முகப்பு
வெள்ளிமணி

கல்யாணத் தடை நீக்கும் ஸ்ரீகல்யாணவேங்கடேசர்

சந்திரகிரி மன்னன் ஆகாசராஜனின் புதல்வி பத்மாவதிக்கும் ஸ்ரீனிவாசப் பெருமானுக்கும் திருமணம் என நிச்சயமானது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:38 AM
பகிர்:

சந்திரகிரி மன்னன் ஆகாசராஜனின் புதல்வி பத்மாவதிக்கும் ஸ்ரீனிவாசப் பெருமானுக்கும் திருமணம் என நிச்சயமானது. சந்திரகிரி மன்னன் ஆகாசராஜன் தன் ஆட்சிக்குட்பட்ட நாராயணவனத்தில் திருமணத்தை கோலாகலமாக நடத்தத் திட்டமிட்டார். தேவர்களும் ரிஷிகளும் மக்கள் பெருவெள்ளத்துடன் சேர, திருமணமும் நாராயணவனத்தில் சிறப்பாக நடந்தேறியது. பின்னர் மாப்பிள்ளையையும் மணப்பெண்ணையும் முறைப்படி வழியனுப்பி வைக்க வேண்டுமே! ஆகாசராஜன் ஏற்பாடுகளைச் செய்தார்.

ஸ்ரீனிவாசப் பெருமாள் திருப்பதி திருமலைக்குச் செல்வதென முடிவாயிற்று. தம்பதியர் இருவரும் திருவேங்கடமலைக்குச் செல்லும் வழியில், அகஸ்தியரின் ஆஸ்ரமம் தென்பட்டது. அங்கே அகஸ்திய முனி இருவரையும் வரவேற்று உபசரித்தார். மணமக்கள் திருமணமானவுடனே ஆறு மாதத்துக்கு மலை ஏறிச் செல்லக்கூடாது என்று கட்டளையிட்டு, இருவரையும் தம் ஆஸ்ரமத்திலேயே தங்கச் சொன்னார். அகஸ்தியரின் கட்டளைக்கு மறு பேச்சு ஏது? இருவரும் அங்கேயே தங்கினர். பெருமாளும் பத்மாவதித் தாயாரும் அகஸ்தியரின் ஆஸ்ரமத்திலேயே தேனிலவு கொண்டாடினர். பின்னர் அங்கிருந்து திருமலை திருப்பதிக்குச் சென்றனராம்.
பெருமாள் இங்கிருந்து ஸ்ரீவாரி மெட்டு என்ற பாதை வழியாக திருமலைக்கு நடந்தே சென்றாராம். இந்தப் பாதைதான் நீண்டகாலமாக திருமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் பாதையாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்தப் பாதைக்கு எதிர்ப்புறம் கடைசிப் படியாக, அதாவது அடிப்படியாக(கீழ் படி) இருந்ததே மருவி அலிபிரி என்ற பெயருடன் தற்போது பக்தர்கள் நடந்து செல்லும் பாதையின் முதல் படியாக அமைந்துள்ளது. இவ்வாறு பெருமாளும் தாயாரும் மனக்களிப்புடன் தங்கிய ஆஸ்ரமம் பின்னாளில் கோயிலாக உருவெடுத்தது. ஸ்ரீனிவாசப் பெருமாள் மற்றும் அலர்மேல்மங்கைத் தாயார் இருவர் பெயர்களையும் தாங்கி சீனிவாசமங்காபுரம் என்று ஆனது அந்தத் தலம்.

வேங்கடேசப் பெருமாள் மூன்று தலங்களில் சிறப்பான வடிவம் கொண்டு திகழ்கிறார். திருமணம் நடந்த நாராயணவனத்தில் பாலகனாகக் காட்சி தருகிறார் (பெருமாளின் சிலாரூபம் 5 அடி உயரம் கொண்டது). நாராயண வனம் எனப்படுவது, தற்போது திருப்பதியில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள புத்தூர். இங்கே, சீனிவாசமங்காபுரத்தில் திருமணமான கோலத்தில் இளைஞனாக மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார்(பெருமாள் இங்கே 8 அடி உயரத்தில் கம்பீரமாகக் காட்சி தருகிறார்). அடுத்து, ஒரு குடும்பஸ்தனாக திருப்பதி திருமலையில் சம்சாரக் கோலத்தில் (6 அடி உயர சிலாரூபத்தில்) காட்சி தருகிறார். இப்படி பெருமாளின் மூன்று கோலங்களில் அழகியதும் கம்பீரமானதுமான திருக்கோலத்தை இந்த சீனிவாசமங்காபுரத்தில் நாம் தரிசிக்கலாம். பெருமாளின் இந்த மூன்று வடிவங்களும் ஒரே மாதிரியான அமைப்புடன் திகழ்வது சிறப்பு.

