வெள்ளிமணி

புத்திர பாக்கியம் கிடைக்கும்!

மயில் வாகனன்

அயோத்தியை ஆண்ட தசரத சக்ரவர்த்திக்கு நீண்ட நாட்களாக குழந்தைப் பேறு இல்லை. தனக்குப் பின்னர் ராஜ்ஜியத்தை ஆள்வதற்கு வாரிசு இல்லாததால் மிகவும் கவலையில் ஆழ்ந்தார் மன்னர். குழந்தைப் பேறுக்கு வழி சொல்லுமாறு தம் குலகுரு வசிஷ்டரிடம் அறிவுரை கேட்டார். அவரோ "புத்திரகாமேஷ்டி யாகம் செய்தால் புத்திரப் பேறு உண்டாகும்' என்று ஆலோசனை கூறினார்.

அதனை ஏற்ற தசரதச் சக்ரவர்த்தி யாகம் செய்ய தகுந்த இடத்தைக் கூறுமாறு வசிஷ்டரிடம் வேண்டினார். வசிஷ்டரும் ஓர் இடத்தைக் கூற, அங்கே சிவபெருமானை பிரதிஷ்டை செய்து, புத்திரகாமேஷ்டி யாகம் மேற்கொண்டார். அந்த யாகத்தின் பலனாக தசரதருக்கு நான்கு புத்திரர்கள் பிறந்தனர். அதன்பின்னர் தசரதர் இந்தத் தலத்தே ஆலயம் எழுப்பி, சிவபெருமானை வழிபட்டு, அவருக்கு புத்திரகாமேட்டீஸ்வர் என்ற திருநாமம் சூட்டினார் என்று தலபுராணம் கூறுகிறது.

ஒரு முறை ஜமதக்னி முனிவரின் கமண்டலத்தில் இருந்து கீழே சிதறிய நீர், ஆற்று நீர்போல் பெருக்கெடுத்து ஓடியது. அதுவே கமண்டல நதி ஆனது. இந்த நதியின் கரையில்தான் புத்திரகாமேட்டீஸ்வரரின் இந்தக் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் எதிரில் மட்டும், நதி வடக்கில் இருந்து கிழக்காகத் திரும்பி பின்னர் மீண்டும் திசை திரும்பி ஓடுகிறது. தற்போது மழைக்காலங்களில் மட்டுமே பெருக்கெடுத்து ஓடும் நதியாகிவிட்டது.

இந்தத் தலத்தில், மூலவர் புத்திர காமேட்டீஸ்வரர், உற்ஸவர் சோமாஸ்கந்தர், அம்பாளின் திருப்பெயர் பெரியநாயகி. இங்கே கருவறையில் படமெடுத்தாடும் ஒன்பது தலை நாகம் குடையாகப் பிடித்திருக்க அதன் அடியில் சிவபெருமான் லிங்க ரூபத்தில் திருக்காட்சி அளிக்கிறார். இங்கே பெருமானுக்கு பெüர்ணமிகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அப்போது சுவாமி புறப்பாடு கண்டருள்கிறார்.

அம்பாள் பெரியநாயகிக்கு தனி சந்நிதி உள்ளது. சந்நிதி தனி கொடிமரத்துடன் திகழ்கிறது. கோயிலுக்கு வெளிப்புறத்தில் தசரத மன்னருக்கு தனி சந்நிதி உள்ளது. இங்கே தசரதர், சக்ரவர்த்தி அலங்காரத்தில் இல்லாமல், யாகம் செய்யும் எளிய கோலத்தில் கைகளில் ருத்திராட்ச மாலை, கமண்டலம் ஆகியவற்றோடு முனிவர் போல் காட்சி தருகிறார். உற்ஸவ நாட்களில் இவருக்கும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.

