தவக்காலத்தில் கடைபிடிக்க வேண்டியவை...
கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்து பிறப்பு விழா எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்தது தவக்காலம்.
கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்து பிறப்பு விழா எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்தது தவக்காலம்.
தவக்காலம் என்பது இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறந்த வெள்ளிக்கிழமை முன்பாக உள்ள நாற்பது நாட்களைக் குறிக்கும். இயேசு இறந்த நாளைத்தான் புனித வெள்ளியாகக் கருதுகிறார்கள். அதற்குப் பிறகு வரும் ஞாயிற்றுக்கிழமை அவரது உயிர்ப்புப் பெருவிழாவான ஈஸ்டர் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.
தவக்காலம் எனப்படும் இந்த நாற்பது நாட்களும் கிறிஸ்தவர்கள் பல்வேறு ஒழுங்குகளையும் ஒழுக்கங்களையும் கடைப்பிடிப்பர். அதில் முக்கியமாகக் கடைப்பிடிக்க வேண்டியவை மூன்று. அவை - ஜெபம், உண்ணாவிரதம் மற்றும் பிறருக்கு உதவி செய்தல்.
ஜெபம் என்பது இறைவனிடம் வேண்டுவது என்பது எல்லாருக்கும் தெரியும். இந்த ஜெபத்தில் நாம் முக்கியமாகக் கடைப்பிடிக்க வேண்டியது - நமக்காக மட்டுமல்லாமல் பிறருக்காகவும் இறைவனிடம் வேண்டிக் கொள்வது. பொதுவாக எல்லாரும் தனக்கு இருக்கும் உடல்நிலைக் குறைபாட்டுக்கோ அல்லது தங்களது பிள்ளைகளின் நல்வாழ்வுக்காகவோ ஜெபிப்பார்கள். இந்தத் தவக்காலத்தில் நமது ஜெபத்தில் பிறருக்காகவும் ஜெபிக்க வேண்டும். உலகில் எத்தனையோ பேர் நமக்கும் கீழான வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு அவர்களுக்காக இறைவனிடம் வேண்டி மன்றாடுவது, நமக்கு மன அமைதியைத் தருவதுடன் ஒரு நல்ல காரியம் செய்தோம் என்ற திருப்தியையும் தரும்.
இரண்டாவதாக உண்ணாவிரதம் இருப்பது. நமக்கு மிகவும் பிடித்தமான உணவு வகைகளை இந்தக் காலத்தில் சாப்பிடாமல் இருக்கலாம்; அசைவ உணவு வகைகளைச் சாப்பிடாமல் இருக்கலாம்; ஏதாவது ஒரு நேர உணவை முற்றிலும் தியாகம் செய்யலாம். இப்படி உண்ணாவிரதம் இருப்பது நமது உடல்நலத்துக்கும் நன்மை பயக்கும்.
ஆனால் இந்த உண்ணாவிரதம் இத்துடன் முடிந்து போகக்கூடாது. இப்படி நாம் சாப்பிடாமல் இருக்கும் உணவைப் பிறருக்குப் பகிர்ந்தளிக்கலாம் அல்லது தவக்காலம் முழுவதும் விரதம் இருப்பதால் மிச்சமாகும் பணத்தை தவக்கால முடிவில் ஓர் ஏழைக் குடும்பத்துக்குக் கொடுத்து உதவலாம். இது இறைவனுக்கு மிகவும் ஏற்புடையதாக இருக்கும். ஏனெனில் இயேசு கிறிஸ்து சொல்லியிருக்கிறார், "வறுமையில் வாடுபவருக்குக் கொடுப்பது எனக்கே கொடுப்பது போல!' என்று.
மூன்றாவது நல்ல காரியம், பிறருக்கு உதவுவது. நமது சாப்பாட்டுச் செலவிலிருந்து ஒரு பகுதியை ஏழை ஒருவனுக்கு உண்ணாநோன்பு மூலம் கொடுத்துவிட்டோம் என்பதுடன் திருப்தியடையாமல், நமக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் பிறருக்கு உதவ வேண்டும் என்ற மனப்பான்மையுடன் செயல்படுவது.
இதில் உடல் உழைப்பு உதவி, பொருள் உதவி மற்றும் உணவு உதவி ஆகியவை அடங்கும்.
இந்த மூன்று காரியங்களையும் தவக்காலத்தில் செம்மையாகச் செய்து முடித்தோமானால் இறைவனுக்கு மிகவும் ஏற்புடையவர்களாக வாழ்வோம். இறைவனும் நமது செயல்களைப் பார்த்து, நமக்கு எல்லாவிதமான அருட்கொடைகளையும் மிகுதியாகத் தந்து நம்மை ஆசீர்வதிப்பார்.