வெள்ளிமணி

மாட்சி மிகு ஆட்சி

மக்களாட்சியில் மக்களின் கருத்துகள் மதிக்கப்பட வேண்டும். மதிக்கப்படும் கருத்துகள் செயற்படுத்தப்பட வேண்டும்.

மு. அ. அபுல் அமீன்

மக்களாட்சியில் மக்களின் கருத்துகள் மதிக்கப்பட வேண்டும். மதிக்கப்படும் கருத்துகள் செயற்படுத்தப்பட வேண்டும். செயற்பாட்டின் பலன் அயலார் அபகரிப்புக்கு உள்ளாகாது, ஊழலில் உறைந்து விடாது உரியவரைச் சென்றடையவேண்டும். அதுதான் மக்களாட்சியின் மகத்தான வெற்றி. எக்கணமும் மக்களின் தக்க கருத்துகளை மிக்க கவனமாய் செயற்படுத்திய கலீபா உமர்(ரலி) அவர்களின் ஆட்சியில் நடந்த இரு நிகழ்வுகள் நினைவு கூரத் தக்கவை.

வழக்கம்போல் இரவு சோதனை மேற்கொண்ட கலீபா, ஒரு தாய் தன் மடியில் பசியால் துடிக்கும் குழந்தைக்கு பாலூட்டாது குழந்தையின் பசியைப் பலவந்தமாக அடக்க முயலும் அக்கிரமம் கண்டு உக்கிரமடைந்து உரத்த குரலில், ""குழந்தையின் பசி தீர்க்காத பாதகியே... நீயும் ஒரு தாயா?'' என்று வினவினார்.

"நான் செய்தது உண்மை. ஆனால் நீங்கள் நினைப்பது போல் கொடியவள் இல்லை நான். தாயிடம் பாலருந்தும் வரை குழந்தைகளுக்கு ஊதியம் இல்லை என்று மக்களுக்கு ஊதியம் வழங்கும் கலீபா உத்தரவிட்டுள்ளார். அதனால் நான் என் குழந்தைக்கு பாலை மறக்கடிக்கும் மாபாதக முயற்சி செய்கிறேன்''

அந்தத் தாயின் பதில் கலீபாவை நிலைகுலைய வைத்தது. பால்குடி பாலகர்களைப் பரிதவிக்க விட்டுவிட்டேனே என்று மறுநாள் காலையிலேயே பால்குடி பாலருக்கும் ஊதியம் உண்டு என்று உத்தரவிட்டார்.

ஒருமுறை கலீபா உமர்(ரலி) அவர்கள் மக்களுக்கு உரை நிகழ்த்த மேடை ஏறியவுடன் ஓர் இளைஞர், "உங்கள் உரையைக் கேட்க நாங்கள் தயாரில்லை. நீதி போதிக்கும் தகுதி உங்களுக்கு இல்லை'' என்றார்.

இளைஞர் சினமுற்று சீறுவதன் காரணத்தைக் கேட்டார் கலீபா.

"பைத்துல் மாலிலிருந்து துணியை ஆளுக்கொன்று என்று பங்கிட்டளித்தீர்கள். அதனை ஒவ்வொருவரும் மேல் துண்டாக பயன்படுத்துகிறோம். அந்தத் துணி அதற்கு மேல் எதற்கும் போதவில்லை. ஆனால் நீங்களோ அதே துணியில் சட்டையும் அணிந்து மேல் துண்டும் போட்டிருக்கிறீர்கள். சட்டைக்குரிய துணி உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது? இது நியாயமா?'' - பயமின்றி நயமான சொற்களால் தயவு தாட்சண்யம் பாராது அனைவரும் அறியக் கேட்டார் இளைஞர்.

கலீபாவின் மகன் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அழைக்கப்பட்டு பதில் சொல்ல பணிக்கப்பட்டார்கள். "தந்தையான கலீபா உமர்(ரலி) அவர்களின் சட்டை இனியும் ஒட்டு போட்டு தைக்க இயலாத அளவிற்குக் கிழிந்து விட்டது. கருவூலத்தில் கலீபாவிற்கு மாற்றுடை வாங்கும் காலம் இன்னும் வரவில்லை. அதனால் என் பங்கு துணியை என் தந்தைக்கு சட்டை தைத்துக்கொள்ளக் கொடுத்தேன்''.

அதோடு நில்லாது அப்துல்லாஹ் (ரலி) அவர்களிடம் அந்தத் துணி இல்லை என்பதையும் அனைவரும் பார்த்தறியச் செய்தார்கள் உமர்(ரலி) அவர்கள்.

மக்களின் கருத்துக்களை மதித்து செயற்படுத்தி நூலிழையும் கோணாது கோலோச்சிய கலீபா உமர் (ரலி) அவர்களின் வழியில் ஆட்சி செய்தால் மாட்சியுறும் நாடு. மீட்சி பெறுவர் மக்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT