முகப்பு
வெள்ளிமணி

வசந்தீசுவரம் விநாயகர்!

செங்கற்பட்டிலிருந்து திருக்கழுகுன்றம் செல்லும் சாலையில் சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள சிறிய குன்றில் பல்லவர்

Updated On : 21 ஆகஸ்ட், 2014 at 5:55 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 12:03 PM

செங்கற்பட்டிலிருந்து திருக்கழுகுன்றம் செல்லும் சாலையில் சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள சிறிய குன்றில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த மூன்று குடவரைக் கோயில்கள் அமைந்துள்ளன. இவை அனைத்தும் பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தைச் சேர்ந்தவையாகும்.

இங்கு அளவில் சற்று பெரியதாக உள்ள குடவரைக் கோயில் "வசந்தீசுவரம்' என அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் தூண்களில் மகேந்திரவர்மனின் சிறப்புப் பெயர்களான "பகாப்பிடுகு', "லலிதாங்குரன்', "சத்ருமல்லன்', "குணபரன்' போன்ற பெயர்கள் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

மேலும், பல்லவர் காலத்தில் சிற்றரசனாக விளங்கிய வயந்தப் பிரியன் மகன் கந்தசேனன் என்பவரால் இக்கோயில் குடைந்து அமைக்கப்பட்டது என்பதையும் அறிகிறோம்.

Advertisement

இங்குள்ள கோயில்கள் "தேவகுலம்' எனப்பெயரிட்டு அழைக்கப்படுகிறது. மற்ற இரு குடைவரைக் கோயில்களில் காணும் கல்வெட்டுகளால் அக்கோயில்கள், "லக்கச்சோமாசிரியார் மகள் தேவகுலம்' என்றும் "பல்லவ பேரரசர் மகள் கொம்மை தேவகுலம்' என்றும் குறிக்கப்படுவதை கல்வெட்டுகளால் அறிகிறோம்.

பல்லவர் காலத்தில் இரண்டு பெண்களால் இக்கோயில்கள் அழகிய சிற்பங்களுடன் அமைக்கப்பட்டதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறோம்.

வசந்தீசுரம் கோயிலின் வெளியே பாறை முகப்பில் காணப்படும் விநாயகப் பெருமானின் அழகிய வடிவத்தைக் கண்டு ஆனந்தம் கொள்கிறோம். அவரது வடிவமே அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் அமைந்துள்ளது. விநாயகர் இடக்காலை மடக்கி, வலக்காலை குத்திட்டு அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். நான்கு கரங்கள். விரிந்த அழகான காதுகள். வலது கீழ்கரத்தை தொடையின்மீது ஊன்றியும் இடதுகை திண்டு போன்ற அமைப்பின்மீது வைத்து, சாய்ந்த நிலையில் அழகிய வடிவுடன் ஒய்யாரமாக அமர்ந்து பக்தர்களின் குறைகளை போக்குகின்றார். விநாயகர் அமர்ந்திருக்கும் கோலத்தைக் காணும்பொழுது மனதில் எல்லையில்லா மகிழ்ச்சி அடைகிறோம். வசந்தீசுவரம் கோயிலில் காணப்படும் அற்புத விநாயகர் வடிவினைக் கண்டு வழிபட்டு நலம் பல அடைவோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.