பெற்றோர் சொல்கேட்கும் நல்மகன் பிறக்க...
தஞ்சையை ஆண்டு கொண்டிருந்தார் ராஜா சரபோஜி. கலைகளில் வல்லவர். இசையில் ஈடுபாடு.
தஞ்சையை ஆண்டு கொண்டிருந்தார் ராஜா சரபோஜி. கலைகளில் வல்லவர். இசையில் ஈடுபாடு. ஓவியம், பக்தி, ஆன்மிக நாட்டம் என எல்லாமும்தான் அவருக்குக் கைவந்திருந்தன. ஒருநாள்... அவருக்கு அவசரத் தகவல் ஒன்று பறந்து வந்தது. உலகத்திலேயே காணக்கிடைக்காத அழகுடன் இறை விக்ரகங்கள் பூமிக்கடியில் இருந்து கிடைத்தன என்று... திருத்துறைப்பூண்டி அருகே தலைஞாயிறு என்ற இடத்தில் விரிந்து பரந்திருந்த ஆலமரத்தின் அடியில் பூமியில் இருந்து சில இறை விக்ரகங்கள் கிடைத்தன என்ற தகவல் வந்ததும் சரபோஜி மன்னர் ஓடோடி வந்தார். பார்த்தால்... ஒய்யாரமாக நின்ற கோலத்தில் ராமபிரானின் அழகு விக்ரகம்.
விக்ரகங்களைக் கண்ட மன்னருக்கு ஆச்சரியம், அதேநேரம் பெருமகிழ்ச்சியும்கூட. கலாரசிகரான மன்னரும் உடனே அவற்றை எல்லாம் தஞ்சைக்கு எடுத்துச் செல்ல ஆணையிட்டார். ஆனால், அருகே தயங்கித் தயங்கி நின்ற உள்ளூரைச் சேர்ந்த வடுவூர் மக்கள், தங்கள் விருப்பத்தை பெரும் தயக்கத்துடன் சரபோஜி மன்னர் முன்னிலையில் வைத்தனர். செவிமடுத்த ராஜா சரபோஜி அவர்கள் விருப்பத்தை நிறைவேற்ற வாக்குறுதி அளித்தார். அதன்படி, அந்த மண்ணில் கிடைத்த விக்ரகங்கள் எல்லாம் வடுவூருக்குக் கொண்டு வரப்பட்டன. சரபோஜியே தன் ஆசைப்படி அங்கே கோதண்டபாணியாக கோதண்டம் என்னும் வில்லினை ஏந்தி ஒய்யாரமாக நின்ற ராமனுக்கு கோயிலை எழுப்பி அழகு பார்த்தார்.
ராமர் இங்கே கோயில்கொண்ட பின்னர் இந்தத் தலம் தட்சிண அயோத்தி என சிறப்பும் பெற்றது. தல விருட்சமாக மகிழ மரம் திகழ்கிறது. தல தீர்த்தம் அயோத்தியைப் போலவே சரயு தீர்த்தமாகத் திகழ்கிறது. பாஞ்சராத்ர ஆகமப்படி பூஜைகள் நடைபெறும் கோயில்.
திருவாரூர் மாவட்டத்தில் இரண்டு உற்ஸவ விக்ரகங்கள் மிகச் சிறப்பாகத் திகழ்கின்றன. இந்தக் கோயிலில் உள்ள மூலவர்களைக் காட்டிலும் உற்ஸவ விக்ரகங்களுக்குத்தான் அவ்வளவு அழகும் சிறப்பும். ஒருவர் மன்னார்குடி ராஜகோபாலஸ்வாமி, மற்றவர் வடுவூர் ஸ்ரீகோதண்டராமர். இந்த இரு ஆலயங்களின் உற்ஸவ விக்ரகங்களில் உள்ள அழகும் பெருமையும் வேறு எந்தத் தலத்திலும் கிடையாது என்பார்கள். ஒரு கரத்தில் அம்பு ஏந்தி, இன்னொரு கரத்தில் வில்லை ஏற்றிப் பிடித்து, இடுப்பை வளைத்து ஒய்யாரமாகக் காட்சி தரும் ராமபிரானின் விக்ரக அழகு மனது ஒன்றி தரிசிப்பவர் மனதை விட்டு என்றும் நீங்காத தன்மை கொண்டது.
