முகப்பு
வெள்ளிமணி

லட்சியவாதிகள்!

குழந்தைகள் இயற்கையில் பொய் பேசாது உண்மையே பேசுவார்கள். வளரும் சூழ்நிலைகளால் ஒரு சில குழந்தைகள் தீய குணங்களைக் கற்று சீரழிவதை நாம் காணலாம். குழந்தைகள் தவறு செய்தால் அவர்களை தடுத்து திருத்த வேண்டியது பெ

Updated On : 2 ஜனவரி, 2024 at 4:15 PM
பகிர்:

குழந்தைகள் இயற்கையில் பொய் பேசாது உண்மையே பேசுவார்கள். வளரும் சூழ்நிலைகளால் ஒரு சில குழந்தைகள் தீய குணங்களைக் கற்று சீரழிவதை நாம் காணலாம். குழந்தைகள் தவறு செய்தால் அவர்களை தடுத்து திருத்த வேண்டியது பெற்றோரின் கடமை. குழந்தைகளைக் கண்டு கொள்ளாது விட்டுவிட்டால், பின்னாளில் வருந்த நேரிடும்.

 ""தாயின் பாதத்தின் கீழ்தான் சுவர்க்கம் இருக்கிறது'' என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

 உலகில் பிறக்கும் குழந்தைகள் அனைவரையும் ஓர் இலட்சிய பாதையை அடைவதற்காகவே இறைவன் படைத்துள்ளான் என்பது உண்மையாகும்.

 நல்ல பழக்க வழக்கங்கள், அறிவுரைகள், எடுத்துக்காட்டுகள் போன்ற பல அரிய கருத்துக்களை தனது தாயாரிடம் அறிந்த குழந்தைகள் அதை தங்களது வாழ்க்கையில் பிரதிபலித்துக் காட்டி, ஓர் லட்சிய வாதிகளாகவே மக்களால் போற்றப்படுவார்கள் என பெரியோர்கள் கூறுகின்றனர். அவர்களைப் பற்றிய அரிய தகவல்களைக் காண்போம்.

 இறை நேசச் செல்வர் முஹையத்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள், சின்னஞ்சிறிய வயதில் தாயாரின் அறிவுரைப்படி உண்மையை உரைத்ததால், கொள்ளையர் கூட்டத்தினர் நேர் வழிப் பெற்றனர். கொள்ளைக் கூட்டத்தின் தலைவர் அஹ்மது அலீ, பின்னர் சிறந்த ஆத்ம ஞானியாக ஆனார் என இஸ்லாமிய சரித்திரம் கூறுகிறது.

 சிறுவர் ஜீலானியின் தாயார் கூறிய அறிவுரை இதுதான்.

 ""நீர் எங்கும் எந்தச் சந்தர்ப்பத்திலும், உண்மையைத்தான் உரைக்க வேண்டும். இது உம்மை ஈன்ற அன்னையின் ஆணை''.

 சிறுவர் இமாம் ஜாஃபர் சாதிக் (ரஹ்) அவர்களது தாயார், ஒரு நாள் பெரிய விறகுடன் சிறிய சுள்ளியையும் சேர்த்து அடுப்பிலிட்டு நெருப்பை மூட்டிக்கொண்டிருந்ததைக் கண்ட சிறுவரது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது. காரணம்,

 ""இறைவன் மறுமையில் பாவம் செய்த பெரியவர்களுடன், பாவம் செய்த சிறுவர்களையும் இப்படித்தானே நெருப்பிலிட்டு வாட்டுவான் என்கிற பயம் எனது உள்ளத்தை நெகிழச் செய்ததால் அழுதேன்'' எனத் தாயாரிடம் கூறினார் சிறுவர் இமாம் ஜாஃபர் சாதிக் (ரஹ்) அவர்கள்.

 ""என் செல்வமே! அழாதே... அன்பும் அருளும் கொண்ட அல்லாஹ் உன்னை சுவனம் புகச் செய்வான்'' என ஆறுதல் கூறினார் தாயார்.

 அந்தத் தாய் தன் மகனுக்கு, "இறையச்சம்' என்ற அமுதூட்டி வளர்த்த காரணத்தால்தான், சின்னஞ்சிறிய குழந்தைப் பருவத்திலேயே அவர்களுக்கு "இறையச்சம்' என்ற உணர்வு ஏற்பட்டது என்பதை அறிந்து கொள்ளலாம்.

 இந்த இளம் வயதில் ஒன்றை மற்றொன்றோடு ஒப்பிட்டு சிந்தித்துப் பார்க்கும் "இறையச்சம்' கொண்ட இந்த இலட்சிய சிறுவர்தான் இமாம் ஜாஃபர் சாதிக் (ரஹ்) என்ற மிகப் பெரிய இறை ஞானியாகத் திகழ்ந்தார்கள் என்பதை இஸ்லாமிய சரித்திரம் படித்தவர்கள் நன்கு அறிவர்.

 இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு லட்சியத்திற்காக படைக்கப்பட்டு இந்த பூமியை வந்தடைகின்றன. இலக்கு மாறாது லட்சியத்தை அடையும் குழந்தைகள் அருந்தொண்டாற்றி உலகு உய்ய வழியும் காட்டி வரலாற்றில் தடம் பதிக்கின்றனர். உலகோர் உள்ளத்தில் இடம்பிடிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.