ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற தலம் புஷ்கர். பக்தர்கள் வேண்டிய வரத்தை அளிக்கும் காயத்ரி தேவியாக அன்னை இங்கே வீற்றிருக்கிறார். 27வது சக்தி பீடமாக விளங்குகிறது இந்தத் தலம். அன்னையின் உடற்கூறுகளில் மணிக்கட்டுகள் விழுந்த இடம் இது என்பர்.
கோயில் நகரமாகவே விளங்கும் புஷ்கரில் முக்கியக் கோயிலாக காயத்ரி தேவி ஆலயம் திகழ்கிறது. காயத்ரி தேவி பூவுலகில் தோன்றியதற்கு ஒரு காரணமும் உள்ளது. ஒரு முறை புஷ்கரில் யாகம் நடத்த பிரம்ம தேவர் முடிவு செய்தார். பொதுவாக யாகத்தை தம்பதிகளாக இணைந்து நடத்துவது வழக்கம். இதனால் தன் மனைவியான சாவித்ரியை யாகம் நடத்தும் இடத்துக்கு அழைத்தார் பிரம்ம தேவர்.
யாகம் குறித்து அறிந்த இந்திரன் உள்ளிட்ட தேவர்களும் அங்கே வந்து சேர்ந்தனர். ஆனால் யாகம் தொடங்கும் வரை, சாவித்ரியால் வர இயலவில்லை. இதனால் கோபம் கொண்ட பிரம்மாவின் கோபத்தை தணிக்க, காயத்ரியை தோற்றுவித்தனர் தேவர்கள். அவள் யாகத்துக்கான புனிதத் தன்மை பெற, பசுவின் வாய் வழியே செலுத்தி வெளியே எடுத்தனர். காயத்ரி தேவியை மணம்முடித்து, யாகத்தை தொடங்கினார் பிரம்ம தேவர்.
அப்போது அங்கு வந்துசேர்ந்த சாவித்ரி, தான் வரும் முன்னரே யாகத்தைத் தொடங்கியதாலும், காயத்ரியை மணந்ததாலும் கோபம் கொண்டார். அதனால், இந்த புஷ்கர் நகரைத் தவிர வேறெங்கும் பக்தர்கள் உன்னை வழிபட மாட்டார்கள் என்று பிரம்மதேவரை சபித்து சாபம் விட்டாள். அதனால்தான் பிரம்மாவுக்கு வேறு எங்கும் தனி ஆலயம் அமையவில்லை.
இத்தகு புராணப் பெருமை கொண்ட புஷ்கரில் காயத்ரிக்கு தனி ஆலயம் உள்ளது. குன்றின் மீது எழுந்தருளியுள்ள அன்னை காயத்ரி தேவி, அவளது ஆலயம் தேடி வரும் பக்தர்கள் வேண்டிய வரத்தை அளிக்க வல்ல சக்தியாக விளங்குகிறாள். இந்த சக்தி பீடத்துக்கு நாடெங்கிலும் இருந்து பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.