வெள்ளிமணி

வராகி காட்டிய வழி!

பிரம்மா, விஷ்ணு, சிவன், குமரன், இந்திரன், யமன் மற்றும் திருமாலின் மற்றொரு அம்சமாகத் தோன்றிய வராகம் ஆகிய தெய்வங்களின் சக்திகள் முறையே, பிராமி, வைஷ்ணவி, மகேஸ்வரி,

இரா. அமுதன்

பிரம்மா, விஷ்ணு, சிவன், குமரன், இந்திரன், யமன் மற்றும் திருமாலின் மற்றொரு அம்சமாகத் தோன்றிய வராகம் ஆகிய தெய்வங்களின் சக்திகள் முறையே, பிராமி, வைஷ்ணவி, மகேஸ்வரி, கௌமாரி, இந்திராணி, சாமுண்டி மற்றும் வராகி என உருக்கொண்டனர். இவர்கள், மக்களுக்கு அல்லல் இழைத்து வந்த அசுரர்களை வதம் செய்வதற்காக தோன்றி, அவர்களை அழித்தனர் என சாக்த நூல்கள் சொல்லுகின்றன. இவர்களை சப்த (ஏழு) மாதர்கள் எனவும் அழைக்கின்றனர்.

வராகி: வராக அவதாரத்தின் அவதார சக்தியாக உருவானவள் வராகி! இவள் பன்றி முகமும் பெண்ணின் உடலும் கொண்டவளாய் இருப்பாள். இவளுக்கு ஞான சக்தியை வெளிப்படுத்துவதற்காக மூன்றாவது கண் உண்டு. எட்டு திருக்கரங்களில் எட்டு விதமான ஆயுதங்களுடன் நீல நிறத்தில் காணப்படுவாள். இவள் செந்நிற ஆடையுடுத்தி, நவரத்தின கிரீடம் சூட்டிக் கொண்டு சிம்ம வாகனத்தில் எழுந்தருள்வாள் என புராணங்கள் சொல்லுகின்றன. கலப்பையும் உலக்கையும் இவளது தனிப்பட்ட ஆயுதங்கள்!

ஸ்ரீவித்யா: சக்தி வழிபாட்டு முறையில் ராஜராஜேஸ்வரி எனப்படும் ஸ்ரீ வித்யா வழிபாடு உயர்நிலையானது. இவளுக்கு நான்கு கைகள்! இவற்றில் ஒரு கையில் புஷ்பபாணம் கொண்டிருப்பாள்.

ஆனி மாதம் அமாவாசை கழிந்த பஞ்சமி திதியில் ஸ்ரீவித்யாவின் கையில் இருந்த புஷ்ப பாணங்கள் வராகியாக உருவாயின.

ராஜராஜேஸ்வரி அம்பாளின் படைத் தலைவியாகவும், அதனை முன் நின்று செய்து முடிப்பவளாகவும், அம்பாளுக்கு முன்பாக, தவறுக்கு ஏற்ற தண்டனையை வழங்குபவளாகவும் அமைந்தவள் வராகி.

"தேவி மாகாத்மியம்' என்னும் நூல், "மதுகைட பர்வத வதம், சும்ப நிசும்ப வதம், சண்ட -முண்டர் வதம், மகிஷாசுர வதம்' போன்றவற்றை முன்னின்று நடத்தி அம்பாளுக்கு வெற்றியைத் தேடித் தந்தவள் வராகி என்கிறது.

சோழர்களும் வராகியும்: சோழ, சாளுக்கிய மன்னர்களுக்கு வராகி மீது நம்பிக்கை அதிகம். வெற்றியைத் தடங்கலின்றி தேடித்தரும் உன்னத தேவதை என்ற நம்பிக்கை அவர்களுக்கு உண்டு. வராகி ஜெயசக்தியின் உருவமானதால் சும்ப நிசும்பர்களைக் கொன்ற நிசும்ப சூதனிக்கு, சோழப் பேரரசைத் தோற்றுவித்து நிறுவிய விஜயாலயன், தனி ஆலயம் எடுத்துள்ளான். அந்த ஆலயம் இன்று வரையிலும் வழிபாட்டில் உள்ளது.

சோழர்களின் வெற்றி தெய்வம்: காந்தளூர், வேங்கை நாடு, கங்கபாடி, தடிகைபாடி, நுளம்பாடி,குடமலை நாடு, கொங்கு நாடு, கொல்லம், கலிங்கம், இரட்டைப்பாடி, ஏழரை இலக்கம் போன்ற பல சாம்ராஜ்ய மன்னர்களை வெற்றிக் கொன்றவன் சோழன். ஒவ்வொரு முறையும் போருக்குச் செல்லும் போதெல்லாம் வராகியை வணங்கி விட்டுத்தான் செல்வான். பெரும் வெற்றிகளையும் பெற்றான். அதனால் வராகி, சோழர்களுக்கு "வெற்றி தெய்வம்' ஆகியது.

வராகி காட்டிய வழி: வராகி என்னும் வெற்றி தெய்வத்தின் மீது ஆழ்ந்த பக்தி கொண்டிருந்த ராஜராஜ சோழன் தஞ்சாவூரில் பெரிய கோயிலைக் கட்டுவதற்கு பல இடங்களைத் தேர்வு செய்தான். ஆயினும், இறைவனிடம் இருந்து உத்தரவு எதும் கிடைக்கப் படவில்லை.

