முகப்பு
வெள்ளிமணி

திருக்களரில் தோன்றிய தில்லைநாதன்!

உலகம் புருஷ வடிவமாகவே உள்ளது. அதற்கு மூலாதாரத்தானம் - திருவாரூர். மணிபூரகமாக விளங்குவது திருவண்ணாமலை.

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:34 PM
பகிர்:

உலகம் புருஷ வடிவமாகவே உள்ளது. அதற்கு மூலாதாரத்தானம் - திருவாரூர். மணிபூரகமாக விளங்குவது திருவண்ணாமலை. இதயம் - சிதம்பரம். கண்டம் - காளஹஸ்தி. புருவநடு -காசி என்பார்கள். ஒரு மனிதனுடைய இயக்கம் அவனது இதயத் துடிப்பை அடிப்படையாகக் கொண்டது. அதுபோல் உலகபுருஷனுடைய இயக்கம் சிதம்பரத்தில் விளங்கும் அருள்மிகு நடராஜப் பெருமானுடைய ஆனந்த தாண்டவத்தை அடிப்படையாகக் கொண்டது. தனது ஆடலின் மூலமாக படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து செயல்களைச் செய்கின்ற, எம்பெருமானின் இந்த ஆடல்களை 108 வகையாக வகுத்துள்ளார் பரத நாட்டியத்தை உலகுக்குக் கொடுத்த பரதமுனிவர். அவையே "தாண்டவ பேதங்கள்' எனவும், "கர்ணங்கள்' எனவும் அழைக்கப்படுகின்றன. அதில் பிரமதாண்டவம், அருளிய தலங்களில் திருக்களரும், திருமுருகன்பூண்டியும் சிறப்பித்துச் சொல்லப்படுகின்றது.

ஒரு சமயம் துர்வாச முனிவர் சிவபெருமான் பதஞ்சலி முனிவருக்கும், வியாக்ரபாதருக்கும் தந்தருளிய ஆனந்த தாண்டவ தரிசனத்தை தானும் காண விழைந்தார். இப்பூவுலகில் தகுந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து தேவலோகத்திலிருந்து சிறந்த மலராகிய பாரிஜாதத்தைக் கொண்டுவந்து பயிரிட்டு அப்பகுதியை பாரிஜாதவனமாக்கினார். இறை மூர்த்தங்களை பிரதிஷ்டை செய்து ஒரு தடாகத்தையும் ஏற்படுத்தினார். நடராஜப்பெருமான் தரிசனம் வேண்டி கடுந்தவம் இயற்றினார். அத்தவத்திற்கு மெச்சி சிவபெருமானும் ஒரு மாசிமாத முழுமதிநாளில் தனது பிரமதாண்டவ தரிசனத்தை நல்கினார்.

அந்நிகழ்வு நடந்த தலமே "திருக்களர்' என அழைக்கப்படுகின்றது. களரி என்பதற்குக் கூட்டம், சபை, அரங்கம் எனப் பல பொருள்கள் அடங்கும். நடராஜர் தரிசனம் வாய்த்த இந்த தலம் "களரி' என அழைக்கப்பட்டு பின்பு களர் என்றாயிற்று.

இத்தலத்தில் உள்ள இறைவனும் "களர்முளை நாதர்' எனவும் "பாரிஜாதவனேஸ்வரர்' எனவும் அழைக்கப்படுகின்றார். இறைவி "அமுதவல்லி', "அழகேஸ்வரி' என்ற திருநாமம் கொண்டுள்ளாள். துர்வாச முனிவருக்கு ஈசன் திருநடனக் காட்சியைத் தந்தருளிய தன்மையை திருஞானசம்பந்தரின் இத்தலப் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காணலாம். துர்வாசருக்கு நடனக் காட்சியை நல்கிய பெருமான், முருகனை குருபரனாக எழுந்தருளச்செய்து பஞ்சாக்கர உபதேசமும் செய்வித்தருளினார். மேலும் பிறரைச் சபிப்பதால் தன் தவம் குறையாதிருக்கும் வரத்தையும் பெற்றார் துர்வாசர். கமலையில் (திருவாரூரில்) பிறக்க முக்தி, காசியில் இறக்க முக்தி, தில்லையில் தரிசிக்க முக்தி, அண்ணாமலையை நினைக்க முக்தி ஆனால் திருக்களரில் மேற்சொன்ன செயல்களில் எது செய்தாலும் மோட்சம் கிடைக்கும் என தலபுராணப்பாடல் சிலாகித்து குறிப்பிடுகின்றது.

தேவாரப் பதிகம் பெற்ற காவிரிக்குத் தென்கரையில் 105 ஆவது தலம் திருக்களர். இக்கோயிலில் காணப்படும் கல்வெட்டுகளில் இறைவனை களர் முளைத்த நாயனார் எனவும், அடைந்தார்க்கு அருள் செய்த நாயனார் எனவும் குறிக்கப்படுகிறார். இங்கு காணப்படும் கல்வெட்டுக்கள் மற்றும் செப்பேடுகள் மூலம் இக்கோயிலின் தொன்மைச் சிறப்பை அறியலாம். நான்கு தீர்த்த குளங்கள் அமையப் பெற்றுள்ள தலம். காரைக்குடி கோயிலூர் மடாதிபதிகள் இவ்வாலயத்தில் பல திருப்பணிகள் செய்ததையும், ஆலய திருவிழாக்களை சிறப்புற நடத்தியதையும் இன்றளவும் பேசப்படுகின்றது. "விழா மல்கு திருக்களர்' என்ற ஞானசம்பந்தரின் வாக்கியப்படி இத்தலத்தில் ஆண்டு முழுவதும் பல திருவிழாக்கள், தீர்த்தவாரிகள் நடைபெற்றுவரும் விவரங்கள் கிடைக்கின்றன. அவ்விழாக்களில் மாசி பெüர்ணமி நடராஜர் தரிசனம் சிறப்பானது. ஏனென்றால் துர்வாச முனிவருக்கு சிவபெருமான் தாண்டவ தரிசனம் அளித்தது ஒரு மாசி பெüர்ணமியில் மக நட்சத்திரம் கூடிய நன்னாளில் (மாசிமகம்) உச்சிப்பொழுதில் என்று கூறப்படுகின்றது.

எனவே மாசிமகத்தன்று ஆலயத்தில் கைகூப்பிய நிலையில் உள்ள துர்வாச முனிவர் சந்நிதி முன்பு உள்ள நடராஜப் பெருமானுக்கு மதியம் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று அலங்காரத்துடன் தரிசன சேவை நடைபெறும். அன்று ஆலயத்திற்குச் சென்று துர்வாச தீர்த்தத்தில் நீராடி, உச்சிப் பொழுதில் நடராஜப் பெருமானை தரிசனம் செய்தால் இகபர சுகங்கள் நம்மைத் தேடிவரும் என்று புராணங்கள் அறுதியிட்டுக் கூறுகின்றன. இத்திருத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடியில் இருந்து தெற்கே 21 கி.மீ. தூரத்திலும், திருத்துறைப் பூண்டியிலிருந்து 10 கி.மீ. தூரத்திலும் உள்ளது.

தொடர்புக்கு: 96008 05873, 98430 58499.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.