கைகூடும். இக்காலகட்டத்திலேயே  அரசு உத்யோகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அவரை போட்டித் தேர்வுகளை எழுதச் சொல்லவும். பிரதி வெள்ளிக் கிழமைகளில் பெருமாளையும், தாயாரையும் வழிபட்டு வரவும்.

மன நோய் தீரும்!

எனது மகனுக்கு 31 வயது ஆகிறது. அவன் சிறு வயதிலிருந்தே மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ளான். எப்போது அவன் பூரண குணமடைவான்?

கே.என்.சுந்தர், மதுரை-12.

உங்கள் மகனின் ஜாதகத்தில் லக்னாதிபதி ஓரளவு சுப பலத்துடன் இருப்பதாலும், தற்சமயம் நடப்பது லாப ஸ்தானத்தில் லாபாதிபதி மற்றும் பாக்யாதிபதியுடன் இணைந்த பூர்வபுண்ய ஸ்தானாதிபதியின் தசையாக இருப்பதாலும் ஜூலை, 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு மன நோய் முழுவதும் குணமடைந்துவிடும். அவர் ஜாதகத்தில் பித்ரு தோஷம் உள்ளதால் உத்திராயண புண்ணிய காலத்தில் (தை மாதம் முதல் ஆனி மாதம் வரை) இராமேஸ்வரத்தில் ஒரு சனிக்கிழமையன்று திலஹோமம் செய்துவிட்டு வரவும்.

நிரந்தர உத்யோகம் அமையும்!

எனது தம்பி டிப்ளமா கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்துள்ளார். அவருக்கு எப்போது நிரந்தர வேலை கிடைக்கும்? மேலும் திருமணம் எப்போது நடக்கும்?

ஆர். நளினி, சென்னை-83.

உங்கள் தம்பிக்குத் தற்சமயம் நடக்கும் லக்னாதிபதியின் தசையில் களத்ர ஸ்தானாதிபதியின் புக்தி 02.02.2012 வரை நடக்கும். இக்காலத்திற்குள் திருமணம் கைகூடும். நிரந்தர உத்யோகமும் அமையும். மற்றபடி லக்னகேந்திரத்திற்கு ஏற்ற சமதோஷம் பார்த்து சேர்க்கவும்.

சமதோஷம் பார்க்கவும்!

எனது திருமணத்திற்காகக் கடந்த ஐந்து வருடங்களாக வரன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதுவரை அமையவில்லை. காளஹஸ்தி, திருப்பதி உள்ளிட்ட தலங்களில் வழிபட்டுள்ளோம். வேறு ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

எஸ். விஜயலட்சுமி, கோவை.

உங்கள் மகனுக்கு இந்த ஆண்டுக்குள் திருமணம் கைகூடும். லக்னகேந்திரத்திற்கு ஏற்ற சமதோஷம் பார்த்து சேர்க்கவும். வேறு பரிகாரங்கள் தேவையில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT