முகப்பு
வெள்ளிமணி

மீனவர்களின் மாப்பிள்ளை!

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற 108 திவ்ய úக்ஷத்ரங்களில், பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் ஆகியோரால் 128 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பெற்ற தலம் சோழநாட்டில் உள்ள திருக்கண்ணபுரம்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:31 PM
பகிர்:

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற 108 திவ்ய úக்ஷத்ரங்களில், பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் ஆகியோரால் 128 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பெற்ற தலம் சோழநாட்டில் உள்ள திருக்கண்ணபுரம்.

முக்தி தலங்களில் முதலாவதான, கவி காளமேகமும் பாடியுள்ள இத்திருத்தலம், ஸ்தலம், தீர்த்தம், வனம், நதி, கடல், நகரம், விமானம் என்னும் ஏழுவிதமான சிறப்புகளைக் கொண்டுள்ளது.

இத்தலத்தின் கருவறையில், மூலவரான நீலமேகப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். உற்சவரான செளரிராஜப் பெருமாளின் திருமேனி பல சதுர்யுகங்களைக் கண்டவராக புராண வரலாறு கூறுகிறது.

செளரி என்ற சொல்லுக்கு யுகங்கள் தோறும் அவதாரம் எடுப்பவன் என்பது பொருள்.

அர்ச்சகர் ஒருவருக்காக தலையில் கேசத்துடன் சேவை சாதித்தருளியதால் இத்திருநாமம் ஏற்பட்டதென்றும் கூறுவர்.

இத்தலத்தில் தனிக்கோயில் நாச்சியார் கண்ணபுரநாயகி மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள், பத்மினி ஆகிய உப நாச்சியார்களுடன் எழுந்தருளியுள்ளது சிறப்பு.

இதில் பத்மினி நாச்சியார், உபரிசரவசு என்ற மன்னனின் புத்திரியாவாள். செளரிராஜனையே மணவாளனாக வேண்டி தவமியற்ற, பெருமாளும் அவ்வாறே தன் இதயகமலத்தில் பத்மினியைக் கொண்டார் என்கிறது பத்ம புராணம்.

கடற்கரையில் வாழ்ந்த இவள், மீனவ குலத்தைச் சேர்ந்தவளாதலால் வலைநாச்சியார் என்று அழைக்கப்படுகிறார். அவளைத் திருமணம் புரிந்ததால் வருடத்தில் ஒரு நாள் மாசிமகத்தன்று மீனவர்கள் வசிக்கும் திருமலைராயன் பட்டினத்திற்கு அவர் எழுந்தருகிறார்.

அவ்வாறு எழுந்தருளும்போது, அவருக்குரிய மரியாதைகள் செய்து, "மாப்பிள்ளை

மாப்பிள்ளை' என்று முழங்குவர். இவ்வாறு பெருமாள் விஜயம் செய்வதால் ஆண்டு முழுவதும் தங்கள் ஜீவனம் குறைவின்று நடப்பதாக அவர்கள் நம்புகின்றனர். விஜயத்திற்கு முதல்நாள் கோயில் சார்பாக மாலை மரியாதை எடுத்துச் செல்லப்பட்டு, மீனவர் சமுதாய தலைவரிடம் அளிக்கப்பட்டு பெருமாள் வருவதை தெரியப்படுத்தப்படுவது நடைமுறையில் உள்ளது.

இத்தலத்தில் பிப்ரவரி 14 இல் கொடியேற்றத்துடன் துவங்கும் மாசிமகப் பெருவிழாவின் பிப்ரவரி ஒன்பதாம் திருநாளன்று (22 ஆம் தேதி மாசிமகத்தன்று) கடல் தீர்த்தவாரிக்கு செல்வதற்கு முன்னேற்பாடாக முதல் நாள் இரவே தங்கப்பல்லக்கில் செளரி

ராஜப்பெருமாள் சர்வாலங்காரங்களுடன் சேவை சாதித்து, அதிகாலை 3 மணிக்கு திருக்கண்ண புரத்தை விட்டு புறப்பட்டு 15 கி.மீ. தொலைவில் உள்ள ஆலங்குடிச்சேரியில் உள்ள மண்டபத்தில் எழுந்தருள, அவ்வமயம் திருமருகலிலிருந்து வரதராஜப்பெருமாளும் இணைந்துகொள்ள, மதியம் 12 மணியளவில் புறப்பட்டு புதுவை மாநிலத்தில் உள்ள திருமலைராயன் பட்டினத்தில் உள்ள வெள்ளை மண்டபத்தில் தங்குகிறார். மாலை பவழக்கால் சப்பரத்தில் தங்க கருடவாகனத்தில் திருமலைராயன்பட்டினம், பட்டிணச்சேரி கடற்கரையில் எழுந்தருளியவுடன், அருகில் உள்ள 8 திருத்தலங்களில் உள்ள பெருமாளின் உற்சவமூர்த்திகளும் இணைந்து கொள்ள, சூரிய அஸ்தமனத்திற்கு முன் தீர்த்தவாரி நடைபெறுகிறது. இக் காட்சியைக் காண பல்லாயிரம் மக்கள் கூடுவர். பின்னர், மீனவ சமுதாயத்தினர் தங்கள் மாப்பிள்ளைக்கு பிரியாவிடை அளிக்க, திருக்கண்ணபுரம் திரும்புவார் பெருமாள்.

தொடர்புக்கு: 04366-270557. இத் திருத்தலம், நாகப்பட்டினம்- நன்னிலம் வழியாக, திருப்புகலூரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது. நன்னிலம் ரயில் நிலையத்திலிருந்து 7 கி.மீ தூரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.