பெருமாள் ஸ்ரீபத்மாவதி தாயாரை மணம் முடிக்க, உடலெல்லாம் புற்று சூழும் அளவு கடுந்தவம் புரிந்த இடம் இது என்கிறது ஒரு புராணக்கதை. இத்திருக்கோவில் வளாகத்தில் புற்றுகள் உள்ளன. பெருமானும் புற்றின் அடியில் தோன்றியதாலேயே, இங்கே கோபுரத்தில் விமான ஸ்ரீனிவாசர் இல்லை. இக்கோவிலைக் கட்டியவர் யார் என்ற தகவல் இல்லை. ஒரு கல்வெட்டின்படி, தாளப்பாக்கம் அன்னமாச்சார்யாரின் பேரனான சின்னதிருமலாச்சார்யுலு என்பவர் இக்கோவிலை புதுப்பித்ததாகத் தெரிகிறது.மிகப் பழைமையான கோயிலாக இருந்தாலும், சீனிவாசமங்காபுரம் கோயில் சென்ற நூற்றாண்டில்தான் மீண்டும் வெளித்தெரிந்து புகழ்பெறத் தொடங்கியது. இதற்காகப் பாடுபட்டவர் ஒருவர்.
1940க்கு முன், இந்தக் கோயில் பல ஆண்டுகளாக பராமரிப்பு ஏதும் இன்றி பாழடைந்த நிலையில் இருந்துள்ளது. 1940-ல் காஞ்சிபுரத்தின் நடுத்தர மாத்வ குடும்பத்தைச் சேர்ந்த சுந்தரராஜ ஸ்வாமி என்பவர் அரிதின் முயன்று பெருமாளின் தரிசனத்தைக் கனவில் கண்டு, அதன்படி நடையாய் நடைநடந்து, பெரும் சிரமத்துக்கு இடையே இந்தக் கோயிலை பாழடைந்த நிலையில் கண்டறிந்தார்.

இந்த விக்ரஹமும் பாழடைந்த நிலையில் ஒரு சுவரின் பின்னே இருந்தது. 1940, ஜூலை 11ல் சுவர் இடிக்கப்பட்டு, பெருமாள் விக்ரஹத்தை வெளியில் கொண்டு வந்தனர். 1592ல் ஸ்ரீனிவாச மங்காபுரத்தை ஆண்ட சந்திரகிரி மன்னர் 2ஆம் வேங்கடராயருக்குப் பின்னர் சுல்தான் படைகளின் ஆதிக்கம் மேலோங்கவே, அவர்கள் பார்வையில் இருந்து பெருமாளை மறைக்க ஒரு சுவர் எழுப்பி, கோயிலைக் காத்துள்ளனர். இந்தக் கோயிலின் மீது பீஜப்பூர் கோல்கொண்டா சுல்தான்களின் தாக்குதல் நடந்துள்ளது. கோயிலில் இருந்த விஷ்வக்சேனர், கருடாழ்வார் சிலா ரூபங்கள் உடைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு பின்னமான நிலையில், இன்று சந்திரகிரிக் கோட்டை அருங்காட்சியகத்தில் இந்த சிலைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இக்கோயிலின் உற்ஸவர் விக்ரஹமும் இங்கிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் திருப்பதி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கோதண்டராமர் கோயில் கோபுர விமானத்தில் ஒளித்து வைக்கப்பட்டிருந்ததாம். அங்கே திருப்பணி நடைபெற்றபோது இது கண்டறியப்பட்டது. தற்போது, இந்தக் கோயில் திருமலை திருப்பதி தேவஸ்தான கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.  இங்கே சீனிவாசப் பெருமாள் நின்ற கோலத்தில் கம்பீரமான கோலத்தில் காட்சி தருகிறார். அவர் சந்நிதிக்கு வலப்புறம் அமர்ந்த கோலத்தில் லட்சுமிநாராயணர் சந்நிதியும், இடப்புறம் சயனக் கோலத்தில் ரங்கநாதர் சந்நிதியும் உள்ளன.

இவ்வாறு நின்ற, இருந்த, கிடந்த எனும் மூன்று கோலங்களில் பெருமாள் காட்சி தருவது சிறப்பான ஒன்று. திருமலையில் கிடைக்காத வகையில், இங்கே பெருமாளின் பாத தரிசனம் கிட்டுகிறது.
திருப்பதி திருமலையில் பெருமாளை தரிசனம் செய்ய நாள் கணக்கில் காத்திருந்து, பின்னர் தரிசிக்கச் சென்றாலும் ஓரிரு நிமிடங்கள் கூட நிம்மதியாக தரிசிக்க முடியாமல் போய்விடும். ஆனால், இங்கே பெருமாள் அதே கோலத்தில் எளியோர்க்கு சேவை சாதிக்கிறார். எனவே இங்கே, பெருமாளின் அழகை கண் குளிரப் பருகி, திவ்ய தரிசனத்தை பொறுமையாக ஆர அமர நின்று மனம் நிறைந்து பெறலாம்.

விழாக்கள்: இந்தத் தலத்தில் மாசி மாதம் பிரம்மோற்ஸவம் 9 தினங்கள் நடக்கிறது. புரட்டாசியில் பவித்ரோத்ஸவமும், வைகுண்ட ஏகாதசியும் சிறப்பாக நடக்கின்றன. சனிக்கிழமைகளில் பெருமாள் உபய நாச்சிமாருடன் மாட வீதியில் உலா வருகிறார். பிரார்த்தனை: திருமணத்தடை நீங்க, இங்கே ஸ்ரீகல்யாண வேங்கடேஸ்வர ஸ்வாமிக்கு திருக்கல்யாண உற்ஸவ பிரார்த்தனை செய்யப்படுகிறது.

சந்நிதி திறந்திருக்கும் நேரம்: காலை 5 - இரவு 8 மணி வரை இருப்பிடம்: திருப்பதியில் இருந்து மதனப்பள்ளி செல்லும் சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் தலம்.

முழு கட்டுரையைப் படிக்க →