மேல்கோட்டையில் மணவாள மாமுனிகள் அவதார உற்ஸவம்
வைணவ ஆசார்யர்களில் முக்கியமான இடத்தை வகிப்பவர் ஸ்ரீமணவாள மாமுனிகள். ஸ்ரீமந் நாராயணன் தொடங்கி, பூவுலகில் ஸ்ரீமந் நாதமுனிகளை முதலாவதாகக் கொண்டு மாமுனிகள் ஈறாக அமையப் பெற்ற ஆசார்ய பரம்பரை, வைணவர்களால் பெரிதும் கொண்டாடப்படுகிறது.
வைணவ ஆசார்யர்களில் முக்கியமான இடத்தை வகிப்பவர் ஸ்ரீமணவாள மாமுனிகள். ஸ்ரீமந் நாராயணன் தொடங்கி, பூவுலகில் ஸ்ரீமந் நாதமுனிகளை முதலாவதாகக் கொண்டு மாமுனிகள் ஈறாக அமையப் பெற்ற ஆசார்ய பரம்பரை, வைணவர்களால் பெரிதும் கொண்டாடப்படுகிறது. ஐப்பசி மூலத்தில் கி.பி.1370ல் தாமிரபரணிக் கரையான ஆழ்வார் திருநகரியில் அவதரித்த மாமுனிகள், வைணவத் தமிழை வளர்த்தெடுத்துப் பரப்பியதில் சிறப்பிடம் பெற்றார். அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் என்ற இயற்பெயர் கொண்ட மாமுனிகள், சுவாமி ராமானுஜர் மீது அளவற்ற பக்தி கொண்டவர். ஸ்ரீமந் நாதமுனிகள் தொகுத்தளித்த திவ்யப் பிரபந்தத்துடன் இராமானுச நூற்றந்தாதியையும் சேர்த்து, நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என சீருடனும் சிறப்புடனும் அழைக்கும்படி செய்து, தெய்வத் தமிழ் பரவக் காரணமானார்.
கர்நாடகம், மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள மேல்கோட்டை என்ற சிற்றூருக்குப் பெரிய பெருமை உண்டு. திருநாராயணபுரம் என்றும் அழைக்கப்படும் இங்கே கருவறையில் மூலமூர்த்தியாக திருநாராயணன் சங்கு சக்ரத்துடன் சதுர்புஜம், அபயஹஸ்தம், தண்டாயுதம்(கதை), ரத்னம் இழைத்த தங்கக்கிரீடம், பூணூல், நாகாபரணம் முதலிய திவ்ய அலங்காரத்துடன் சேவை சாதிக்கிறார். தாயார் யதுகிரிநாச்சியார். ஆழ்வார் ஆசார்யர்களுக்கு தனி சந்நிதிகள் உள்ளன. இது ராமானுஜரின் அபிமானத் தலம், நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் செல்வநாராயணன், திருநாரணன், வண்புகழ் நாரணன், வாழ்புகழ்நாரணன் என்று நான்கு திருநாமங்களையும் அனுபவிக்கலாம். இவை எல்லாம் இந்தப் பெருமானுக்கே உரிய திருநாமங்கள்.
ஸ்ரீரங்கத்தில் இருந்து தொண்டனூருக்கு ராமானுஜர் வந்ததும் அவருக்கு நெற்றிக்கு இட்டுக் கொள்ளும் திருமண் தீர்ந்துவிட்டது. அதை யோசித்தபடியே படுத்தவரின் கனவில் ஸ்ரீமந் நாராயணன் தோன்றி "எனது அருகில் திருமண் நிறைய உள்ளது. இங்கே துளசிச் செடிகள் மத்தியில் உம்மை எதிர்பார்க்கிறேன்' என்றாராம். மறுநாள் காலை ராமானுஜர் அங்கே சென்று பூமியைத் தோண்டியதில் திருமண்ணும் திவ்யமூர்த்தியும் கிடைக்க அங்கே அழகான கோயில்கட்டி பெருமாளை பிரதிஷ்டை செய்தார். ராமானுஜரின் சீடர்களுடன் அவருடைய யாத்திரையில் எல்லா உதவிகளையும் செய்த அங்குள்ள பழங்குடி மக்களை கெüரவிக்கும் வகையில் திருக்குலத்தார் என்று பெயரிட்டார். அவர்களின் சேவையை மதிக்கும் விதமாக, கோயில் உற்ஸவங்களில் பங்கெடுக்கச் செய்து, கருவறை வரை முன் சென்று பெருமானை தரிசிக்கவும் கல்யாணி தீர்த்தக் குளத்தில் புனித நீராடவும் செய்ய வைத்தார். இந்த வகையில் சிறப்பு வாய்ந்த தலமாக விளங்குவது மேல்கோட்டை திருநாராயணபுரம். ஸ்ரீராமானுஜரின் மறு அவதாரம் என்று கொண்டாடப்படும் மணவாள மாமுனிகளுக்கு ஐப்பசி மூலத்தில் அவதார உற்ஸவம் சிறப்புடன் நடைபெறுகிறது.
அக். 28ஆம் தேதி திருப்பல்லாண்டுடன் இந்த வைபவம், மணவாள மாமுனிகளின் சந்நிதிக்கு உபய நாச்சிமாருடன் செல்வப்பிள்ளை, ஸ்ரீராமானுஜர் ஆகியோர் எழுந்தருளி தீர்த்தப் பிரசாதத்துடன் துவங்குகிறது.
முதல் நாளில் பெரியாழ்வார் திருமொழி கோஷ்டி பாராயணம் என ஒவ்வொரு நாளும் பிரபந்த கோஷ்டி பாராயணம் நடைபெறுகிறது. மணவாள மாமுனிகளின் திருநட்சத்திரமான ஐப்பசித் திருமூல நட்சத்திரத்தில் (நவ.7) மாமுனிகள் மங்களாசாசனம் நடைபெறுகிறது. நவ.8ம் தேதியுடன் நிறைவடையும் இந்த உற்ஸவத்தில், பல்வேறு வைபவங்கள் பக்தர்களின் பங்கேற்புடன் நடைபெறுவது சிறப்பு. ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் அதிபதி ஸ்ரீசடகோப ராமானுஜ ஜீயரின் மங்களாசாசனத்துடன் நிகழ்ச்சிகள் ஏற்பாடாகியுள்ளன.
தகவலுக்கு: 09449184542