இல்லறம் நல்லறமாக இல்லில் இன்பம் நிலவ கணவன் மனைவி கருத்தொருமித்து வாழ வேண்டும். திருத்தமான அவ்வாழ்வில் வருத்தம் இருக்காது; திகழும் திருப்தியில் புகழும் பெருமையும் பூத்து குலுங்கும்; குழந்தைகளும் குதூகலமாய் வளரும்.
"அல்லாஹ் ஆரம்பத்தில் ஒருவரைப் படைத்து அவரிலிருந்து அவரின் மனைவியை படைத்ததாக'' கிடைத்தற்கரிய குர்ஆனின் 4-1 ஆவது வசனம் கூற 16-72 ஆவது வசனம் ""உங்களிலிருந்து உங்கள் மனைவிகளைப் படைத்திருக்கிறான்'' என்றுரைக்க, ""வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ் உங்களிலிருந்தே உங்கள் மனைவிகளையும் உங்களுக்காக படைத்தான்'' என்று உறுதிபடுத்துகிறது உயர்மறை குர்ஆனின் 42-11 ஆவது வசனம்.
நமக்காக நம்மிலிருந்து நம் மனைவிகள் படைக்கப்பட்டிருந்தாலும் அப்பெண் யார் என்று நாம் அறிய மாட்டோம். அதனாலேயே, ""எந்த பெண்ணையும் அவளின் விருப்பமின்றி பலவந்தமாக அடைவது ஆகுமானதல்ல'' என்று அல்லாஹ் 4-19 ஆவது வசனத்தில் எச்சரிக்கிறான்.
எனவே திருமணம் இரு மனங்களும் பொருந்தியதாக அமைய வேண்டும். அவ்வாறு அமைந்தால்தான் கணவன் மனைவி கருத்தொருமித்தவர்களாக வாழமுடியும். அதனாலேயே திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்ற சொற்றொடரும் வழங்குகிறது.
ஹிரா குகையில் தனித்திருந்து விழிப்புணர்வு பெரும்வரை விழித்திருந்த விழுமிய கணவருக்குத் தழும்பேறும் வன்பாறைகளில் தனித்து நடந்து சென்று தயாரித்த உணவைக் கொடுத்தார் உத்தமர் முஹம்மது (ஸல்) அவர்களின் சத்தியவதியான முதல் மனைவி கதீஜா நாயகி (ரலி) அவர்கள்.
முதல் வஹி (இறை கட்டளை) பெற்று பதற்றமுற்ற பெருமானார் நபி (ஸல்) அவர்களுக்கு அன்னை கதீஜா (ரலி) அவர்கள் ""அல்லாஹ்வின் மீது ஆணையாக! உங்களுக்கு ஒன்றும் ஆகாது. உறவுகளைப் பேணி, பிறர் துயரைப் போக்கி, வறியவர்களுக்கு உரியன கொடுத்து, விருந்தினர்களை உபசரிக்கும் உங்களை அல்லாஹ் அல்லற்படுத்த மாட்டான்'' என்று கூறிய ஆறுதலில் அடங்கியுள்ள ஆழத்தை, அரும் பொருளை வரலாற்றாசிரியர்கள் ரொனால்ட் போட்லியும் வாஷிங்டன் இர்விங்கும் வியந்து பாராட்டுகின்றனர். கணவர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் போதித்த இஸ்லாத்தை முதல் முதலில் ஏற்ற பெண் கதீஜா (ரலி) அவர்கள். இனிய நபியின் இறைத்தூதை, ஏகத்துவ கொள்கையை ஏற்க மறுத்து ஏற்படுத்திய சிரமங்களை முறியடித்து முஸ்லிம்கள் வாழ கி.பி. 619 இல் இறக்கும் வரை சொத்துக்கள் அனைத்தையும் அர்ப்பணித்த அண்ணலாரின் அருமை மனைவி கதீஜா (ரலி) அவர்கள் கைப்பிடித்த கணவன் மெய் சோராது ஊன்று கோலாய் உதவி ஆன்ற பணி செய்தார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்களும் மறைந்த மனைவியின் சிறப்பைச் சிலாகித்தே பேசுவார்கள்.
""எந்த பெண்ணும் அவளுடைய கணவன் அவள்மீது திருப்தியுற்ற நிலையில் இறந்து விடுவாளாயின் அவள் சுவனபதி செல்வாள்'' அறிவித்தவர் - உம்மு ஸல்மா (ரலி) நூல்- திர்மிதீ. அண்ணல் நபி (ஸல்) அவர்களின் இக் கூற்றுக்குப் பொருத்தமானவர் அவர்களின் முதல் மனைவி கதீஜா (ரலி) அவர்கள்.
""நல்லொழுக்கமுள்ள பெண் அல்லாஹ்விற்கும் தன் கணவனுக்கும் கீழ்ப்படிந்து நடப்பாள்'' என்று திருமறை குர்ஆனின் 4-34 ஆவது வசனம் கூறுகிறது.
