முகப்பு
வெள்ளிமணி

தாந்திரீக வழிபாட்டில் தர்மசாஸ்தா!

கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாகத் திகழும் ஐயப்பனுக்கு தமிழகத்தில் பல ஊர்களில் ஆலயங்கள் உருவாகி வருகின்றன.

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:24 PM
பகிர்:

கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாகத் திகழும் ஐயப்பனுக்கு தமிழகத்தில் பல ஊர்களில் ஆலயங்கள் உருவாகி வருகின்றன. அவ்வகையில் சென்னை, புறநகர்ப் பகுதியில் பம்மல் சங்கரா நகரில் அமைந்துள்ளது ஸ்ரீதர்மசாஸ்தா - ஸ்ரீகுருவாயூரப்பன் திருக்கோயில். ஐயப்ப பக்தர் ஒருவரின் கனவில் தோன்றி தனக்கு ஓர் ஆலயம் அமைத்துக்கொண்டான் ஐயன்.

ஸ்ரீதர்மசாஸ்தா (ஐயப்பன்) ஆலயம் சங்கரா நகரில் செங்கழுநீர் மலை என்று அழைக்கப்படும் சிவன்மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. அருகில் திருமாலின் திருநீர்மலையைக் காணலாம். ஐயப்பன் என்ற பெயருக்கு ஏற்ப இந்த ஆலயம் சிவன் மலைக்கும் - திருநீர்மலைக்கும் நடுவில் அமைந்துள்ளது ஒரு தெய்வீகச் சிறப்பு.

இவ்வாலயத்தில் முதன் முதலில் 2008ஆம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது ஐயப்பனின் விக்ரகம். சூரிய பிரபையுடன் சின்முத்திரைக் கொண்டு தவக்கோலத்தில் காட்சி தரும் ஐயனின் திருவுருவம் அற்புத அழகு. கருவறையில் நின்ற கோலத்தில் அம்பு - வில்லுடன் ஒரு சிறிய ஐயப்பனின் விக்ரகத்தையும் தரிசிக்கலாம்.

இடம்புரி விநாயகர், அஷ்டபுஜ துர்கையாக அருள்பாலிக்கும் மாளிகபுரத்து அம்மன், மரகதலிங்கம், ஸ்ரீபாலசுப்ரமண்ய சுவாமி, ஆஞ்சநேயர், நாகராஜர், பெரிய கருத்த சுவாமி, சிறிய கருத்த சுவாமி ஆகியோரின் சந்நிதிகளும் கொண்டு ஆலயம் அழகுறமிளிர்கிறது

ஐயப்பன் சந்நிதிக்கு அருகில் 2010ஆம் ஆண்டு குருவாயூரப்பன் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இங்குள்ள மூலவிக்ரகம் கேரளாவில் உள்ள ஸ்ரீகுருவாயூரப்பனைப் போன்று அமைந்துள்ளது சிறப்பு.

இவ்வாலயத்தின் தல விருட்சம் வில்வ மரம். அரசு, வேம்பு, வில்வம் என மூன்று மரங்களும் பிணைந்திருக்க அதன் கீழ் நாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

தினசரி காலை ஐந்தரை மணிக்கு நடை திறக்கப்படுகிறது. கேரளாவிலிருந்து வந்து இங்கு வசிக்கும் நம்பூதிரி பெருமக்களால் கிரமமாக தாந்திரீக முறையில் அனைத்து ஹோமங்களும், பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. இரவு 8.30 மணிக்கு "ஹரிவராசனம்' பாடி நடை அடைக்கப்படுகிறது.

தினசரி ஐயப்பனுக்கு நடைபெறும் அஷ்டாபிஷேகம், சனிக்கிழமை தோறும் நடைபெறும் கற்பூர ஜோதி பிரதட்சிணம், குருவாயூரப்பன் சந்நிதியில் நடைபெறும் நாராயணீயம், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், அன்னப் பிராஸனம் போன்றவை இவ்வாலயத்தின் சிறப்பு அம்சங்கள்.

ஐயப்பன் சந்நிதியில் உடல் ஆரோக்யம் வேண்டி நீராஞ்சன வழிபாடும், ஆயுள் விருத்தி வேண்டி சனிப்பீரிதி பூஜைகளும் நடக்கின்றன.

தற்போது இவ்வாலயத்தில் கொடிமரம் அமைக்கும் பணி நடக்கிறது. துலாபார வழிபாட்டிற்கு வேண்டிய வசதிகள் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜுன் 20 அன்று ஸ்ரீஐயப்பன் பிரதிஷ்டாதினம் நடந்தது. ஜுன் 22 அன்று குருவாயூரப்பன் பிரதிஷ்டாதினம் விசேஷ பூஜை, ஹோமங்களுடன் நடக்கிறது.

அமைவிடம்: பல்லாவரம் பம்மல் ரெட்டைப்பிள்ளையார் சந்நிதியிலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் ஸ்ரீசங்கராநகரில் உள்ளது.

தகவலுக்கு: 94444 44238

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.