ஊரைவிட்டு, உறவை விட்டு நீங்கி, நீண்ட காலம் தொலைவிலும் வெளிநாட்டு முகாம்களிலும் உள்ள சில ராணுவ வீரர்கள் ஆங்காங்கே பல தொல்லைகளுக்கு ஆளாவதைப் பார்க்கிறோம்.
இதுபோல் இக்காலத்தில் மட்டுமல்ல. அக்காலத்திலும் அநேக நிகழ்வுகள் நடந்ததுண்டு.
கலீபா உமர்(ரலி) அவர்கள், கலீபா என்று காட்டிக்கொள்ளாமல் நோட்டம் பார்க்க நகர்வலம் வருவார்கள். மக்கள் குறைகளை அறிந்து உடனே நடவடிக்கை எடுப்பார்கள். அவ்வாறு ஒருமுறை நகர்வலம் வரும் பொழுது, கலீபா, ஒரு பெண்ணின் புலம்பலைக் கேட்டார்கள். புலம்பல் ஒலி கேட்ட இல்லத்திற்கு சென்று, சோகமாய் புலம்பிய காரணத்தைக் கேட்டார்கள். புலம்பிய பெண், ""கலீபா உமர்(ரலி) அவர்கள் என் கணவரைப் போருக்கு அனுப்பிவிட்டார். என் கணவர் போருக்குப் போய் பல மாதங்கள் ஆகிவிட்டன. கணவனின் பிரிவால் பெரிதும் வருந்துகிறேன். பெண்கள், கணவர்கள் இல்லாதபொழுது அல்லாஹ்வின் பாதுகாப்பில் தங்களைக் காத்துக்கொண்டு கணவனின் பொருட்களையும் பேணிக் காத்துக் கொள்வார்கள் என்ற திருக்குர்ஆனின் 4-34வது வசனப்படி எத்தனை காலம் நான் காத்துக் கொண்டிருப்பது?'' என்று கேள்வி எழுப்பினாள்.
"களத்தில் உங்களைத் தாக்கும் எதிரிகளைத் தவிர்த்து பெண்களையோ, முதியவர்களையோ, முடியாதவர்களையோ அழித்து விடாதீர்கள். அதோடு நிழல் தரும் மரங்களையும் காய், கனி தரும் செடிகளையும் அழித்தல் ஆகாது'' என்று போர் வீரர்களுக்குப் போதித்த கலீபா உமர் (ரலி) போர் வீரர்களின் குடும்பங்களின் துயரைத் துடைக்க ஆவன செய்ய முற்பட்டார்.
முதலில், புலம்பிய பெண்ணின் கணவன் எந்த எல்லையில் இருக்கிறார் என்பதை அறிந்து ஒரு தூதனை அனுப்பி அந்த வீரனைத் திரும்ப வரவழைத்து அவனது மனைவியிடம் அவனை ஒப்படைத்தார்.
கலீபாவின் மகள் ஹஃப்ஸô(ரலி) அவர்களின் மூலம் "கணவனைப் பிரிந்து ஒரு பெண் எத்தனை காலம் கலங்காமல் இருக்க முடியும்?' என்பதைப் பெண்களிடம் விசாரித்தார்கள். பெண்களின் மனநிலையை பெண்ணைக் கொண்டே அறிந்தார் கலீபா.
பிறகு குடும்பப் பெண்களின் பிரிவுத் துயரைப் போக்க உயரிய ஆணையைப் பிறப்பித்து அமுல்படுத்தினார்கள். படைத் தளபதிகளுக்கு நடைமுறைப்படுத்தும் நற்கட்டளைகள் பறந்தன.
"எந்தப் போர் வீரனையும் மூன்று மாதங்களுக்கு அதிகமாக குடும்பத்தைப் பிரிந்திருக்க அனுமதிக்கக் கூடாது'' என்பதற்கேற்ப மூன்று மாதங்களில் வீடு திரும்பி மனைவி மக்களோடும் உற்றார் உறவினர்களோடும் கூடி வாழும் வாய்ப்பை போர் வீரர்களுக்கு வழங்கினார் கலீபா.
அதாவது வீரர்களுக்கு விடுப்பு வழங்கும் விதிகளை நிர்ணயித்து வரலாற்றில் இடம் பெற்றார் இரண்டாம் கலீபா உமர்(ரலி) அவர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.