வெள்ளிமணி

தழலாய் நின்றான்!

காவிரி ஆறு பாய்ந்து வளப்படுத்தும் சோழ நாட்டில் துன்பம் போக்கும் திருப்பறியலூர் திருக்கோயில் மக்களால் போற்றப்படுகிறது.  மயிலாடுதுறையிலிருந்து - திருக்கடையூர் செல்லும் சாலையில் செம்பொனார் கோயிலிலிருந்து

கி.ஸ்ரீதரன்

காவிரி ஆறு பாய்ந்து வளப்படுத்தும் சோழ நாட்டில் துன்பம் போக்கும் திருப்பறியலூர் திருக்கோயில் மக்களால் போற்றப்படுகிறது.

 மயிலாடுதுறையிலிருந்து - திருக்கடையூர் செல்லும் சாலையில் செம்பொனார் கோயிலிலிருந்து 2 கி.மீ. தொலைவில் பசுமை சூழ்ந்த இடத்தில் திருப்பறியலூர் திருத்தலம் அமைந்துள்ளது. இத்தலத்தை "பரசலூர்' என்றும், "வீரட்டேசுவரர் திருக்கோயில்' என்றும் மக்கள் அழைக்கிறார்கள்.

 அட்டவீரட்டத் தலங்கள்:

 சிவபெருமான் தீமைகளை அழித்த செயல்களையும், அவரின் கருணையையும் எடுத்துக் கூறும் தலங்கள் எட்டு எனக் கூறுவர். அவை கண்டியூர், திருக்கோவலூர்,திருஅதிகை, திருவிற்குடி, வழுவூர், குறுக்கை, திருக்கடவூர், திருப்பறியலூர் ஆகியவை. இத்தலங்கள் "அட்டவீரட்டத் தலங்கள்' எனப்படும். இவற்றில் திருக்கடவூர், குறுக்கை, திருப்பறியலூர் ஆகிய மூன்று திருக்கோயில்கள் தருமை ஆதீனத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன. அவ்வகையில் திருப்பறியலூர் திருக்கோயில், திருப்பணி செய்யப்பட்டு, கடந்த ஆண்டு குடமுழுக்கு நடைபெற்று புதுப்பொலிவுடன் திகழ்கிறது.

 தட்சபுரம்:

 தட்சன் யாகம் செய்த தலம் என்பதால் "தட்சபுரம்' என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது. சிவபெருமானிடம் அளவற்ற வரங்களைப் பெற்ற தட்சன் செய்நன்றி மறந்து, இறைவனைப் புறக்கணித்து வேள்வி நடத்தினான். உமாதேவி தனது தந்தையான தட்சனுக்கு அறிவுரை கூறியும் அவன் ஏற்கவில்லை. வேள்வியைத் தொடர்ந்தான். தட்சனையும், வேள்வியையும் அழிக்க இறைவன் வீரபத்திரரை அனுப்பினார். வீர பத்திரர் அவனது தலையைக் கொய்து, வேள்வித் தீயில் இட்டார். தட்சன் மனைவி வேதவல்லியின் வேண்டுகோளுக்கு இணங்க ஆட்டுத் தலையினைப் பொருத்தி, மீண்டும் தட்சனை உயிர்ப்பித்தார் இறைவன்.

 இறைவனது கருணையையும், வீரத்தையும் எடுத்துக்கூறும் தலமாக திருப்பறியலூர் விளங்குகிறது.

 தட்சபுரீசுவரர்:

 இங்கு கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள இறைவன் வீரட்டேசுவரர், தட்சபுரீசுவரர் எனவும், இறைவி இளங்கொம்பனையாள் எனவும் அழைக்கப்படுகின்றனர். ஞானசம்பந்தப் பெருமான் இத்தலத்தைப் போற்றிப் பாடியுள்ளார். ""தழலாய் நின்றான் இளம் கொம்பனாளோடு இணைந்தும் பிணைந்தும் விளங்கும் திருப்பறியில் வீரட்டத்தானே'' எனப் போற்றுகின்றார்.

