இறை உரு கண்டு ஏமாறாதே!
மனிதர்களில்தான் ஆண், பெண் என்ற வேறுபாடு இருக்கிறது. தெய்வத்துக்கு இந்த வேறுபாடு இல்லை. உயர்திணை அஃறிணையென்று கூடப் பிரிக்க முடியாதே.
மனிதர்களில்தான் ஆண், பெண் என்ற வேறுபாடு இருக்கிறது. தெய்வத்துக்கு இந்த வேறுபாடு இல்லை. உயர்திணை அஃறிணையென்று கூடப் பிரிக்க முடியாதே. அப்படியானால் தெய்வங்களைச் சொற்பிரபஞ்சத்தில் எப்படிப் பிரிப்பது? தெய்வத்திற்கென்று தனியே ஒரு பிரிவு வகுப்பதா?
தமிழர் தம் வாழ்க்கையில் அப்படிப் பிரிவு வகுத்திருந்தால் இலக்கணத்திலும் வகுத்திருப்பார்கள். தெய்வத்துக்கு சாதி, திணை, பால் என்ற பிரிவு இல்லாவிட்டாலும் மனிதன் தன் மனத்துள் தியானிப்பதற்கும், உரு அமைத்து வழிபடுவதற்கும் சில சம்பிரதாயம் வேண்டும். தனக்குத் தெரிந்த உருவத்தை எண்ணுவதுதான் மனிதன் இயல்பு. ஆகவே தெய்வத்தை சிந்தனைக்குக் கொண்டு வந்து உரு அமைக்கும்போதும் பேச்சுக்குக் கொண்டு வந்து உரையாடும்போதும் தான் அறிந்த திணையுள்ளும் பாலுள்ளும் வைத்து வழங்கினான்; தேவன் வந்தான், தேவி வந்தாள் என்று பேசினான்.
இப்படிப் பேசின மாத்திரத்தில் தெய்வங்களுக்கும் இத்தகைய பிரிவு உண்டு என்று கூறுவர் சிலர். தமிழன் அப்படிச் செய்யவில்லை. உருவமும் திணையும் பாலும் வகுப்பது வழக்கு நிலையில்; அவற்றைச் சொல்லுலகத்தில் வழங்கும்போதுதான் தெய்வம் அவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டது என்ற உண்மையைத் தமிழன் அறிந்திருந்தான்.
""ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமிலாற்கு ஆயிரம்
திருநாமம் பாடிநாம்தெள்ளேணங் கொட்டாமோ''
என்று மாணிக்கவாசகர் பாடுகிறார். ஆயிரம் திருநாமம் சொல்லிக்கொட்டும்போதே, இறைவன் ஒரு நாமமும் இல்லாதவன் என்ற உண்மை உள்ளத்தின் அடித்தட்டிலே ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அதுபோலத்தான் தெய்வத்தை ஆணாகவும் பெண்ணாகவும் பால் வகுத்துத் தமிழில் பேசும்போதே, அத்தெய்வம் இப்பிரிவுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது என்ற உணர்ச்சி தமிழரிடம் இருந்தது. அப்படி இருந்ததென்பதைத் தொல்காப்பியர் ஒரு சூத்திரத்தில் புலப்படுத்துகிறார்.
""ஆணும் பெண்ணும் அல்லாத அலியும் ஆண் பெண் உயர்திணை அஃறிணை என்ற பிரிவில் அடங்காத தெய்வமும் இன்னபடிதான் பிரித்துச் சொல்ல வேண்டும் என்று வகுத்துத் திட்டமிடும் பாற்பிரிவையுடையன அல்ல. ஆகையால் பாலைக் குறிக்கும் ஈற்றெழுத்துக்களை உடையன அல்ல. ஆனாலும் சொல்லளவில் அவை ஏதேனும் ஒரு பாலிலே பிரிந்து நின்று வழங்கப்பெறும்'' என்ற அர்த்தம் வரும்படி ஒரு சூத்திரம் செய்திருக்கிறார்.
""அலிகளையும் தெய்வத்தையும் வந்தான் போனான், வந்தாள் போனாள் என்று சொல்வதைக் கொண்டு "இப்படிப் பேசும் தமிழனுக்கு அலியின் லட்சணம் தெரியவில்லை' என்று நினைக்காதே. பைத்தியக்காரத் தமிழன் தெய்வத்தையும் தன்னைப்போல வேட்டியும் புடைவையும் கட்டுவது என்று நினைத்துவிட்டானென்று பரிகாசம் செய்யாதே. அந்தப் பாற்பிரிவைக் குறிக்கும் குறியீடுகள் அவர்களுக்கு உரியவை அல்ல; கடன் வாங்கிக் கொண்டவையே.'' என்று அவர் இதன் மூலம் சொல்லாமற் சொல்லவில்லையா?
""கடவுள் இந்த அவதாரம் எடுத்ததனால் இதுதான் அவர் திருவுருவம் என்று மயங்காதே, நம்மைப் போலப் பெண்டு பிள்ளைகளுடன் வாழ்பவரென்று ஏமாந்து போகாதே. எல்லாம் வேஷம்; நமக்காக, நாம் உய்வதற்காக, கடன் வாங்கிக்கொண்டவை'' என்று சமயக் குரவர்கள் சொல்வது போல இருக்கிறதல்லவா இது? ஆம், ஒன்று சொல்லைப் பற்றிய தத்துவம்; மற்றொன்று பொருளைப் பற்றிய தத்துவம். சொல்லின்றிப் பொருள் இல்லை; பொருளின்றிச் சொல் இல்லை.