இங்கே வடக்குப் பார்த்த தனி சந்நிதியில் ஹயக்ரீவரும் தரிசனம் தருகிறார். கோயிலுக்கு முன்னர் மேற்குப் புறத்தே ஓர் ஏரியும் உள்ளது
வடுவூர், பாரம்பரியப் பெருமையும் கலாச்சாரச் சிறப்பும் கொண்ட ஊர். குறிப்பாக வேதம் தழைத்த பூமி. கோதண்டராமர் சந்நிதிக்கு வடப்புறத்தில் வேத பாட சாலை உள்ளது. ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரமத்தாரால் நடத்தப்படும் பாடசாலை சிறப்பாகத் திகழ்கிறது. இங்கே பரம்பரை பரம்பரையாக பாகவத புராணங்களை சொற்பொழிவாற்றும் புராணதாரர்கள் குடும்பம் தொடர்ந்து இந்தச் சிறப்பை தலைமுறையாக எடுத்துச் செல்கிறது.
ஆதிகாலத்தில் வடுவூரில் மன்னார்குடியைப் போல் கிருஷ்ணர் கோவிலே இருந்துள்ளது. திருக்கண்ணபுரம், திருக்கண்ணமங்கை, திருக்கண்ணன்குடி என கண்ணன் தலங்களாகவே திகழும் கிருஷ்ணாரண்யமான இந்தப் பகுதியில் இருந்த கிருஷ்ணர் கோவிலில் பின்னாளில் ராமபிரானும் கோயில்கொண்டார்.
இந்தக் கோயிலில் இருந்த ஸ்ரீராஜகோபாலன் ருக்மிணி, சத்யபாமா சகிதராக தெற்கு நோக்கிய சந்நிதியில் அருள்பாலிக்கிறார். செங்கமலத் தாயாரும் சந்நிதி கொண்டு அருள் வழங்குகிறார். விஷ்வக்சேனர், ஆண்டாள், ஆழ்வாராதிகளும் சந்நிதியில் உள்ளனர். ஸ்ரீராமபிரானுக்கு அழகுக்கு அழகு சேர்க்கும் வகையில், மார்பில் மகாலட்சுமி பதக்கம், சாளக்கிராம மாலைகளுடன் காட்சி தருகிறார்.
உற்ஸவங்கள்:ராமரின் ஜன்ம நட்சத்திரமான புனர்பூசத்தின் போது, திருமஞ்சனம் செய்கிறார்கள். அன்று மாலை இவர் தேவி சீதையுடன் புறப்பாடு கண்டருள்கிறார். ராமநவமியை ஒட்டி 10 நாள் பிரம்மோற்ஸவம். அதில் ஏழாம் நாள் திருக்கல்யாணம், 9ம் நாள் தேர்த் திருவிழா. ஐந்தாம் நாளில், இவர் ஆண்டாள் திருக்கோலத்தில் எழுந்தருள்வது சிறப்பு.
மேலும், கார்த்திகை 7 நாள் பவித்ரோற்ஸவம், புரட்டாசியில் தேசிகர் உற்ஸவம், ஹயக்ரீவ உற்ஸவம், கோபாலனுக்கு வைகாசி-வசந்த உற்ஸவம் ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
பிரார்த்தனை: ஸ்ரீகோதண்ட ராமரிடம் வேண்டிக் கொள்ள பெற்றோர்களின் சொல் கேட்டு நடக்கும் சத்புத்திரர்கள் பிறப்பார்கள், தர்ம சிந்தனையுடன் குழந்தைகள் வளர்வார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஸ்ரீராமருக்கு திருமஞ்சனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
சந்நிதி தரிசன நேரம்: காலை 8-12 வரை, மாலை 4.30-8.30 வரை
இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து மன்னார்குடி செல்லும் வழியில் 24 கி.மீ., அல்லது மன்னார்குடியில் இருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது வடுவூர். வகுளாரண்ய úக்ஷத்ரம் என்ற சிறப்புப் பெயர் கொண்ட புராதனத் தலம். 10-15 நிமிடங்களுக்கு ஒருமுறை பேருந்து வசதி உள்ளது. தஞ்சையில் இருந்து சுமார் 45 நிமிட பயணம். திருவாரூர், கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி வழியே செல்லலாம்.
தகவலுக்கு :04367-267110.