கார்த்திகையில் கங்கைக் குளியல்!
தனது பக்தியினாலும், கருணையினாலும், தூய உள்ளத்தாலும் கங்கையை தனது வீட்டிற்கே கொண்டு வந்தார் ஒருவர். ஐயாவாள் என்று போற்றப்படும் ஸ்ரீதரவேங்கடேசார்யர்தான் அந்தப் போற்றுதலுக்குரிய மகான். பாகவதர்களால் பஜனா
தனது பக்தியினாலும், கருணையினாலும், தூய உள்ளத்தாலும் கங்கையை தனது வீட்டிற்கே கொண்டு வந்தார் ஒருவர். ஐயாவாள் என்று போற்றப்படும் ஸ்ரீதரவேங்கடேசார்யர்தான் அந்தப் போற்றுதலுக்குரிய மகான்.
பாகவதர்களால் பஜனாரம்பத்தில் பாடப்படும் குருமார்களில் ஒருவர் ஸ்ரீஐயாவாள். சிறந்த சிவபக்தர். தினந்தோறும் லட்சம் சிவநாம ஜெபம் செய்யும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். சிவ-விஷ்ணு பேதங்களுக்கு அப்பாற்பட்ட ஐயாவாள் பரம ஞானி. தனது குடும்பத்தினருடன் காவிரிக் கரையில் உள்ள பல தலங்களை தரிசித்தார். நிரந்தரமாக வாசம் செய்வதற்கு மகான்கள் வாழ்ந்த திருவிசலூர் கிராமத்தைத் தேர்ந்தெடுத்தார். தன் வாழ்நாளில் காவிரியின் மறுகரையில் உள்ள "மத்யார்ஜுன úக்ஷத்திரம்' என்று சொல்லப்படும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமியை தினமும் தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இறுதியில் அவருடனே ஐக்கியமானார்.
காஞ்சி காமகோடி பீடாதிபதி 59வது பட்டம் ஸ்ரீபோதேந்திர சுவாமிகளும், ஸ்ரீ சதாசிவ பிரமேந்திரரும் ஸ்ரீ ஐயாவாளுடன் இணைந்து நாம சங்கீர்த்தனத்தின் பெருமையை தமிழகமெங்கும் பரப்பினார்கள். பல கிரந்தங்களையும், நூல்களையும் ஸ்ரீதர ஐயாவாள் அருளியுள்ளார்.
ஒரு சமயம் ஐயாவாள் தனது தந்தையின் திவசத்தன்று பசியால் வாடும் தாழ்த்தப்பட்ட ஒருவருக்கு அன்னமளித்தார். எனவே ஊர்க்காரர்கள் அவரை ஜாதிக்கட்டுமானம் செய்தனர். அதற்குப் பிராயச்சித்தமாகக் காசிக்கு சென்று கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை விதித்தனர். ஊர்க்காரர்கள் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அடுத்த வருட திவச நாளன்று பரமேஸ்வரனை தியானித்து கங்கையைத் துதித்து, கங்காஷ்டகம் என்னும் ஸ்லோகத்தை ஐயாவாள் பாடினார். கங்கை அவரது வீட்டுக் கிணற்றிலிருந்து பிரவாகம் எடுத்துப் பொங்கி திருவிசலூர் அக்ரஹாரத் தெரு முழுவதும் ஓடியது. அதில் காசியில், கங்கையில் போடப்பட்ட மங்கல திரவியங்கள் காணப்பட்டன. அனைவரும் மகானின் சக்தியை உணர்ந்து கங்காஸ்நானம் செய்து புண்ணியம் பெற்றனர். பிறகு ஊர்க்காரர்கள் வேண்டுகோளுக்கு இணங்க பெரும் வெள்ள அபாயத்தைத் தடுப்பதற்காக "கிணற்றிலேயே கங்காதேவி அடங்க வேண்டும்' என்று மனமுருகி வேண்டினார் ஐயாவாள். நீர்ப்பெருக்கு படிப்படியாகக் குறைந்தது. இச்சம்பவத்திற்குப் பின் கங்கா தேவி அக்கிணற்றில் நிரந்தரமாகக் குடியிருப்பதாக ஐதீகம்.
ஐயாவாள் கங்கையை தன் வீட்டுக் கிணற்றில் வரவழைத்தது ஒரு கார்த்திகை, அமாவாசை தினம். இன்றளவும் திருவிசலூரில் இந்த நிகழ்ச்சி "கங்காவதரண மகோத்ஸவம்' என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் இவ்வாண்டு கடந்த நவம்பர் 15ஆம் தேதி தொடங்கி நவம்பர் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இறுதி நாளான அமாவாசை தினத்தில், காலை 6 மணி முதல் இரவு 6 மணி வரை பொதுமக்கள் கங்கா ஸ்நானம் செய்து புண்ணியம் பெறலாம். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீஸ்ரீதர ஐயாவாள் சாரிடபிள் டிரஸ்ட் ஏற்பாடு செய்துள்ளது. கங்கைக்கு சென்று நீராட இயலாதவர்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பு.
கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் சூரியனார் கோயில் செல்லும் வழியில் உள்ளது திருவிசலூர். மேலும் விவரங்களுக்கு: 0435-2461616 மற்றும் 09444056727.