பலியல் பலாத்காரம் பற்றிய செய்திகள் பரவலாகப் பேசப்படுகின்றன. இக்கொடுஞ் செயலுக்குக் கடுந்தண்டனை கொடுக்க வேண்டும் என்ற கூக்குரல் போர்க்குரலாக ஒலிக்கிறது.
""நபியே! நம்பிக்கையாளர்களான ஆண்கள் அவர்களின் பார்வைகளைக் கீழ்நோக்கியே வைக்கவும், அவர்களின் கற்பைப் பாதுகாக்கவும் சொல்லுங்கள். இது அவர்களை பரிசுத்தமாக்கி வைக்கும். நிச்சயமாக அல்லாஹ் அவர்களின் செயல்களை நன்கறிபவன்'' என்ற 24:30 குர்ஆன் வசனம் கற்பைக் காத்து பரிசுத்தமாக வாழ, ஆர்வமுடன் பெண்களைப் பார்க்காது பார்வையைத் தாழ்த்திக்கொள்ள சொல்கிறது.
கள்ளப் பார்வை கண்ணுக்கு இன்பம் என்று மேனி அழகை ரசிப்பது கற்புநெறி தவறுதலின் துவக்கம். அதனால் பார்வையைத் தாழ்த்த பகிரங்க எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
""நம்பிக்கையுள்ள பெண்களும் தங்கள் பார்வையை கீழ்நோக்கி வைத்து கற்பைக் காத்துக் கொள்ளவும். தங்கள் ஆடை ஆபரண அலங்காரங்களை மறைத்துக்கொள்ள வேண்டும்'' என்று பெண்களுக்கும் கட்டளையிடுகிறது குர்ஆனின் 24-31வது வசனம்.
ஆண்கள் பெண்களைப் பாராதிருப்பது போல் பெண்களும் ஆண்களை ஆசையோடு நோக்காது பார்வையைத் தாழ்த்த வேண்டும். வெளிப்படையான ஆடை அலங்காரங்கள் ஆண்களைக் கவர்ந்து கண்ணிமைக்காது காண வைக்கும். மண்ணில் மாபாதகங்களுக்கு அந்தப் பார்வையே வழி வகுக்கும். பார்வைக்குப் போர்வையிடும் வண்ணம் ஆடை அணிய வேண்டும். அந்த ஆடையே பண்பைக் காட்டும். பண்பு பாதகங்களைத் தடுக்கும்.
""விபச்சாரம் செய்த ஆணோ பெண்ணோ ஒவ்வொருவருக்கும் நூறு கசையடி கொடுங்கள்'' என்று கொடிய செயலுக்குக் கடுந்தண்டணை வழங்குகிறது வான்மறை குர் ஆனின் 24-2வது வசனம்.
பொய்ப்புகார் கூறி புண்படுத்துவோருக்கும் மெய்யான தண்டனையை மேதினியில் கொடுத்திட போதிக்கிறது ஆதி அந்தமில்லா அல்லாஹ் அருளிய குர்ஆனின் 24-4வது வசனம். ""எந்த ஆணும் கற்புடைய பெண்கள் மீது நான்கு சாட்சிகளின்றி அவதூறு கூறினால் அவனுக்கு எண்பது கசையடி கொடுக்க வேண்டும்''.
பெண்களை எள்ளி நகையாடி துள்ளித் திரிவோரையும் புள்ளி வைத்துப் பிடித்த வேதனை செய்வான் போதனை புரியும் அல்லாஹ் என்பதை எழில்மறை குர்ஆனின் 24-23வது வசனம் எடுத்தியம்புகிறது. ""கள்ளம் கபடமில்லாத கற்புடைய பெண்கள் மீது அவதூறு கூறுகிறவர்கள் இம்மை மறுமை இரண்டிலும் இறைவனின் சாபத்திற்கு உள்ளாவார். கடுமையான வேதனையும் உண்டு''. எனவே நெறிதவறிக் கெடும் நிலைக்கு அருகில் நெருங்காதீர்கள் என்று ஏந்தல் நபிக்கு அருளப்பட்ட அருமறை குர்ஆனின் 17-32வது வசனம் ""நம்பிக்கையாளர்களே தீய மானக்கேடான விபச்சாரத்தின் பக்கம் நெருங்க வேண்டாம்'' என்பதாகும்.
நாமும் அற்ப ஆசைகளை விடுத்து கற்பைக் காத்து அல்லாஹ் 33-35வது வசனத்தில் வழங்கும் ""நிச்சயமாக கற்புடைய ஆண்களுக்கும் பெண்களுக்கும் அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தருகிறான்'' என்பதற்கேற்ப நிறை வாழ்வு வாழ்வோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.