வெள்ளிமணி

அருள் பெறுவோம்!

பாரசீகத்தின் வடமேற்கில் காஸ்பியன் கடலுக்கருகில் தப்ரிஸ்தான் மாநிலம் ஜீலான் நகரில் ஒருநாள் நண்பகலில் !

மு. அ. அபுல் அமீன்

பாரசீகத்தின் வடமேற்கில் காஸ்பியன் கடலுக்கருகில் தப்ரிஸ்தான் மாநிலம் ஜீலான் நகரில் ஒருநாள் நண்பகலில் உண்பதற்கு உணவு தேடி கைஜில் ஆற்றோரம் பசியோடு நடந்த தடந்தோள் வாலிபர் ஆற்று நீரில் ஆப்பிள் மிதப்பதைக் கண்டார். சாப்பிடக் கிடைத்த பழத்தைப் பாய்ந்து எடுத்து பசி மாய்ந்திட உண்டார். உண்ட பின் உணவு தந்த இறைவனுக்கு அல்ஹம்துலில்லாங் என்று நன்றி நவின்றார்.

வீடு திரும்பிய பின் தீது செய்துவிட்டோமோ என்ற ஐயம் எழுந்தது. ""நாம் உங்களுக்கு வழங்கிய நல்லவற்றையே உண்ணுங்கள்'' என்று குர் ஆனில் அத்தியாயம் 2.172வது வசனத்தில் உரைத்த அல்லாஹ் அதே அத்தியாயம் 188வது வசனத்தில் ""உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவர் பொருட்களைத் தவறாக உண்ணாதீர்கள்'' என்று எச்சரிக்கிறானே. தின்ற பழம் உழைத்து பெறாத பழமாயிற்றே. தின்ன தகுந்ததா? தகாததா? பிறருக்குரிய பழத்தைத் தவறாக தின்று விட்டோமா? தடுமாறினார் திடுமென்று கிடைத்த பழத்தைக் கடித்துத் தின்ற தடித்த வாலிபர். உண்ணத் தகுந்ததா? இல்லையா? என்பதை நாமே முடிவு செய்வது முறையாகாதே. இறைமறை இயம்புவதற்கு முரணாகுமே.

""உங்களுக்காக அல்லாஹ் இறக்கி வைத்த உணவுகளை நீங்கள் கவனித்தீர்களா? அவற்றில் சிலவற்றை ஆகாதவை என்றும் சிலவற்றை ஆகுமானது என்றும் உங்கள் விருப்பப்படி நீங்கள் மாற்றிக்கொள்ள அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்துள்ளானா? அவ்வாறு அல்லாஹ் மீது கற்பனையாக பொய் கூறுகிறார்களா?'' திருக்குர்ஆனின் 10வது அத்தியாயம் 59வது வசனம் அந்த வாலிபரின் சிந்தனையில் சிக்கி திக்குமுக்காட வைத்து தூக்கத்தைப் போக்கியது. பொழுது புலர்ந்தது. புறப்பட்டார் வாலிபர் கைஜில் ஆற்றோரம்.

கொஞ்ச தூரம் கடந்ததும் ஆப்பிள் தோட்டத்தைக் கண்டார். ஒரு ஆப்பிள் மரத்தின் கிளை நீரைத் தழுவி தாழ்ந்திருந்ததையும் அக்கிளையில் பழமில்லா காம்பு இருப்பதையும் கண்டார். இத்தோட்டத்து ஆப்பிளே அவர் தின்றது என்ற திண்ணமான முடிவுக்கு வந்தார். தோட்டத்திற்குள் சென்றார்.

வைகறை தொழுகை முடித்து கையில் தஸ்பீஹ் மணியை உருட்டி அணியான அல்லாஹ்வின் திருநாமங்களை மொழிந்தவாறே உலாவினார் தோட்டத்து உரிமையாளர், தோற்றத்தில் ஏற்றமுடைய எழில் செல்வர் அப்துல்லாஹிஸ் ஸவ்மயீ.

தலைநிமிர்ந்து, தன்முன் நிற்கும் இருபது வயது இளைஞனை கூர்ந்து நோக்கினார் பண்ணையார். அந்தப் பார்வை, யார்? ஏன் இங்கு வந்து நிற்கிறாய்? என்ற கேள்விகளைக் கேட்டது.

இளைஞர் பணிவோடு பவ்யமாய் ஒளவியமில்லாது நடந்ததை நவின்றார். ""நன்மையை நீங்கள் வெளிப்படுத்தினாலும் மறைத்தாலும் அல்லது பிறர் செய்த தீங்கை நீங்கள் மன்னித்தாலும் உங்களுக்கு மிக நன்று. ஏனெனில் அல்லாஹ் நிச்சயமாக மிக மன்னிப்பவனாகவும் மிக்க ஆற்றல் உடையவனாகவும் இருக்கிறான் (4-149)''.

""உங்களுக்கு வருத்தம் ஏற்படச் செய்தோரின் செயல்களை மன்னித்து புறக்கணித்து விடுங்கள். அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்; கிருபையுடையவன் (24-22)'' என்ற குர்ஆனின் இரு வசனங்களை ஓதி மன்னிக்குமாறு வேண்டினார். பெரியவர், தோட்டத்திற்கு உரியவர் அரிய தண்டனை தந்தாலும் தயங்காது ஏற்பதாகச் சொன்னார்.

பெரியவர் அந்த இளைஞரை 12 ஆண்டுகள் அவருடன் தங்கி பணிவிடைகள் செய்யப் பணித்தார். இளைஞர் மறுப்பின்றி தண்டனையை ஏற்பதாக பொறுப்புடன் கூறினார். பெரியவர் ஸவ்மயீ இளைஞரை வேலைக்காரனாகவோ கூலியாளாகவோ நடத்தவோ கொடுமைப்படுத்தவோ இல்லை. சொந்த பிள்ளைக்குச் சொல்லிக் கொடுப்பதைப் போல நல்ல ஒழுக்கம், விழுப்பமான ஆன்மிக மான்மியம் கற்பித்து, பண்ணையை பராமரித்து, பாதுகாத்து பயன்பெறும் நயமான நடைமுறை பயிற்சியும் கொடுத்தார். 12 ஆண்டுகள் நிறைவடைந்ததும் அவரின் அழகிய மகளைத் திருமணம் செய்து கொடுத்தார்.

அந்த இளைஞர்தான் ஈராக் தலைநகர் பாக்தாதில் அடக்கமாகியுள்ள மகான் முஹிய்யத்தீன் அப்துல் காதர் ஜீலானியின் தந்தை அபூசாலிஹ். வருகிற 22.2.2013 இம்மகானின் நினைவு நாள்.

நாமும் அம்மகானின் வழியில் சத்திய குர்ஆனின் வழியைக் கடைப்பிடித்து அல்லாஹ்வின்  அருளைப் பெறுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

பெர்லின் திரைப்பட விழாவில் அசாம் பெண் இயக்கிய படத்துக்கு விருது!

SCROLL FOR NEXT