குழந்தை பாக்கியம் பெற: திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தைப்பேறு இல்லாமல் வருத்தம் கொண்டவர்கள், இங்கே புத்திர காமேட்டீஸ்வரரை நம்பிக்கையுடன் வழிபட, விரைவில் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இங்கே தசரதச் சக்ரவர்த்தியே யாகம் செய்து புத்திர பாக்கியம் பெற்றார் என்பதால், இந்தத் தலத்தின் இறைவன் குழந்தை பாக்கியம் அருளும் ஈசனாகத் திகழ்கிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதற்கான சிறப்பு வழிபாடுகளை பக்தர்கள் மேற்கொள்கின்றனர். வீட்டில் மழலைச் சத்தம் கேட்க வேண்டும் என்ற மனம் நிறைந்த ஆசையுடனும் வேண்டுதலுடனும், ஏழு திங்கள் கிழமைகள் விரதம் இருக்கின்றனர். விரதம் மேற்கொள்ளும் ஆறு வாரங்களுக்கும் குழந்தைகளுக்கு அன்னம் அளித்து, விரதம் இருந்து பின்னர் தாங்கள் அன்னம் உண்டு வழிபாட்டை மேற்கொள்கின்றனர். பின்னர் ஏழாவது வார திங்கள் கிழமையில் புத்திர காமேட்டீஸ்வரருக்கு செவ்வரளிப் பூ சாற்றி, கோயிலில் உள்ள பவள மல்லி மாலை அணிவித்து, வெண்பொங்கல் நிவேதனம் செய்து வழிபடுகின்றனர்.

ஆனி மாத பெüர்ணமி தினத்தில் சிவபெருமானுக்கு 11 சிவாச்சாரியர்கள், புத்திர காமேஷ்டி யாகம் செய்கின்றனர். இதிலும் அன்பர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனைகளை மேற்கொள்ளுகின்றனர்.

ஜாதகத்தில் புத்திர பாக்கிய ஸ்தானமான 5ஆம் இடத்தில் ராகு, கேது, செவ்வாய், சனி, சூரியன் என இருந்து தோஷம் ஏற்பட்டால், அந்த தோஷத்தினைப் போக்க, கோயிலில் உள்ள வேம்பு, ஆலம் மரத்தின் அடியில் தங்கள் நட்சத்திர நாளில் நாகப் பிரதிஷ்டை செய்து வழிபடுகின்றனர். மேலும் புத்திர காமேஷ்டி யாகம் செய்தும் வழிபட்டு வேண்டியன நிறைவேறப் பெறுகிறார்கள். இவற்றுக்கென்று சிறப்புக் கட்டணங்களும் கோயிலில் உண்டு.

இங்கு நதிக்கரையில் வடக்கு நோக்கி விநாயகப் பெருமானும், அவருக்கு எதிரே அனுமனும் சந்நிதி கொண்டுள்ளனர். தாங்கள் செய்யத் தொடங்கும் புதிய செயலின் துவக்கத்தில், விநாயகப் பெருமானை வணங்கிச் சென்று, அச்செயல் சிறப்பாக முடிந்ததும் அனுமனை வழிபட்டுச் செல்கின்றனர். இங்கே ஆஞ்சநேயர் கரங்களில் சங்கு, சக்கரம் உள்ளது சிறப்பு.

கோயில் பிராகாரத்தில் அறுபத்து மூவர் சந்நிதி, ஸ்வர்ணவிநாயகர், அம்பிகையருடன் பஞ்சலிங்கம், அஷ்டோத்ரலிங்கம், காளி, வீரபத்திரர், வள்ளி தெய்வானையுடன் அறுமுகப் பெருமான், பாமா-ருக்மிணி சமேத கோபாலகிருஷ்ணர், காலபைரவர், சனீஸ்வரர், சூரியன் என அனைவருக்கும் கோஷ்டத்திலும் சந்நிதிகளிலும் காட்சி தருகின்றனர்.

சந்நிதி தரிசன நேரம்: காலை 7 -11 வரை, மாலை 4.30-7.30 வரை.

அமைவிடம்: ஸ்ரீபுத்திரகாமேட்டீஸ்வரர் திருக்கோயில், புதுக்காமூர், ஆரணி-632 301, திருவண்ணாமலை மாவட்டம்.

தகவலுக்கு: 99947 84478

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

செம்பூவே... ஐஸ்வர்யா ராஜேஷ்!

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

ஐபிஎல் தொடரில் அதிவேக சதங்கள் அடித்த வீரர்கள்!

SCROLL FOR NEXT