ஒருநாள் வேட்டைக்குச் சென்றபோது, ஓர் இடத்தில் அவனுக்கு எதிராக பன்றி ஒன்று எதிர்த்து நின்றது. அதனைத் துரத்திச் சென்றபோது போக்குக் காட்டி பல இடங்களுக்குச் சென்று ஒரு பெரிய திடலில் சுற்றிச் சுற்றி வந்து படுத்துக் கொண்டது. இது அவனுக்கு வியப்பளித்தது.

வராகமாக இருப்பதனால் அதனைக் கொல்லாமல் துரத்தினான். ஆனால் அது எழுந்து நின்று தன் காலால் தரையை உதைத்து பூமியைத் தோண்டியது.

அரண்மனை திரும்பிய ராஜராஜன், அரச ஜோதிடரை அழைத்து விவரம் கேட்டான். கோயில் கட்ட இடத்தினை வராகி தேவி தேர்ந்தெடுத்து கொடுத்து இருப்பதைத் தெரிவித்தார் ஜோதிடர்.

அந்த இடத்தில் பெரிய கோயில் கட்டும் முன்பு வெற்றி தேவதை வராகிக்கு சிறிய தனித்ததொரு சந்நிதியை அக்னி மூலைக்கு அருகில் அமைத்து வழிபட்டு, பின்னர் பணியைத் துவக்கினான். தேவியின் அருளால் உலகம் போற்றும் பெரிய கோயிலை கட்டினான்.

அவன் கடைப்பிடித்த முறையிலேயே தற்போதும் எந்த ஒரு நிகழ்ச்சியைத் துவங்குவதானாலும் முதலில், வராகி பூஜை செய்த பின்னரே, துவக்கும் வழக்கம் பெரிய கோயிலில் உள்ளது.

ஆஷாட நவராத்திரி: சக்தி வழிபாட்டிற்கும் நவராத்திரிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஒன்பது இரவுகளில் சக்தி தேவி தனது அளப்பரிய கருணை மூலம் மக்களின் குறைகளைத் தீர்த்து வைக்கிறாள்.

புரட்டாசி அமாவாசைத் தொடர்ந்து சாரதா நவராத்திரியும், தை அமாவாசையை அடுத்து சியாமளா நவராத்திரியும், பங்குனி அமாவாசைக்கு அடுத்து வசந்த நவராத்திரியும், ஆனி அமாவாசைக்கு அடுத்து, "ஆஷாட நவராத்திரி'யும் கொண்டாடப்படுகிறது.

வராகி ஸ்ரீலலிதா பரமேஸ்வரியின் படைத்தலைவி. அளப்பரிய சக்தி கொண்டவள். நியாயமாக வேண்டுவோருக்கு வேண்டியதை வேண்டியவாறே அருள்பவள்.

விவசாயமும் அதனுடன் தொடர்புடைய தொழில்களில் அபிவிருத்தி அடையவும், வீடு, நிலம் தொடர்பானவற்றில் வெற்றியையும் அருள்பவள். பூமித் தாய்க்காக பயிர்களை விளைவிப்பதும் பலன் தருவதும் இவளது கடமைகளாகக் கொண்டவள்.

ஆஷாட நவராத்திரியின் ஐந்தாம் நாளிலும், எட்டாம் நாளிலும் வராகியைப் போற்றி வணங்கினால் விவசாயச் செழிப்பும், வெற்றிச் சிறப்பும் அடையலாம்.

தஞ்சை பெரியகோயிலில் ஆஷாட மாத சிறப்பு: இவ்வாண்டு, ஆஷாட மாத அமாவாசை 27.06.2014 அன்று வருகிறது. அந்நாளில் இருந்து தசமி முடிய 10 நாட்களும் தஞ்சை பெரிய கோயிலில் குடிகொண்டுள்ள ஸ்ரீ வராகி தேவிக்கு ஹோமம், அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

வராகி தேவிக்கு, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரம் என, பூமியில் விளையும் பொருள்களைக் கொண்டே அலங்காரம் செய்யப்படுகிறது. பக்தர்களுக்கு ஒவ்வொரு நாளும் வெவ்வேறான அலங்காரங்களில் வராகி தேவியைத் தரிசிக்கும் வாய்ப்பு கிட்டும்.

ஆஷாட நவராத்திரியில் வராகி தேவியை வழிபடுவோர் குடும்பப் பிரச்னைகள், கோர்ட் வழக்குகள், நிலத்தகராறு போன்றவற்றில் இருந்து விடுபடலாம்.

ஆஷாட நவராத்திரி நாளில், வராகி அம்மனை தரிசித்து அருள்பெற்று வாருங்கள்.

தொடர்புக்கு: 04362 223384/ 04362 274476/ 98948 49381.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சினிமா காதலி... த்ரிஷா!

சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி: குடியரசு துணைத் தலைவராகிறார்!

படப்பிடிப்புக்கு முன்பே 70% பின்னணி இசையை முடித்த ஸ்பிரிட் படக்குழு!

கத்தாரில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: ஹமாஸ் தலைவர்கள் பலி?

ஆசியக் கோப்பையில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம்பெறாததன் காரணம் இதுதானா? அமித் மிஸ்ரா கூறுவதென்ன?

SCROLL FOR NEXT