வெள்ளிமணி

துக்காச்சி என்னும் தென் திருக்காளத்தி!

தினமணி

தீராத வெண்தொழுநோயால் மன்னன் அவதிப்பட்டு வந்தான். அதனைப் போக்க பரிகாரம் தேடி பல சிவாலயங்களுக்கு சென்று இறைவனை வழிபட்டான். அச்சமயத்தில் அரசனின் கனவில் அருள்மிகு ஆபத்சகாயர் தோன்றி, தன்னை 48 நாள்கள் வழிபட்டு வந்தால் வெண்தொழுநோய் மறையும் என்று அருளினார். 
மன்னன் இறைவனின் வாக்கின்படி தம் படையுடன் கிளம்பினான். அப்படி பாதிரி வனம் நோக்கி வருகையில் இரவாகிவிடவே, படையுடன் அருகிலிருந்த ஊரிலேயே தங்கினான். 

மீண்டும் ஆபத்சகாயேஸ்வரரான இறைவன் மன்னனின் கனவில் தோன்றி மன்னன் தங்கியுள்ள இடத்திலிருந்து ஒரு கல் தொலைவில் தாம் உள்ளதாக கூறினார். சூரியன் உதயமானதும் மன்னன் எழுந்து நீராடி பாதிரிவனம் வந்து ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரரைக் கண்டு மகிழ்ந்து, தினமும் ஏழு சுற்றுகள் 48 நாள்கள் வலம் வந்து இறைவனைத் தொழுதான். 

மேலும் ஈசனை வழிபடுவதற்குகந்த இலைகளில் ஆறு இலைகளை தினமும் உண்டு வந்தான். ஆபத்சகாயேஸ்வரரின் அருளால் வெண் தொழுநோய் நீங்கப்பெற்றான். இதனால் மனம் மகிழ்ந்த மன்னன் அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரரின் ஆலயத்தை கற்றளி கொண்டு மிக பிரமாண்டமாக அமைத்தான் என்பர்.

சோழ அரசர்களால் நிர்மாணிக்கப்பட்ட இவ்வாலயம், சுமார் 1300 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. கும்பகோணத்திலிருந்து நாச்சியார் கோவில் வழியாக, அரசலாற்றங்கரைக்கு வடக்கில் துக்காச்சி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. 

பல்லவ மன்னனான இரண்டாம் நந்திவர்ம பல்லவனின் (கி.பி. 730- 795) பட்டப்பெயரான "விடேல் விடுகு' என்ற பெயரில் மாற்றம் செய்து துக்காச்சி என்று அழைக்கப்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது. 

துக்காச்சி ஆலயத்தின் மற்றொரு பெயர் தென் திருக்காளத்தி என்பதாகும். ஆந்திர மாநிலத்தில் உள்ள திருக்காளத்தி காற்று பூத தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. அதுபோல் இந்த ஆலயம், அக்காளத்திக்கு இணையாக தென் காளத்தியாக விளங்குகிறது. இதனால் முதலாம் குலோத்துங்க சோழன் "தென் திருக்காளத்தி' என்று பெயரிட்டுப் போற்றியதாக ஆலய வரலாறு தெரிவிக்கிறது.

இவ்வாலய மூலவர் கருவறை விமானம் தாராசுரம் ஸ்ரீ ஐராவதீஸ்வரர் திருக்கோயில் கருவறை விமானத்தை ஒட்டி அமைக்கப்பட்டுள்ளது. கருவறையில் இறைவன் ஆபத்சகாயேஸ்வரர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அன்னை ஸ்ரீ சௌந்தர நாயகியம்மன் தென்திசை நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

இக்கோயிலின் முதல் பிரகாரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் துர்க்கை அம்மன், மற்ற ஆலயங்களில் உள்ளது போன்று வடக்கு நோக்கி அமைந்திராமல் தென்முகம் நோக்கி அருள்பாலிக்கிறாள். மகாமண்டபத்தில் சரப மூர்த்தி தென் திசை நோக்கி சந்நிதி கொண்டுள்ளார். அம்மன் சந்நிதியிலிருந்து இடபுறத்தில் வடக்கு பிரகார மாடத்தில் கிழக்கு நோக்கி நின்ற நிலையில் அருள்புரிகிறார் குபேரன். 

மேலும் இங்கு வராகி அம்மனுக்கு திருமேனி அமைந்திருப்பது சிறப்பு! இவ்வாலய பிரகாரத்தை வலம் வருகையில் ஜேஷ்டா தேவி, சப்தமாத்ரிகா திருமேனிகள் காணப்படுகின்றன. இதன் மூலம் இவ்வாலயத்தின் தொன்மைச் சிறப்பைக் காணலாம்.

தெற்கில் தட்சிணாமூர்த்தி, தென்மேற்கில் கற்பக விநாயகர், வடமேற்கில் வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ முருகப்பெருமான் அமர்ந்த நிலையில் அருள்கின்றனர். வடக்கில் மகாலட்சுமி, கருவறையின் பின்புறத்தில் லிங்கோத்பவர் அமைந்துள்ளார். சண்டிகேஸ்வரர் வடதிசை நோக்கி தனிச்சந்நிதியில் அருள்
புரிகிறார். 

பழங்கால சின்னங்களை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசால் நிதிக்கமிஷன் மூலம் இவ்வாலயத்திற்கு தொகை அளிக்கப்பட்டு திருப்பணி தொடங்கி நடைபெறுகின்றது. மேலும் திருப்பணி வேலைகள் நடக்கவேண்டியுள்ளது. பக்தர்கள் இத்திருப்பணியில் பங்கு கொண்டு நலம் பெறலாம்.
தொடர்புக்கு: 0435 2463354.
- வெ. வைத்தியநாதன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT