ராமநாதபுரம் மாவட்டம், திருஉத்தரகோசமங்கையில் உள்ளது அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோயில். மங்களேசுவரி சமேத மங்களநாத சுவாமி இக்கோயிலில் அருள்புரிகிறார்.
மீனவர் மகள்!
சிவபெருமான் அம்பிகையை மீனவர் மகளாகப் பிறக்கச் செய்து, பின் அவருக்கு விமோசனம் கொடுத்து, திருமணம் செய்து, வேதாகம ரகசியத்தை உபதேசம் செய்த இடம் திரு உத்தரகோசமங்கை. "உத்தரம்' என்றால் உபதேசம் என்றும், "கோசம்' என்றால் ரகசியம் என்றும் பொருள். "மங்கை' என்றால் பார்வதி. உத்தரம் - கோசம்- மங்கை- இவை மூன்றும் இணைந்து திருஎன்ற அடைமொழியுடன் திருஉத்தரகோசமங்கை என்ற பெயர் ஏற்பட்டது.
திருப்பொன்னூஞ்சல்!
ஆதி சிதம்பரம், பூலோக கைலாயம், சிவபுரம், தட்சிண கைலாயம், பொன்னம்பலம், சிற்றம்பலம் என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது இந்தத் தலம். வேதவியாசர், மிருகண்டு மகரிஷி, மயன், பாணாசுரன், மண்டோதரி, பதஞ்சலி, வியாக்ரபாதர், காரைக்கால் அம்மையார் போன்றோர் இங்குள்ள இறைவனை வழிபட்டுள்ளனர். பள்ளியறை பூஜையின் போது பாடப்படும் "திருப்பொன்னூஞ்சல்' பாடலை மாணிக்கவாசகர் இந்தத் தலத்தில்தான் அருளினார். அருணகிரிநாதரும் இங்குள்ள இறைவனைப் போற்றிப் பல பாடல்கள் பாடியிருக்கிறார்.
சிவ பூஜைக்கு தாழம்பூ!
சிவபெருமானின் திருவடியை பிரம்மா பார்த்ததாக தாழம்பூ பொய் உரைத்ததால் சிவன் அதனை தனது பூஜையிலிருந்து ஒதுக்கி வைத்தார். எனவே சிவன் மட்டுமல்லாமல் எந்த இறைவனுக்கும் நடத்தப்படுகிற பூஜையில் தாழம்பூ சேர்ப்பதில்லை.
ஆனால் இக்கோயிலில் மட்டும் சிவபெருமானுக்கு தாழம்பூ படைத்து வணங்கும் வழக்கம் இருந்து வருகிறது. தவறை உணர்ந்துகொண்ட பிரம்மா இக்கோயிலில் ஒரு தீர்த்தம் உண்டாக்கினார். அதை பிரம்ம தீர்த்தம் என்கிறார்கள். அதேபோல் தாழம்பூ தவமிருந்து இறைவனிடம் மன்னிப்பு கேட்டது. இருவருக்கும் காட்சியளித்த இறைவன் இத்தலத்தில் தாழம்பூவை பூஜைக்குப் பயன்படுத்துவதற்கு உறுதியளித்தார். பிரம்ம தீர்த்தத்துக்கு அருகில் உள்ள தெரு "தாழம்பூ தெரு' என்று அழைக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
நடராஜர்!
ஒவ்வோர் ஆண்டும் சிவன் கோயில்களில் ஐப்பசி மாத பௌர்ணமியன்று அன்னாபிஷேகம் செய்து வழிபடுவார்கள். ஆனால் இக்கோயிலில் உள்ள மரகத லிங்கத்திற்கும், ஸ்படிக லிங்கத்துக்கும் தினசரி அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
இந்தக் கோயில் வளாகத்திற்குள்ளே நடராஜருக்கென்று தனி சந்நிதி உள்ளது. நவரத்தினங்களில் ஒன்றான பச்சை மரகதக்கல்லால் ஆன நடராஜர் பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.
மார்கழி மாதம், திருவாதிரைக்கு முதல் நாள் மட்டும் நடராஜருக்கு அபிஷேகம் நடக்கிறது. நடராஜருக்கு தினசரி அபிஷேகம் இல்லாததால் அவரது பிரதிநிதிகளாக இவ்விரு லிங்கங்களுக்கும் அபிஷேகம் செய்யப்படும் நடைமுறை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஆருத்ரா தரிசனத்தன்று பச்சை மரகதக்கல் நடராஜருக்கு அபிஷேகம் நடப்பதால் அன்று ஒரு நாள் மட்டும் இவ்விரு லிங்கங்களுக்கும் அபிஷேகம் செய்யப்படுவதில்லை.
பச்சை மரகதக்கல் மிகவும் மென்மையானது. ஒலி, ஒளி அதிர்வுகளைத் தாங்கும் சக்தி இல்லாதது. எனவே இந்தச் சிலையை சந்தனக் கலவையைப் பூசி பாதுகாத்து வருகின்றனர். திருவாதிரைக்கு முதல் நாள் மட்டும் பக்தர்களின் தரிசனத்திற்காக சந்தனப் பூச்சு கலைக்கப்படுகிறது. அவ்வகையில் வருகிற 7}ம் தேதி, காலை 9 மணிக்கு சந்தனப் பூச்சு கலையும் நிகழ்ச்சிக்குப் பின்னர் அன்று முழுவதும் பக்தர்களுக்கு நடராஜர் தரிசனம் தருவார். 8ஆம் தேதி, ஞாயிற்றுக் கிழமை, அதிகாலை 2 மணிக்கு நடராஜருக்கு 36 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. பின்னர் அதிகாலை 4 மணிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து சூரிய உதயத்துக்கு முன்பாக விசேஷ தீபாராதனைகளும் நடைபெறுகின்றன.
அமைவிடம்:
ராமநாதபுரத்திலிருந்து மதுரை செல்லும் சாலையில் உள்ள திருஉத்தரகோசமங்கை விலக்குச்சாலை வழியாகச் சென்றால் இந்தத் திருக்கோயிலை அடையலாம்.
ராமநாதபுரத்தில் இருந்து 17 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
நடை திறந்திருக்கும் நேரம்: அதிகாலை 6 மணி முதல் மதியம் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை.
மேலும் விவரங்களுக்கு: 94431 31215.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.