வெள்ளிமணி

திதி சூன்ய ராசிகள் என்ன செய்யும்?

எனக்கு லக்னாதிபதி கேந்திராதிபத்ய தோஷம் பெற்றிருக்கிறார். இதனால் என்ன விளைவு உண்டாகும்.

DIN

எனக்கு லக்னாதிபதி கேந்திராதிபத்ய தோஷம் பெற்றிருக்கிறார். இதனால் என்ன விளைவு உண்டாகும். திதிசூன்யமும் உண்டாகியிருக்கிறது. அதனால் வாழ்க்கையில் எதுவும் பரிமளிக்காது, இறுதிவரை போராட்டம்தான் என்றார். எனக்கு இரண்டு கிரகங்கள் நீச்சம். நீச்சம் பெற்ற கிரகங்கள் நீச்சம் மட்டும்தான் செய்யுமா? என் மனைவி பையன் பெண் ஆகியோரை விட்டுப்பிரிந்து தனியாக வாழ்கிறேன். நான்காண்டுகளுக்குமுன்பு நாளமில்லாச் சுரப்பியில் புற்றுநோய் வந்து நீவிர சிகிச்சைக்குப்பின் பிழைத்துக்கொண்டேன். தற்சமயம் கேது தசை நடக்கிறது. எதிர்காலம், ஆயுள் எவ்வாறிருக்கும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
 - வாசகர், சென்னை
 உங்களுக்கு கடக லக்னம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம் இரண்டாம் பாதம். பிறப்பில் ராகு மகாதசையில் இருப்பு 12 வருடங்கள், 2 மாதங்கள், 3 நாள்கள் என்று வருகிறது. பூர்வ புண்ணிய புத்திர புத்தி மற்றும் கர்ம ஸ்தானாதிபதியான செவ்வாய் பகவான் யோக காரகராகி (ஒரு திரிகோணம் மற்றும் ஒரு கேந்திரத்திற்கு அதிபதி) லக்னத்தில் நீச்சம் பெற்று நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார். அவர் நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார். ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானாதிபதி மற்றும் பாக்கியாதிபதியான குரு பகவான் நீச்சம் பெற்று நவாம்சத்திலும் மகர ராசியில் நீச்சம் பெற்று, "நீச்ச வர்கோத்தமம்' அடைவதால் நீச்சபங்க ராஜயோகத்தை அடைகிறார். ஒன்பதாமதிபதியும் பத்தாமதிபதியும் சமசப்தம (நேருக்கு நேர் ஏழாம் பார்வை) பார்வை செய்வதால் முழுமையான தர்மகர்மாதிபதி யோகம் உண்டாகிறது.
 தனம், வாக்கு, குடும்ப ஸ்தானாதிபதியான சூரியபகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே வீட்டில் இருக்கும் நிலை) இருக்கிறார். தைரிய மற்றும் அயன ஸ்தானாதிபதியான புதபகவான் தைரிய ஸ்தானத்தில் ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம் பெற்று நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார். சுக லாபாதியான சுக்கிரபகவான் பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான துலாம் ராசியை அடைகிறார். களத்திர, ஆயுள் ஸ்தானாதிபதியான சனிபகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் உச்சம் பெறுகிறார். ராகு, கேது பகவான்கள் மீனம், கன்னி ராசிகளில் அமர்ந்து நவாம்சத்தில் முறையே கும்ப, சிம்ம ராசிகளை அடைகிறார்கள்.
 சரி, உங்கள் கேள்விக்கு வருவோம். சுபக்கிரகங்கள் கேந்திர ராசிகளுக்கு (1,4,7,10) அதிபதிகளாக வந்தால் அவர்களுக்கு கேந்திராதிபத்ய தோஷம் உண்டாகும் என்பது அனைவரும் அறிந்ததே. கேந்திராதிபத்ய தோஷம் ஏற்பட்டால் என்ன விளைவு என்று கேட்டுள்ளீர்கள். கேந்திராதிபத்ய தோஷம் அடைந்த கிரகத்தின் இயற்கையான சுபாவங்களும் அதனால் ஏற்படும் நற்பலன்களும் குறைந்துவிடும் என்று கூற வேண்டும். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகத்திற்கு லக்ன ஆதிபத்யம் உண்டானால் கேந்திராதிபத்ய தோஷம் இல்லை என்பது விதிவிலக்கு. மேலும் சந்திர பகவானுக்கு கேந்திராதிபத்ய தோஷம் இல்லை என்றும் கூறலாம். லக்னாதிபதி அயன ஸ்தானத்தில் மறைவு பெற்றிருப்பதும் குறை என்பதை மறுப்பதற்கில்லை. நீங்கள் கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) சப்தமியில் பிறந்திருக்கிறீர்கள். இதனாலும் சந்திரபகவானுக்கு பலம் குறைகிறது என்றும் கூறவேண்டும்.
