குடந்தையில் நீராட குலம் தழைக்கும்!
கங்கையும் காவிரியும் நம் பாரதத் திருநாட்டின் வற்றாத ஜீவ புண்ணிய நதிகளாகும். பண்டை நாள் தொட்டு தென்னகத்திலிருந்து வடக்கும் வடக்கிலிருந்து தெற்கே
கங்கையும் காவிரியும் நம் பாரதத் திருநாட்டின் வற்றாத ஜீவ புண்ணிய நதிகளாகும். பண்டை நாள் தொட்டு தென்னகத்திலிருந்து வடக்கும் வடக்கிலிருந்து தெற்கே குடந்தை ராமேஸ்வரம் ஆகிய நகரங்களில் ஓடும் புனித தீர்த்தங்களில் நீராடுவது பழக்கத்தில் இருந்துள்ளதற்கு சான்றுகள் இருக்கின்றன.
தமிழக மக்களை வாழ வைக்கும் நதிகளில் ஒன்றானதும் தஞ்சைத் தரணியை வளம்கொழிக்கச் செய்வதுமான காவிரித் தாயும், அரசலாறும் மாலையிட்டது போல் சூழப்பெற்றது தான் குடந்தை மாநகரம்.
இந்நகரில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மகாமகப் பெருவிழா வருகிற 22.02.2016 ஆம் தேதி அன்று சூரியன் கும்பராசியிலும் குரு சிம்ம ராசியிலும் வரும் போது பௌர்ணமியில் மக நட்சத்திரம் அன்று இடப லக்னத்தில் சேரும் புனித நாளில் நடைபெற உள்ளது. இப்புனித மகாமகம் நடைபெறுவதற்கான புராண வரலாறு ஒன்று உண்டு.
ஒரு சமயம் கங்கை முதலான ஒன்பது புண்ணிய நதிகள் ஒன்று சேர்ந்து கயிலாய மலை சென்று சிவபெருமானை வணங்கி, எங்களிடத்தில் மகாபாவிகளும், மிகப்பெரிய பாதகங்களைச் செய்தவர்களும், நீராடி எல்லா பாவங்களையும் எங்களிடம் விட்டுவிட்டு நற்கதி அடைந்து வருகிறார்கள். எங்களிடம் விட்ட பாவங்களை நாங்கள் எங்கு சென்று போக்கிக் கொள்வது என்று கேட்டார்கள். அப்போது இறைவன் தீர்த்த தேவதைகளிடம் கீழ்க் கண்டவாறு கூறினார்:
திருக்குடந்தையில் மகாமகத்தன்று மகாமக் குளத்தில் நீராடுங்கள். உங்கள் பாவங்கள் அனைத்தும் உங்களைவிட்டு விலகுவதோடு, அவர்களிடமிருந்தும் பாவங்கள் விலகிவிடும் என்றார். உடனே ஒன்பது தீர்த்தங்களும் கன்னிகை வடிவெடுத்து திருக்குடந்தை வந்து மகாமகக் குளத்தில் புனித நீராடி, வடகரையில் உள்ள அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் வந்தமர்ந்து அருள்பாலித்து வருகின்றனர். இந்தக் குளத்தில் 16 கிணறுகள் உள்ளன. 20 தீர்த்தங்கள் உள்ளன.
மகாமகக் குளத்தில் நீராடுமுன் சங்கல்பம் செய்து நீராட வேண்டும். வடநாட்டில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பராசியில் குரு வரும்போது கும்பமேளா கொண்டாடப்படுவதைப் போல் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சிம்மராசியில் உள்ள மக நட்சத்திரத்தில் வியாழன் வரும் காலத்தில் கும்பகோணத்தில் மகாமகம் என்னும் நீராட்டு விழா நடைபெறுகிறது.
இந்தியாவில் உள்ள புண்ணிய தீர்த்தங்கள் என அழைக்கப்படும் கங்கை, காவேரி, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதை, கிருஷ்ணா, சிந்து, சரயு முதலிய ஒன்பது நதிகளும் இங்குவந்து இந்த மகாமகக் குளத்தில் நீராடி தங்கள் பாவங்களைப் போக்கி புனிதம் அடைகின்றன.
அந்நேரத்தில் இங்குள்ள மகாமகப் பொற்றாமரைக் குளத்தில் நீராடுவது மிகப் பெரிய புண்ணியம். இந்த குளக்கரையில்தான் 9 நதி கன்னிகைகட்கு அவர்களின் உருவத்திற்கொப்ப 9 சிலைகள் உள்ளன.
மகாமகத்தன்று, அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர், அருள்மிகு காசிவிசுவநாதர், அருள்மிகு அபிமுகேஸ்வரர், அருள்மிகு கௌதமேஸ்வரர், அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர், அருள்மிகு நாகேஸ்வரர், அருள்மிகு சோமேஸ்வரர், அருள்மிகு ஆதிகம்பட்ட
விசுவநாதர், அருள்மிகு கோடீஸ்வரர், அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர், அருள்மிகு பாணபுரீஸ்வரர், அருள்மிகு அமிர்தகலசநாதர் ஆகிய பன்னிரண்டு சைவ தலங்களுக்கும், அருள்மிகு சாரங்கபாணி, அருள்மிகு இராமசாமி, அருள்மிகு ஹனுமார், அருள்மிகு சாரநாராயணப்பெருமாள், அருள்மிகு ஆதிவராகபெருமாள் திருக்கோயில், அருள்மிகு இராஜகோபால சுவாமி திருக்கோயில், அருள்மிகு சக்கரபாணி பெருமாள் ஆகிய ஏழு வைணவத்தலங்களுக்கும் சென்று வணங்குவது அதிக பலனைத் தரும்.
மேலே குறிப்பிட்ட பன்னிரண்டு சைவத் தலங்களிலிருந்து சுவாமிகள் எழுந்தருளி மகாமகத்தன்று மகாமகக்குளம் சென்று தீர்த்தமாடுவர்.
அதே போல் ஐந்து வைணவத் தலங்களிலிருந்து பெருமாள் புறப்பட்டு காவிரி சென்று தீர்த்தவாரி செய்வர்.
எனவே இந்த தீர்த்தவாரி நடைபெறும் புனித நாளான 22.02.2016 (பிற்பகல் 12:00மணி முதல் 1:00 மணி வரை) அன்று திருக்குடந்தையில் புனித நீராடி பயன் பெறுங்கள். குடந்தையில் நீராடினால் குலம் தழைக்கும்.