முகப்பு
வெள்ளிமணி

புத்திர பாக்கியம் அருளும் திருக்காஞ்சனகிரி காஞ்சனேஸ்வரர்!

தொண்டை நாட்டில் பாடல் பெற்ற 32 திருத்தலங்களுள் 10-வது திருத்தலமாகப் போற்றப்படுவது திருவலம் வில்வநாதீஸ்வரர் திருக்கோயில்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:05 AM
பகிர்:

தொண்டை நாட்டில் பாடல் பெற்ற 32 திருத்தலங்களுள் 10-வது திருத்தலமாகப் போற்றப்படுவது திருவலம் வில்வநாதீஸ்வரர் திருக்கோயில். கஞ்சன் எனும் அசுரன், சிவனை நோக்கி தவம் செய்ய ஏற்ற இடம் தேடி வந்தபோது திருவலத்துக்கு வடகிழக்கில் இயற்கை எழில் சூழ்ந்த மலையை தேர்வு செய்தான். பின்னர், திருவலம் வில்வநாதீஸ்வரர் நோக்கி அசுரன் கஞ்சன் பல ஆண்டுகளாகத் தவம் செய்தான். அதனால் அந்த மலை கஞ்சன்கிரி என பெயர் பெற்றது. பின்னர் நாளடைவில் காஞ்சனகிரி என்றும் தற்போது திருக்காஞ்சனகிரி என்றும் அழைக்கப்பட்டுவருகின்றது.

கஞ்சன் பல ஆண்டுகள் தவம் புரிந்தும் இறைவனின் அருளைப் பெறமுடியவில்லை. இருந்தபோதிலும் கஞ்சன் மனக்குறையுடனும், சோர்வுடனும் தொடர்ந்து தவம் புரிந்து வந்தான். அப்போது சிவனடியார் ஒருவர் திருவலம் வில்வநாதீஸ்வரருக்குத் தினமும் காஞ்சனகிரி மலைக்குச் சென்று நறுமணம் மிக்க மலர்கள் பறித்து வந்து மாலைகள் தொடுத்தும் நீவா ஆற்றில் (பொன்னை) இருந்து தண்ணீர் கொண்டுவந்து அபிஷேகம் செய்தும் பூஜித்துவந்தார்.

கடுந்தவம் புரிந்தும் இறைவனுடைய திருக்காட்சி கிடைக்கப் பெறாததால் அசுரன் கஞ்சன் சினம் கொண்டிருந்தான். அந்த சமயத்தில் சிவனடியார் ஒருவர் சிவனுக்கு மாலைகள் சூட்டுவதற்கான மலர்களை காஞ்சனகிரி மலைக்குச் சென்று பறித்துக்கொண்டிருப்பதைக் கண்டான். சிவனடியாரிடம் இருந்த மலர்களைப் பிடுங்கி எறிந்து சிவபெருமானுக்கு பூஜை செய்ய முடியாதபடி தொடர்ந்து இடையூறுகள் செய்துவந்தான். இந்நிலையில் சிவபூஜை பணியானது அசுரன் கஞ்சனால் தடைபட்டுவிட்டதே என்று எண்ணி சிவனடியார் மனம் வருந்தினார். திருவல்லநாதரான வில்வநாதீஸ்வரரை நோக்கி முறையிட்டார். அதன் பேரில் சிவனடியாரின் துயர் துடைக்க சிவபெருமான் நந்தியம்பெருமானை அனுப்பி வதம் செய்து வரும்படி பணித்தார். அவரின் ஆணையை ஏற்று நந்தியம்பெருமான் காஞ்சனகிரி மலைக்குச் சென்று தன் கூர்மையான கொம்புகளால் அசுரனை வதம் செய்து அழித்தார்.

அப்போது கஞ்சனின் உடல் பல பாகங்களாகச் சிதறி விழுந்தது. சிரசு விழுந்த இடம் சீக்கராஜபுரம் என்றும், வலது கால் விழுந்த இடம் வடகால் என்றும், இடது கால் விழுந்த தென் பகுதி தெங்கால் என்றும் அழைக்கப்படுகிறது.

