சங்கரர் வழிபட்ட சங்கரர்!
மகரிஷிகளால் நிர்மாணிக்கப்பட்ட மிகப் புராதனமான திருத்தலங்கள் தமிழகத்தில் ஏராளம் உண்டு. அவற்றில் ஒன்றுதான் ஆவணியாபுரத்தில் அருள்புரியும் சிம்மபுரீஸ்வரர் ஆலயம். தல வரலாறு: அதிரி முனிவர் - அனுசூயா தம்பதிக
மகரிஷிகளால் நிர்மாணிக்கப்பட்ட மிகப் புராதனமான திருத்தலங்கள் தமிழகத்தில் ஏராளம் உண்டு. அவற்றில் ஒன்றுதான் ஆவணியாபுரத்தில் அருள்புரியும் சிம்மபுரீஸ்வரர் ஆலயம்.
தல வரலாறு:
அதிரி முனிவர் - அனுசூயா தம்பதிகளின் புத்திரர் "ஏரண்டர்'. இவர் காகபுஜண்டரின் சீடர். கொட்டையூர் என்னும் திருத்தலத்தில் "ஆமணுக்கு' என்று சொல்லப்படும் செடியின் கீழ் தவம் இருந்தவர். அதனால் ஏரண்ட முனிவர் என்று அழைக்கப்பட்டார். ("ஏரண்டம்' என்று ஆமணக்கு செடியைக் குறிப்பிடுவர்). இம்மாமுனிவர் சிவனருளை வேண்டித் தவம் செய்வதற்கு சரியான இடம் தேடினார். அதற்காக பல்வேறு இடங்களில் அலைந்து திரிந்தார். ஓரிடத்தில் சிம்மம் ஒன்று அமர்ந்திருப்பது போன்ற தோற்றத்துடன் கூடிய ஒரு மலையையும் அதனையொட்டிய வனப்பகுதியையும் கண்டார். அங்கேயே கடுந்தவத்தை மேற்கொண்டார். அந்த தவச்சீலருக்கு சிவபெருமான் காட்சியளித்தார். அவரின் வேண்டுகோளுக்கு இணங்க சுயம்பு மூர்த்தியாக அவ்விடத்தில் குடிகொண்டார். அந்த இடமே முற்காலத்தில் "சிம்மபுரம்' என்று அழைக்கப்பட்டு தற்போது ஆவணியாபுரம் என்று அழைக்கப்படுகிறது.
ஏரண்ட மாமுனிவரால் ஸ்தாபிக்கப்பட்டு "சிம்மபுரீஸ்வரர்' என்ற திருநாமத்துடன் இறைவன் அமர்ந்த ஆலயம் காலப்போக்கில் மண்ணோடு மண்ணாகிப் போனது. பிற்காலத்தில் ஆதிசங்கர பகவத் பாதர் பாரத நாடு முழுவதும் புண்ணிய யாத்திரை மேற்கொண்டு இப்பகுதிக்கு வந்தார். அந்த தருணத்தில் அவருடைய கனவில் தோன்றிய ஏரண்ட முனிவர், தான் சிம்மபுரீஸ்வரரை பிரதிஷ்டை செய்த விவரத்தை உணர்த்தினாராம். சங்கரரும் புதையுண்ட அந்த லிங்கத்தை கண்டெடுத்து தனது திருக்கரங்களாலேயே திரும்பவும் பிரதிஷ்டை செய்து மக்களுடைய வழிபாட்டிற்கு உறுதுணையாக இருந்ததாக செவி வழிச் செய்தி கூறுகிறது.
ஆதிசங்கரர் பூஜித்து வழிபட்ட அந்த ஈசனுக்கு அவணீஸ்வரர் (அவனீஸ்வரர் என்றும் சொல்லப்படுவது உண்டு) என்ற திருநாமம் சூட்டி, ஆலயம் எழுப்பி மன்னர்களும், மக்களும் வழிபாட்டினைத் தொடர்ந்தனர்.
