மகிழடி சேவை உற்ஸவம்!
இறைவனுக்கு பூஜை செய்வதற்கு உகந்த பூக்களில் ஒன்று மகிழம்பூ. இந்தப் பூக்களைத் தரும் மரம் சில தலங்களில் ஆலய விருட்சமாக அமைந்துள்ளது. இலஞ்சி,கேசரம், வகுளம் ஆகிய பெயர்களும் மகிழம் பூவையே குறிக்கும். ""மடல்
இறைவனுக்கு பூஜை செய்வதற்கு உகந்த பூக்களில் ஒன்று மகிழம்பூ. இந்தப் பூக்களைத் தரும் மரம் சில தலங்களில் ஆலய விருட்சமாக அமைந்துள்ளது. இலஞ்சி,கேசரம், வகுளம் ஆகிய பெயர்களும் மகிழம் பூவையே குறிக்கும். ""மடல் பெரிது தாழை, மகிழ் இனிது கந்தம்'' என்பது ஒளவையார் கூற்று. அதாவது மிகச் சிறிய அளவில் உள்ள மகிழம் பூவை சிறியது என்ற காரணத்திற்காக ஒதுக்கக்கூடாது. அந்தப் பூ, நறுமணத்துடன் மனதிற்கு மகிழ்ச்சியையும் தரும் வல்லமை உள்ளது என்பது இதன் பொருள்.
இப்படிப்பட்ட மகிழ மரத்தின் கீழ்தான் சைவ சமயக் குரவர்களுள் ஒருவரான சுந்தரர், சங்கிலியார் என்னும் மங்கையை இறைவன் சாட்சியாகக் கரம் பிடித்தார். தலங்கள் தோறும் சிவபெருமானை வணங்கித் தொழுது பாடல்கள் இயற்றி அவன் அருளில் மூழ்கியவாறு திருவொற்றியூர் திருத்தலத்திற்கு வந்தார் சுந்தரர். மூவர் பாடல் பெற்ற திருத்தலம் இது. இதன் தல விருட்சம் மகிழமரம்.
இவ்வூரில் "ஈசனடியார் ஒருவரைத்தான் மணந்துகொள்வேன்' என்ற குறிக்கோளுடன் சிவ பக்தையாக வாழ்ந்து கொண்டிருந்தார் சங்கிலியார். அவரைக் கண்ட சுந்தரருக்கு கயிலையில் நடந்த சம்பவம் நினைவிற்கு வந்தது. ஆலால சுந்தரராக இருந்த இவருக்கு பார்வதிதேவியின் சேடியர்களான கமலினியார், அநிந்திதையார் மீது காதல் ஏற்பட்டது. இதன் காரணமாக இறைவன் ஆணைப்படி இப்பூலகில் அவதரித்தார் சுந்தரர். பரவையாராக அவதரித்த கமலினியை திருவாரூரில் மணந்தார். அநிந்திதையார், சங்கிலியார் எனப் பெயர் கொண்டு திருவொற்றியூரில் வாழ்ந்து வருவதை உணர்ந்தவர், தன் விருப்பத்தை சங்கிலியாரிடம் தெரிவித்தார்.
""திருவொற்றியூரை நீங்கிச் செல்லமாட்டேன் என்று தியாககேசர் முன் சத்தியம் செய்து கொடுத்தால் மணம் புரிந்துகொள்வேன்'' என்று சங்கிலியார் மொழிந்தார்.
இறைவனுக்கு முன் பொய்யான சத்தியம் செய்ய விரும்பாத சுந்தரர், தியாகராஜப் பெருமானைத் தொழுதார். தான் சத்தியம் செய்து கொடுக்கும் நேரத்தில் ஆலயத்தில் உள்ள மகிழமரத்தடியில் இருக்குமாறு வேண்டினார். ஆண்டவனும் அவ்வாறே அருளிச் செய்தான். ஆனால் திருவிளையாடல்கள் புரிந்து பக்தனை காத்தருளும் பரம்பொருள், சங்கிலியாரின் கனவிலும் தோன்றினார். மகிழ மரத்தடியில் சத்தியம் வாங்கிக் கொள்ளுமாறு உரைத்தார். சங்கிலியாரும் சுந்தரரை அவ்வண்ணமே கேட்க, இறைவனின் திருவிளையாடலை அறிந்த சுந்தரர் மகிழ மரத்தடியில் சத்தியம் செய்து சங்கிலியாரின் திருக்கரம் பற்றினார்.
இந்நிகழ்ச்சி "மகிழடி சேவை உற்ஸவம்' என்ற பெயரில் வருடந்தோறும் திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் நடைபெறுகிறது. அவ்வகையில் வருகிற மார்ச் 7ஆம் தேதி இரவு 9 மணி முதல் 10 மணி வரை மகிழடி சேவை உற்ஸவம் நடை
பெறும்.
மேலும் தகவலுக்கு 044-25733703.