""ஒருவனுக்கு ஒழுக்கம் நிறைந்த நல்ல குணமுள்ள மனைவி வாய்ப்பது இறையச்சத்திற்கு அடுத்து அவனுக்குக் கிடைத்த பெரும் பேறாகும்'' அறிவிப்பவர் - அப்துல்லாஹ் பின் அம்ரு பின்ஆஸ் (ரலி) நூல்- முஸ்லிம்.
இந்த இலக்கணத்திற்கு இலக்கியமாய் திகழ்ந்த அஸ்மா அம்மையார் பத்து மைல்கள் நடந்து சென்று புல் அறுத்து அவளின் கணவர் ஜீபைரின் குதிரைக்குக் கொடுப்பார். ஈச்சங்கனிகளைப் பொறுக்கி பொடியாக்கி குதிரைக்குக் கொடுப்பார். இத்தகைய தற்காத்து தற்கொண்டு பேணி தகை சான்ற சொற்காத்து சோர்விலா மனைவியை மாமறை குர்ஆனின் 4-34 ஆவது வசனம் ""கருத்தொத்த மனைவி கணவன் வெளியில் சென்ற பொழுதும் அல்லாஹ்வின் பாதுகாப்பில் தன்னைக் காத்து கணவனின் பொருள்களையும் பேணிக் காப்பாற்றுவாள்'' என்று பெருமைப் படுத்துகிறது.
ஒரு சமயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டாம் மனைவி ஆயிஷா (ரலி) அவர்களை உற்று பார்த்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஆயிஷா (ரலி) அவர்கள் அப்படி பார்ப்பதின் காரணத்தைக் கேட்டார்கள். ""ஈர்க்கும் உன் அழகில் கண்கள் கட்டுண்டு கிடக்கின்றன. நான் உன் மீது கொண்டுள்ள பிரியம் பேரீச்சம்பழத்தைத் தேனில் தோய்த்து சாப்பிடுவதை விட பிரியமானது'' என்று எம்பெருமான் முஹம்மது (ஸல்) அவர்கள் மொழிந்தார்கள். உடனே ஆயிஷா (ரலி) அவர்கள் ""நான் உங்கள் மீது கொண்டுள்ள பிரியம் வெண்ணையில் தேன் கலந்து சாப்பிடுவதைவிட பிரியமானது'' என்று பதிலிறுத்தார்கள்.
கணவன் மனைவி பண்பு, பாசம், நேசம் மிகுந்து உரையாடலிலும் உள்ளன்பை வெளிப்படுத்தும் பாங்கைப் பாருலகுக்குப் பறை சாற்றும் நிறைவான நிகழ்ச்சி.
""உங்களில் சிறந்தவர்கள் உங்கள் மனைவியர்களிடம் சிறந்தவர்கள். உங்களுக்கு உங்களின் மனைவியர் மீது உள்ள உரிமைகள் போன்று அவர்களுக்கும் உங்கள்மீது உரிமைகள் உள்ளன.'' அறிவிப்பவர்- அபூஹீரைரா (ரலி) நூல் -புகாரி, திர்மிதீ.
ஒருமுறை முஹம்மது (ஸல்) அவர்கள் வீட்டிற்கு வரும்பொழுது ஆயிஷா(ரலி) நீர் பருகிக் கொண்டு இருந்தார்கள். நீதர் நபி (ஸல்) அவர்கள் நீர் பருகுவதை நிறுத்துமாறு கூற ஆயிஷா (ரலி) அவர்கள் நிறுத்தினார்கள். குவளையை கையில் வாங்கிய வள்ளல் நபி(ஸல்) அவர்கள் குவளையின் எப்பக்கம் வாய் வைத்து குடித்தார் என்று கேட்டு அப்பக்கமே அவர்களும் வாய் வைத்து குடித்தார்கள்.
கணவன் மனைவி கருத்தொருமித்த வாழ்வில் பொருத்தமான இந்நிகழ்ச்சி இவ்வுலகில் வாழ்வோருக்கு இனிய பாடம் இயம்புகிறது.
""ஒருவன் தன் மனைவியுடன் எப்பொழுதும் அதிருப்தியில் இருக்க வேண்டாம். அவளின் ஒரு குணம் பொருந்தாது இருப்பினும் பிறிதொரு குணம் பொருத்தமாயிருக்கும்'' அறிவிப்பவர் -ஜாபர் (ரலி). நூல்- முஸ்லிம். இந்நன்மொழி "ஊடும் குணமும் கூடி மகிழும் நாடும் குணமாகி விடும்' என்று குறிப்பிடுகிறது.
அருமறை குர்ஆன் கூறும் முறையில், அண்ணல் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் நடந்து காட்டிய வழியில் நாமும் வாழ்ந்து வல்ல அல்லாஹ்வின் நல்லருளைப் பெறுவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.