கல்வெட்டுச் சான்றுகள்:
கோயிலின் அருகே உள்ள பலகைக் கல் ஒன்றில் காணப்படும் கல்வெட்டில், ""கோவிசைய விக்கிரம பருமற்கு'' எனத் தொடங்கும் வரிகள் காணப்படுகிறது. இதன்மூலம் பல்லவ மன்னர் காலத்தில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று அறியப்படுகிறது. பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மனுக்கு ""அவணி நாராயணன்'' என்ற சிறப்புப் பெயர் உண்டு. தெள்ளாறு போரில் வெற்றி பெற்றவன். அவனால் இவ்வூர் ""அவணி நாராயண சதுர்வேதிமங்கலம்'' என உருவாக்கப்பட்டதாகக் கருத முடிகிறது. கல்வெட்டுகளிலும் ""நாராயண மங்கலம்'' என்றே இவ்வூர் குறிப்பிடப்படுகிறது. கோயிலுக்கு அளிக்கப்பட்ட நிலக் கொடைகளைப் பற்றிய விவரங்களும் கல்வெட்டில் காணப்படுகின்றன. 9ஆம் நூற்றாண்டில் இக்கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து.
அற்புதத் திருமேனி:
கருவறையில் எழுந்தருளியிருக்கும் சிவலிங்கம் பெரிய ஆவுடையாருடன் அழகிய வடிவத்துடன் உள்ளது. ஆவுடையார் மேல் அமைந்த பாணம் மரகதத் திருமேனி என்பது மேலும் சிறப்பானதாகும். தெற்கு நோக்கி அம்பாள் சந்நிதி உள்ளது. "மங்களாம்பிகை' என்ற பெயருடன் அருள்புரியும் அம்பாள் வடிவம் மிகவும் அழகானது. நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் அம்மன் தலையில் ஜடாமகுடம் சூடியிருக்கிறாள். புன்னகை தவழும் அதரங்கள். மேலிரு கரங்களில் அங்குசம்- பாசம், கீழிரு கரங்களில் அபய - வரத முத்திரை தாங்கியிருக்கிறாள். கருணையுடன் நோக்கும் அழகிய கண்கள். இறைவன் சந்நிதிக்கு முன்பு அழகிய நந்தி வடிவம். மேலும் முன் மண்டபத்தில் காணப்படும் ஆறுமுகன் மிக அழகாக 12 கரங்களுடன் காட்சி தருகிறார்.
தலச்சிறப்பு:
சிம்மராசிக்காரர்கள் வணங்கி வளம் பெற வேண்டிய தலங்களின் வரிசையில் "சிம்மபுரம்' என்று பூஜிக்கப்படும் ஆவணியாபுரம் தலம் மிகவும் சக்தி வாய்ந்தது என்று மிகப் பழைய ஓலைச் சுவடிகளில் குறிப்புகள் காணப்படுகின்றன.
திருப்பணி:
இவ்வாலயம் காலப்போக்கில் சிதிலமடைந்தது. பல நூற்றாண்டுகளாக திருப்பணியோ, குடமுழுக்கோ நடக்கவில்லை. இந்நிலையில் கிராமப் பொதுமக்களும், பக்தர்களும் இணைந்து திருப்பணிக்குழு ஒன்றை அமைத்தனர். காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் ஆசியுடனும், வழி காட்டுதலுடனும் திருப்பணி வேலைகளை நிறைவேற்றி ஆலயத்தை புதுப்பொலிவுடன் திகழ வைத்துள்ளனர். ஜீர்ணோத்தாரண அஷ்ட பந்தன மகாகும்பாபிஷேகம் வருகிற 13ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணி அளவில் நடைபெறுகிறது. பூர்வாங்க பூஜை ஹோமங்கள் 10ஆம் தேதி ஆரம்பமாகிறது.
திருப்பணி குறித்த தகவல் அறிய விரும்புவோர் 9751523688 அல்லது 9443293924 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.