 ஆலய அமைப்பு:

 மேற்கு நோக்கிய திருக்கோயில். வாயிலில் ஐந்து நிலை கோபுரம் அழகாகக் காட்சி தருகிறது. கோபுர வாயில் அருகே உத்தரவேதி தீர்த்தம் உள்ளது. இத்தலத்தின் தல விருட்சமாக பாரிஜாதம்(பவழமல்லிகை) விளங்குகிறது. மகாமண்டபத்தில் அம்பிகை சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது.

 திருக்கோயிலில் இரண்டு திருச்சுற்றுகள் உள்ளன. முதல் திருச்சுற்றில் விநாயகர், முருகன், மகாலட்சுமி, பைரவர், தல விநாயகர், நால்வர் சந்நிதிகளைக் கண்டு வழிபடலாம். கருவறையின் தேவகோட்டங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி கிழக்கில் லிங்கோத்பவர், வடக்கில் பிரம்மா, துர்க்கை ஆகிய இறை வடிவங்களை தரிசிக்கலாம். தட்சன் ஆட்டுத் தலையுடன் இறைவனை வழிபடும் தல வரலாறு தெற்குச் சுவரில் புடைப்புச் சிற்பமாகக் காணப்படுகிறது. மேலும் கருவறையின் அதிட்டானப் பகுதியில் முனிவர் வடிவமும், அரசன் ஒருவனும் நின்ற நிலையில் வணங்கும் கோலத்தில் தொடர்ச்சியாக சிறு சிறு சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு.

 கருவறையில் இறைவன் லிங்க வடிவிலே காட்சி தருகிறார். இறைவன் சந்நிதிக்கு முன்பாக தனி சந்நிதியில் தட்ச சம்கார வீரபத்திர மூர்த்தியின் திருமேனியை வழிபடலாம். சூலம், மழு, கத்தி, கேடயம், கபாலம், மணி ஆகிய ஆயுதங்களைத் தாங்கிய ஆறு கரங்களுடன் காட்சி தருகிறார். இம்மூர்த்தியின் திருவடியில் தட்சன் வீழ்ந்து கிடப்பது போல காட்டப்பட்டுள்ளது. "வீரம்' என்பதற்கு அழகு என்றும், "பத்திரம்' என்பதற்கு காப்பவன் என்றும் பொருள். நம்மை, அனைத்து இன்னல்கள், துன்பங்களிலிருந்து காத்தருள்வான் இறைவன் என்பதை இங்கே வழிபட்டு உணரலாம். இத்திருக்கோயிலில் பைரவருக்கும் சிறப்பான வழிபாடுகள் நடைபெறுகின்றன.

 கல்வெட்டுகள்:

 இக்கோயிலில் மூன்று கல்வெட்டுகள் 1925ஆம் ஆண்டு படியெடுக்கப்பட்டுள்ளன. சுந்தர பாண்டியன் கல்வெட்டில் ஜெயங்கொண்டசோழ வளநாட்டு வீழை நாட்டு இராஜநாராயண சதுர்வேதி மங்கலமான "பறியலூர்' என்றும், இறைவன் "வீரட்டானம் உடையார்' என்றும் குறிக்கப்பட்டுள்ளது. விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயர் கல்வெட்டும் இங்கே காணப்படுகிறது.

 திருவாவடுதுறை ஆதீனம் குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ வேலப்ப தேசிக சுவாமிகள் அருளிய திருப்பறியலூர் புராணம் இத்தலத்திற்கு உரியது.

 ஞானசம்பந்தப் பெருமான் தமது திருப்பதிகங்களில், திருப்பறியலூர் இறைவன் பிணிதீர்க்கும் மருந்தாவான், உயிர் காக்கும் அமுதமாவான், குளிர்ந்த சடை முடியை உடையவன் என்றெல்லாம் போற்றுகின்றார்.

 திருப்பறியில் வீரட்டத்தானைப் போற்றுபவர்களுக்கு துன்பம் நீங்கும் என்கிறார். நாமும் திருப்பறியலூர் சென்று வீரட்டானமுடையாரை வணங்கி நலம் பெறுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

பெர்லின் திரைப்பட விழாவில் அசாம் பெண் இயக்கிய படத்துக்கு விருது!

SCROLL FOR NEXT