 ஒரு கிரகத்திற்கோ அல்லது ஒரு ராசிக்கோ நாம் பிறந்துள்ள திதியின் அடிப்படையில் திதி சூன்யம் உண்டாகும். திதி சூன்யம் என்பது ஜாதக அமைப்பில் முக்கியத்துவம் பெறும் விஷயம் என்றாலும் திதி சூன்யம் பெறும் ராசிகளில் முகூர்த்தம் வைப்பதை தவிர்க்க வேண்டும். திதி சூன்யம் பெறும் ராசிகளின் அதிபதிகளில் நட்சத்திரங்களும் கூட வலுவிழக்கும் என்பதால் அந்த நட்சத்திரங்களையும் தவிர்க்க வேண்டியதாகும். அத்துடன் திதி சூன்யம் பெற்ற ராசிகளில் உள்ள கிரகங்களும் வலுவிழந்துவிடும். திதி சூன்யத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள விதிவிலக்குகளைப் பார்ப்போம். திதி சூன்யம் பெற்ற கிரகங்கள் அசுபர் வீட்டில் இருந்தாலும் அசுபர் சேர்க்கைப் பெற்றிருந்தாலும் அவர்கள் இருக்குமிடங்களில் மறைவு ஸ்தானங்களான 3,6 ஆம் இடங்களாக அமைந்து இருந்தாலும் திதி சூன்ய தோஷம் அடிபட்டுவிடும். திதி சூன்ய ராசிகளில் உள்ள கிரகங்கள் மற்றும் திதி சூன்யம் அடைந்த ராசிகளின் அதிபதிகள் வக்கிரம், அஸ்தமனம், வக்கிராஸ்தமனம் (அதாவது வக்கிரமும் அடைந்து அஸ்தமனமும் ஆகியிருக்கும் நிலை) ஆகிய நிலைகளில் இருந்தால், திதி சூன்ய தோஷம் நீங்கிவிடும். அந்த கிரகங்களின் நட்சத்திரங்களுக்கும் திதிசூன்ய தோஷம் நீங்கிவிடும். பலரும் இந்த திதி சூன்யத்தைப் பற்றி பல இடங்களில் கேள்விகள் கேட்பதால் திதிசூன்ய விதியை கீழே கொடுத்திருக்கிறோம்.
 திதிகள்                  சூன்ய ராசிகள்                         அதிபதிகள்
 1. பிரதமை              துலாம், மகரம்                          சுக், சனி
 2. துவிதியை          தனுசு,மீனம்                                      குரு
 3. திருதியை           சிம்மம், மகரம்                          சூரி, சனி
 4. சதுர்த்தி               ரிஷபம், கும்பம்                          சுக், சனி
 5. பஞ்சமி                மிதுனம், கன்னி                                 புதன்
 6. சஷ்டி                  மேஷம், சிம்மம்                          செவ், சூரி
 7. சப்தமி                 கடகம், தனுசு                                  சந், குரு
 8. அஷ்டமி             மிதுனம், கன்னி                                  புதன்
 9,10 நவமி, தசமி   சிம்மம், விருச்சிகம்                     சூரி, செவ்
 11. ஏகாதசி             தனுசு, மீனம்                                           குரு
 12. துவாதசி          துலாம், மகரம்                                   சுக், சனி
 13. திரயோதசி      ரிஷபம், சிம்மம்                                  சுக், சூரி
 14. சதுர்த்தசி         மிதுனம், கன்னி, தனுசு, மீனம்     புதன், குரு
 15 அமாவாசை / பௌர்ணமி - திதி சூன்ய ராசி இல்லை.
 உங்களின் சப்தமி திதிக்கு கடகம், தனுசு ராசிகள் திதி சூன்ய ராசிகளாகவும் சந்திர, குரு பகவான்கள் அந்த ராசிகளுக்கு அதிபதிகளாகவும் வருகிறார்கள். லக்னாதிபதியான சந்திரன் மறைவு பெற்று அசுபர் சாரம் ஏறி இருப்பது குறை. குருபகவான் நீச்சபங்க ராஜயோகம் பெற்றும் இருக்கிறார். நீச்சம் பெற்ற கிரகம் நீச்சம் மட்டும்தான் செய்யுமா என்று கேட்டுள்ளீர்கள். ஒரு காலத்தில் நீச்சத்திற்கு உண்டான பலகீனத்தைக் கொடுத்தாலும் ராஜயோகத்திற்கு உண்டான நான்கு மடங்கு கூடுதலாக நன்மைகள் உண்டாகின்றன. ஒரு காலத்தில் கஷ்டப்பட்டாலும் பிற்காலத்தில் பல கோடிகளுக்கு அதிபதிகளாக ஆகிவிடுகிறார்கள். குருபகவான் நீச்சம் பெற்றவர்கள் பலரும் செல்வந்தர்களாக உள்ளார்கள். செவ்வாய்பகவான் நீச்சம் பெற்று இருப்பவர்கள் அரசாங்கத்தில் உயர்நிலையிலும் உணவகம், பங்குவர்த்தகம், கட்டுமானம் போன்ற துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள். புதபகவான் நீச்சம் பெற்றிருப்பவர்கள் சிறப்பான படிப்பு படித்து சாதனைகள் செய்கின்றனர். பிரபல வக்கீல்களுக்கு புதபகவான் நீச்சம் பெற்றிருப்பதைக் காண்கிறோம்.
 திதி சூன்யம் உங்கள் ஜாதகத்தில் முழுமையாக பாதக அமைப்பாக இல்லை. உங்களுக்கு களத்திர தோஷம், பித்ருதோஷம் உள்ளது. புத்திர ஸ்தானாதிபதியும் புத்திரகாரகரும் நீச்சபங்க ராஜயோகம் பெற்று இருப்பதால் கேது மகாதசையில் பின்பகுதியில் உங்கள் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து குரு புக்தி நடக்கத் தொடங்கும். மேலும் குருபகவானின் பார்வை சூரியன், புதன், கேது பகவான்களின் மீது படிகிறது.
 கேது மகா தசை முடிவதற்குள் உங்களின் ஆசைகள் பூர்த்தியாகிவிடும். தொடர்வதும் சுக்கிர மகாதசையாகும். அதிலும் நன்மைகள் தொடரும். உங்கள் ஜாதகம் பிற்கூறில் பலனளிக்கும் ஜாதகம் என்று கூறவேண்டும். தீர்க்காயுள் உண்டு. பிரதி நினமும் விநாயகப்
 பெருமானை வழிபட்டு வரவும்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

SCROLL FOR NEXT