1008 அண்டங்களையும் 108 யுகங்களாக ஆட்சி புரிந்த சூரபத்மன் கொடுமையினாலே இந்திரன் மகன் சிறையிலே இருந்தான். இந்திரனுக்கு ஒரே மகன். அவன் பேரு சயந்தன். நாமிருவர் நமக்கு ஒருவர்.
அந்த மகன் மீண்டு வந்ததனாலே மிகுந்த மகிழ்ச்சி இந்திரனுக்கு. முருகப் பெருமானுக்கு ஏதாவது செய்யணும். பிரதக்ஞன் - நன்றியுணர்வு.
"நான் வளர்த்த தெய்வயானை அம்மையாரை முருகப்பெருமானுக்கு திருமணம் செய்து கொடுக்கணும். நான் எப்படி சொல்லுவேன். ஆண்டவன் எங்கே, நான் எங்கே?'
பிறகு, பிரம்மதேவர் கிட்டபோய் சொன்னார். அவர் தலையைத் தடவிக்கொண்டார். முன்னே குட்டினதே இன்னும் பிளாஸ்திரி போட்டிருக்குதே.
ஸ்ரீமந் நாராயணர் கிட்ட போனார்.""ஐயனே, தெய்வயானையை முருகப்பெருமானுக்கு திருமணம் செய்துகொடுக்கணும், நீங்க வந்து சொல்லணும்''.
"என் குழந்தைதானே' என்று கூறிய ஸ்ரீமந் நாராயணரின் நினைவு சற்றே பின்னோக்கிப் போகின்றது.
சிவபெருமான் நெற்றிக் கண்ணிலே வந்தவர் முருகப் பெருமான். கண்ணிலே வந்த பெருமானைக் கண்ணிலே வந்தவர்கள்தானே கல்யாணம் செய்துகொள்ள வேண்டும்.
முந்தி ஒரு முறை சிவபெருமான் ஆனந்த நடனம் புரிந்தார். அதை அருகிலே இருந்து நாராயணர் சேவித்தார். முன்பு நிகழ்ந்த அந்த ஆனந்த நடனத்தை நினைவு கூர்ந்தார். அவரது கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வந்தது. அந்த இரண்டு கண்களிலிருந்து இரண்டு பெண்மணிகள் வந்தார்கள். ஸ்ரீமந் நாராயணர் நாபியிலே பிரம்மதேவர் பிறந்தார். சித்தத்திலே சித்தஜன் என்ற மன்மதன் பிறந்தான். கண்களிலே இருந்து இரண்டு பெண்மணிகள். மூத்தவள் அமுதவல்லி, இளையவள் சுந்தரவல்லி. அவர்கள் வேதாகமங்களை ஓதாதுணர்ந்தார்கள்.
சுந்தரவல்லி கடைக்குட்டி. அவள் தன் தமக்கையாரைப் பார்த்து, "அமுதவல்லி நாம் ஒன்றாகப் பிறந்தோம். ஒன்றாக வளர்ந்தோம். எதிர்காலத்தில் ஒன்றாக வாழ வேண்டும். வேற்றுமை வேதனை தரும். ஒற்றுமை உயர்வு தரும். நாம் கோயிலுக்குப் போனா இரண்டு கைகளையும் கூப்பி வணங்குகிறோம். என்ன பொருள்?
இந்த வலக்கை உண்ணுகிறது. இடக்கை அலம்புகிறது. தொழிலிலே வேற்றுமையிருந்தாலும் கடவுள் சந்நிதி முன்னே ஒன்றிவிட வேண்டும். அந்த நமஸ்காரம் ஒற்றுமையைக் காட்டும் முத்திரையாகும்.
ஆகவே, நீயும் நானும் ஒன்றாக வாழ வேண்டும். இருவரும் ஒரே கணவனை அடைய வேண்டும்' என்றார்கள். அவர்களே வள்ளி, தெய்வானை ஆவார்கள்.
- திருமுருக கிருபானந்த வாரியார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.