வெள்ளிமணி

நான்கு மெழுகுவர்த்திகள்!

நமக்காக ஒரு குழந்தை பிறந்துள்ளார். ஓர் ஆண் மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார். ஆட்சிப் பொறுப்பு அவர் தோள் மேல் இருக்கும்.

ரொசிட்டா

நமக்காக ஒரு குழந்தை பிறந்துள்ளார். ஓர் ஆண் மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார். ஆட்சிப் பொறுப்பு அவர் தோள் மேல் இருக்கும். அவருடைய திருப் பெயரோ வியத்தகு ஆலோசகர்; வலிமை மிகு  இறைவன்; என்றுமுள்ள தந்தை; அமைதியின் அரசர் என்று அழைக்கப்படும்.

அவரது ஆட்சி உயர்வுக்கு வழிவகுக்கும். அந்த ஆட்சியில் அமைதி நிலவும். அவரது அரசின் வளர்ச்சிக்கும் முடிவு இராது என்று இயேசு பிறப்பதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஏசாயா தீர்க்கதரிசி  எழுதி வைத்துள்ளார்.

ஆம்! அவரது வருகையை இஸ்ரயேல் மக்கள் தங்களுக்கு ஒரு விடிவு காலமாக எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.

இன்றும் நம் ஆலயங்களில் இறை இயேசுவின் வருகைக் காலத்தை எதிர்பார்த்து ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் வாரத்துக்கு ஒன்றாக நான்கு மெழுகுவர்த்திகளை எரிய வைத்துக்  கொண்டாடுகின்றோம்.

முதல் வாரத்துக்கான மெழுகுவர்த்தி சமாதானத்தைக் குறிக்கின்றது. உலக மக்களுக்கு இன்று மிகவும் அவசியமாகத் தேவைப்படுவது சமாதானம். நாடுகளுக்கிடையே குடும்பங்களுக்கிடையே இன்று  அத்தியாவசியத் தேவையாக சமாதானம் இருக்கின்றது. இயேசுவே அமைதியின் அரசர் என்ற ஏசாயா இறைவாக்கினரின் கூற்றின்படி நமது மனங்களுக்கு சமாதானம் வேண்டும். இதைத்தான், இயேசு  பெத்லகேம் ஊரில் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தவுடன் வானதூதர்கள் "உலகில் நல்மனதோருக்கு சமாதானம்' என்றனர்.

இரண்டாவது வாரம் எரிய விடும் மெழுகுவர்த்தி நம்பிக்கையின் அடையாளம். நமக்கு வரும் துன்பங்களிலிருந்தும் பாவப் பழக்க வழக்கங்களிலிருந்தும் விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கை  எல்லோருக்கும் இருக்க வேண்டும்.

அன்று இஸ்ரயேல் மக்கள், நமது மீட்பர் வந்தவுடன் நமக்கு அடிமைத்தனத்திலிருந்து விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தது போல சதாகாலமும் துன்பத்தில் வாழும் நமக்கும்  இறைவன் வலிமை மிகுந்தவராக இவ்வுலகில் பிறந்து வந்து நம்மை விடுவிப்பார் என்ற நம்பிக்கையோடு காத்திருப்போம்.மூன்றாவது வாரம் எரியும் மெழுகுவர்த்திக்கு அர்த்தம் அன்பு.

அன்புதான் உலகத்தை ஆட்சி செய்ய வேண்டும். இதுதான் நம் கடவுள் நமக்குக் கொடுத்த தலையாய கட்டளை. இதைத்தான் இயேசு முதலில் கடவுளிடம் அன்பு செலுத்து; இரண்டாவதாக உன்னை நீ நேசிப்பது போல பிறர் மீது அன்பு காட்டி வாழு என்று கூறினார். இந்த உலகத்தில் அன்புக்காக ஏங்கித் தவிக்கும் உள்ளங்கள் எத்தனை எத்தனையோ!

அன்பு செலுத்துவது எப்படி, ஏன் அன்பு செலுத்த வேண்டும் எப்பொழுது செலுத்த வேண்டும் என்று பலவிதமான கேள்விக்குறிகள் நமது மக்களிடையே நிலவுகின்றது. இறைவாக்கினர் கூறியிருப்பது போல வியத்தகு ஆலோசகரான இயேசுவிடமே நாம் அன்பை எப்படி வெளிப்படுத்துவது என்று ஜெபம் செய்வது மூலம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

இறுதி வாரத்தின் மெழுகுவர்த்தி குறிப்பது சந்தோஷம். என்றுமுள்ள தந்தையாகிய இறைவன் கூறியிருப்பது போல ஒவ்வொரு தந்தையும் தன் பிள்ளைகள் சந்தோஷமாக வாழ வேண்டும் என்றே விரும்புவர்.

அன்று தங்களுக்கு ஒரு இறைமகன் தரப்பட்டுள்ளதாக எண்ணி இஸ்ரயேல் மக்கள் எப்படி மகிழ்ந்தார்களோ அதே போல இன்றும் (இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும்) இயேசுவின் வருகையை  எண்ணி மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கிறிஸ்துமஸ் திருவிழாவை கிறிஸ்தவர்கள் கொண்டாடி மகிழுகின்றனர்.

இந்நன்னாளில் மக்கள் எல்லோரும் ஒருவரை ஒருவர் சந்தித்துத் தங்கள் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இந்த சமாதானமும் நம்பிக்கையும் அன்பும் சந்தோஷமும் உலகில் என்றென்றும் நிலைத்திருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

7 பிலிம்ஃபேர் விருதுகளை வென்ற அமரன்!

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

SCROLL FOR NEXT