நந்தியம் பெருமானின் கூர்மையான கொம்புகள் அசுரனின் உடலில் பட்ட ஸ்பரிசத்தால் அவனுடைய ஆணவ மலம் நீங்கி அறிவு விளக்கம் பெற்றான். அதனால் தன் நிலை உணர்ந்த கஞ்சனுக்கு ஈசன் தோன்றி காட்சி அளித்தார். அப்போது அசுரன் கஞ்சன் இறைவனை நோக்கி ஐயனே ஆண்டுதோறும் இந்நாளில் தாங்களே அடியேனுக்கு காஞ்சனகிரி மலையடிவாரத்தில் திதி கொடுக்க வேண்டும் என வேண்டினான். அதன்படி ஆண்டுதோறும் திருவலம் காஞ்சனகிரி மலையடிவாரத்தில் வில்வநாதீஸ்வரர் திதி கொடுக்கும் வழக்கம் இந்நாள் வரை தொடர்ந்து நடந்துவருகிறது.

மேலும் திருவலம் வில்வநாதீஸ்வரர் ஆலயத்தில் சிவபெருமானின் முன்பாக அமைந்துள்ள நந்தி, வழக்கத்துக்கு மாறாக எம்பெருமானுக்குப் புறம் காட்டி கிழக்கு நோக்கி அமர்ந்திருப்பார். கஞ்சனைப் போன்று அரக்கன் தோன்றி அடியார்க்கு இடர் தராதிருக்கக் கிழக்கு நோக்கி அமர்ந்திருப்பதாக தல வரலாறு கூறுகிறது.

திருவலத்தில் அருள்மிகு தனுமத்யம்பாள் உடனுறை வில்வநாதீஸ்வரராக அருள்பாலிக்கும் சிவபெருமான், திருக்காஞ்சனகிரியில் காஞ்சனாதேவி உடனுறை காஞ்சனேஸ்வரராக எழுந்தருளி வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் அருளும் வள்ளலாக அருள்பாலித்து வருகிறார். திருமணமாகி குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள், திருக்காஞ்சனகிரி மலை மீது உள்ள குளத்தில் நீராடி ஈர ஆடையுடன் காஞ்சனேஸ்வரரை வலம் வந்த பின்னர் நாகலிங்க மரத்தின் கீழ் உள்ள விநாயகருக்கு வாழைப் பழ மாலை அணிவித்து 9 முறை வலம் வந்து வழிபட வேண்டும். பின்னர்,

அங்குள்ள 1008 சுயம்பு லிங்கங்களுக்குப் பச்சரிசி, வெல்லம் கொண்டு செய்த நைவேத்தியம் படைத்து அங்கேயே வைத்துவிட்டு வரவேண்டும். அப்போது அங்குள்ள ஆயிரக்கணக்கான எறும்பு முதலிய ஜீவராசிகள் உண்டு மகிழ்ந்து வாழ்த்துவதாகவும், அதன் பேரில் மக்கள் பேறு உண்டாவதாகவும் ஐதீகம்.

மலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு வில்வநாதன் என்றும், பெண் குழந்தைகளுக்கு காஞ்சனா, கன்னியம்மாள் என்றும் பெயர் சூட்டுகின்றனர். மேலும் மன நிம்மதி வேண்டி மலை மீது வருவோர்க்கு நிம்மதி கிடைப்பதாகவும், கூறுகின்றனர்.

ராணிப்பேட்டையை அடுத்த லாலாப்பேட்டை அருகே திருக்காஞ்சனகிரி மலை திருவலத்துக்கு வடகிழக்கில் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து ரயில் மூலமாக முகுந்தராயபுரம் ரயில் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து மலை மீதுள்ள ஆலயத்தை ஆட்டோ மூலம் சென்றடையலாம்.

கோயிலுக்கு வடக்கில் 16 கால் மண்டபத்துடன் கூடிய திருமுருகன் திருக்கோயில் திருப்பணி நடைபெற்றுவருகின்றது. வடகிழக்கில் சப்த கன்னிமார்கள் சந்நிதியும், தென் கிழக்கில் 1008 சுயம்பு லிங்கங்களும், மேற்கில் விநாயகர் மற்றும் ஐயப்பன், ஆஞ்சநேயர் சந்நிதிகளும் அமையப்பெற்றுள்ளன. இந்த ஆலயத்தில் பிரதோஷம் மற்றும் மாத பௌர்ணமி நாள்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

தொடர்புக்கு: பாலகிருஷ்ணன்: 90430 11007, சந்திரன்: 90038 48655.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.