வெள்ளிமணி

கல்வியின் பெருமை!

கல்வி கற்கையில் சயனித்தவன் பயணத்தை இழப்பான். பாதியில் பயணம் தடைபட்டு பாதிப்புக்கு உள்ளாவான்.

மு. அ. அபுல் அமீன்

கல்வி கற்கையில் சயனித்தவன் பயணத்தை இழப்பான். பாதியில் பயணம் தடைபட்டு பாதிப்புக்கு உள்ளாவான். கல்வியில் கவனம் செலுத்தியவன் பயணத்தில் இலக்கை அடைவான். வாழ்வில் துவக்கம் பெறுவான். களிப்போடு வாழ்வான்.

"மார்க்க ஞானத்தை கற்று கற்றபடி நிற்பவர் நல்லவர். அவரை எவரும் நாடி வந்தால் நற்கல்வியைப் பயிற்றுவிப்பார்'' என்று அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நவின்றபடி இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் மதீனாவில் நடத்திய கலா சாலையில் கற்க பல மைல்கள் தொலைவிலிருந்த பல்வேறு நாட்டு மாணவர்களும் வந்தனர்.

ஒருநாள் இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் பாடம் நடத்திக்கொண்டிருந்த பொழுது பலத்த மணியோசையும் பெருத்த ஆரவாரமும் கேட்டன. சிறிது நேரத்தில் மதீனாவிற்கு யானை வந்துள்ள செய்தியும் வந்தது. அக்காலத்தில் மதீனாவில் யானை ஓர் அபூர்வக் காட்சி. அனைத்து மாணவர்களும் யானையைக் காண ஓடினர். ஒரேயொரு மாணவர் மட்டும் ஓடாது உட்கார்ந்திருந்தார்.

அந்த மாணவர் அந்த லூஸியாவிலிருந்து (ஸ்பெயின்) வந்தவர். அவர் எந்த ஊரிலிருந்து வந்தாரோ அந்த ஊரிலும் யானைகள் கிடையாது. யானையைக் காண்பது அபூர்வமே. ஆயினும் அந்த மாணவர் யானையைக் காண ஓடாது உட்கார்ந்திருந்த காரணத்தை வினவினார் இமாம்.

யஹ்யல் என்ற அம்மாணவரின் மரியாதையான பதில் மாலிக் (ரஹ்) அவர்களை மகிழ்வித்தது. ""ஹழ்ரத்! எவர் மார்க்க கல்வியைக் கற்க செல்கின்றாரோ அவர் திரும்பும் வரை இறை வழியில் செல்பவர் என்ற செம்மல் நபி(ஸல்) அவர்களின் அறிவுரைப்படி பல்லாயிரம் மைல்கள் தொலைவிலுள்ள அந்தலூஸியாவிலிருந்து நான் இங்கு வந்தது உங்களிடம் கல்வி கற்று கருத்து தெளிவு பெறவே. யானையைக் கண்டு களிக்க அல்ல''.

கசடறக் கற்று கற்றபின் அதற்குத் தக நின்று தாய் நாட்டிற்குத் திரும்பிய யஹ்யல், அந்தலூசியாவில் அனைவரும் போற்றும் அறிஞராக விளங்கினார்.

கல்வி கரையில்லாதது; கறையும் இல்லாதது; குறையும் இல்லாதது; நிறையான கல்வியில் நிறைவு காணுதலும் நிறைவேறாது என்பதை ஏந்தல் நபி(ஸல்) அவர்கள், ""இறை நம்பிக்கையாளர் எவருக்கும் கல்வியைத் தேடுவதிலுள்ள ஆசை சுவனபதி செல்லும் வரை நிறைவேறாது'' என்று எடுத்துரைத்தது அபூஸ ஈத் (ரலி) அவர்கள் தொடுத்துரைத்தது திர்மீதி தொகுப்பில் உள்ளது.

"அறிவு இறை நம்பிக்கையாளரின் தவறிப்போன பொருள். எனவே அவர் அதனை எங்கு அடையப் பெறினும் அது அவருக்கே மிகவும் உரிமை உள்ளது'' என்று உத்தம நபி(ஸல்) அவர்கள் உரைத்தபடி (அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) நூல் - திர்மிதீ) நாமும் பொருத்தமான ஆசிரியரிடம் திருத்தமாய்க் கல்வி கற்று, கற்றதை மற்றவருக்கும் கற்பித்து அல்லாஹ்வின் அருளைப் பெறுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT