முகப்பு
வெள்ளிமணி

வைகுண்டத்திற்கு வழிகாட்டும் தலம்!

சென்னை புறநகர் பகுதியில் ஆவடியிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது கோயில் பதாகை.

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:45 PM
பகிர்:

சென்னை புறநகர் பகுதியில் ஆவடியிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது கோயில் பதாகை. இப்பகுதியில் உள்ள பெருமாள் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீசுந்தரராஜப் பெருமாளையும், அமர்ந்த கோலத்தில் ஸ்ரீவைகுண்ட நாதனையும் அவர் தம் உபய நாச்சிமார்களுடன் தரிசிக்கலாம் என்பதே அந்த சிறப்பு.

புராண காலத்தில் "ஸ்வேதாரண்யம்' என்று அழைக்கப்பட்ட இப்பகுதியில் பிருகு முனிவருக்கு நின்ற கோலத்திலும், மார்கண்டேய ரிஷிக்கு அமர்ந்த கோலத்திலும் பெருமாள் காட்சியளித்ததாக தல வரலாறு. இந்த ரிஷிகளின் சிலா திருமேனியையும் தரிசிக்கலாம். வைகுண்டத்திற்கு செல்ல ஜீவாத்மாக்களுக்கு வழிகாட்டும் ஸ்தலம் என்பதால் "கோயில் பாதை' என்ற பெயர் ஏற்பட்டது. தற்போது கோயில் பதாகை என்று அழைக்கப்படுகிறது.

இவ்வாலயத்தில் கருடாழ்வாருக்கு இரண்டு சந்நிதிகள் உள்ளன. ஆசார்ய புருஷர்களின் திவ்ய சிலா திருமேனிகளையும் தரிசிக்கலாம். சிறிய திருவடிக்கு சந்நிதியும், சுவாமி தேசிகனுக்கு தனி சந்நிதியும் உள்ளன.

வருடந்தோறும் சித்திரை வருடப்பிறப்பு அன்றும், நவராத்திரி காலங்களிலும், அமாவாசை, பௌர்ணமி, சிரவண தினங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. மணவாள மாமுனிகள், தேசிகர் உற்ஸவங்களும், மே 1ஆம் தேதி நடக்கும் சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சியும் இவ்வாலயத்தில் நடைபெறும் விழாக்களில் குறிப்பிடத்தக்கவை. தல விருட்சமாக அரசமரம் அமைந்துள்ளது.

ஆலயத் திருக்குளம் "ஜரமத புஷ்கரிணி' என்று அழைக்கப்படுகிறது. இக்கோயில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தில் உள்ளது.

பல்லவர், தொண்டமான் காலத்தைச் சேர்ந்த இவ்வாலயத்தில் தற்போது சுந்தரராஜப் பெருமான் சந்நிதியில் விமானம் சீர் அமைத்தல் உட்பட பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புதிதாக ஆண்டாள் சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. கொடிமரம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இன்னும் நிறைவேற வேண்டிய பணிகள் உள்ள நிலையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஜுலை 14ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணி அளவில் மகாசம்ப்ரோக்ஷணம் நடக்கிறது. ஜுலை 12ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன.

தகவலுக்கு: 98400 88558.

(ஆவடியிலிருந்து செங்குன்றம் செல்லும் பேருந்து 61சி, 61டி,61ஈ களில் கோயில் பதாகை செல்லலாம்).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.