வெள்ளிமணி

நபில் வணக்க நன்மைகள்

பர்லான கடமைகளை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். நிறைவேற்றாதவர்களுக்கு நிறைய தண்டனை உண்டு.

தினமணி

பர்லான கடமைகளை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். நிறைவேற்றாதவர்களுக்கு நிறைய தண்டனை உண்டு. பர்லைத் தவறாது நிச்சயம் நிறைவேற்ற நிர்ப்பந்தம் உண்டு. நபில் என்ற சொல்லின் பொருள் அதிகப்படியானவை, விருப்பத்திற்கு உரியவை என்பது. கடமையான கட்டாயமாக நிறைவேற்றும் இறை  வழிபாடுகளுக்குரிய தொழுகை, நோன்புகளுக்கு அதிகமாக அல்லாஹ்வைத் தொழும் துதிக்கும் புகழும் கடமையின்றி கட்டாயம் இன்றி விரும்பி ஈடுபடும் இறை வழிபாடுகளே நபில்.

நபில் தொழுகை என்பது நேரத்தையோ இடத்தையோ ஏதேனும் ஒரு செயலையோ தொடர்பு படுத்தாமல் தொழுவது. நபில் தொழுகையை தொழ கூடாத நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் தொழலாம். நபிலான வழிபாடுகள் இறைவனின் நெருக்கத்தை ஏற்படுத்தும். பிறர்தூண்டுதலின்றி வேண்டுதலின்றி விரும்பி செய்யும் நபில் வழிபாடுகள் அல்லாஹ்விடம் அதிக மதிப்பைப் பெறுகின்றன.

திருகுர்ஆனின் 38-18 ஆவது வசனத்தில் பிற்பகலிலும் முற்பகலிலும் மலைகள் இறைவனைத் துதிப்பதைத் தாவூது நபிக்கு அல்லாஹ் சுட்டி காட்டுகிறான். இவ்வசனத்தில் வரும் அல் இஷ்ராக் என்னும் சொல் சூரியன் உதயமாகி இருபது நிமிடங்களுக்கு அப்பால் உள்ள நேரம். இந் நேரத்தில் தொழுவது இஷ்ராக்.

மூசா நபி அல்லாஹ்விடம் பேசியது லுஹா நேரத்தில் என்று இமாம் ஜாபர் சாதிக் (ரஹ்) குர்ஆனின் 93-1 ஆவது வசனத்திற்கு விளக்கம் தருகிறார்கள். லுஹா நேரம் என்பது நடுப்பகலுக்கு முந்திய நேரம். லுஹா நேரத்தில் சூரியனின் பூரண ஒளி பூமியில் விழுகிறது. எகிப்திய எதேச்சதிகார மன்னன் பிர் அவ்னால் அழைக்கப்பட்டு அரசவையில் கூடிய சூனியக்காரர்கள் அனைவரும் மூசா நபியின் கைத்தடி பாம்பாக மாறி சூனியக் கார்களின் சூனியத்தில் தோன்றிய பாம்புகள் அனைத்தையும் விழுங்கிய விநோதம் கண்டு வியந்து மூசா நபியின் ஏக இறை கொள்கையை ஏற்றதும் இந்நேரத்திலேயே.

இஸ்லாத்திற்கு இறைவன் வெற்றி நல்கிய இந்நேரத்தில் தொழுவது லுஹா. மக்கா வெல்லப்பட்ட அன்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எட்டு ரக் அத்துகள் லுஹா தொழுததாக உம்மு ஹானி (ரலி) கூறுகிறார்கள்.

லுஹா தொழுகையை தவறாது விரும்பி தொழுபவர் லுஹா என்னும் தலைவாயில் வழியாக சொர்க்கம் செல்வர் என்று பெரியார் செய்கு அப்துற்றஹ்மான் புஸ்தாமீ அவர்களின் தர்வீஹுல் குலூபில் என்ற நூலில் குறிப்பிடுகிறார். ஒவ்வொரு நாளும் இரண்டு ரக் அத்துகள் லுஹா தொழுவதின் உறங்குமுன் வித்ரு தொழுவதின் பயன்களை நயமான நபி (ஸல்) அவர்கள் நவின்றதை அறிவிக்கிறார் அபூஹுரைரா  (ரலி)  நூல் - புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஜஈ. "" லுஹா தொழுகையின் இரு ரக்  அத்துகளைப் பேணி தொழுபவரின் பாவங்கள் கடல் நுரை போன்று அதிகமாக இருப்பினும் மன்னிக்கப்படும்'' மாநபி  (ஸல்) அவர்களின் மணிமொழியை அறிவிப்பவர் - அபூஹுரைரா (ரலி) நூல்- திர்மிதீ.

இரவு தொழ முடியாமல் போனால் பெருமானார் நபி (ஸல்) அவர்கள் அதற்குப் பகரமாக பகலில் பன்னிரண்டு  ரக் அத்துகள் நபில் தொழுததை அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார். நூல்- முஸ்லிம். இவ்வாறே இரவில் குர்ஆன் ஓத தவறியவர்கள் பகலில் வைகறை நடுப்பகல் தொழுகைக்கு மத்தியில் தொழுதாலும் ஓதினாலும் நன்மையை பெறலாம் என்ற அறிவிப்பும் முஸ்லிமில் உள்ளது. இங்கு குறிப்பிடப்படும் நேரம் லுஹா நேரமே.

காரண காரியங்களுடன் இணைந்த நபில் வழிபாடுகளும் தொழுகைகளும் உண்டு. அவற்றில் ஒன்று சூரிய, சந்திர கிரகண தொழுகை. சூரிய, சந்திர கிரகணங்கள் எவரின் பிறப்பு, இறப்பு, பிற நிகழ்வுகளைக் குறிப்பது அல்ல. அவை அல்லாஹ்வின் சான்றுகள் என்று சாந்த நபி (ஸல்) அவர்கள் சாற்றியதையும் சூரிய சந்திர கிரகணங்கள் ஏற்பட்டதிலிருந்து முடியும்  வரை   நீண்ட கிரா அத் ஓதி இரு ரக் அத்துகள் தொழுவித்ததையும்  அன்னை ஆயிஷா (ரலி) அறிவித்ததையும் புகாரி, முஸ்லிம், மு அத்தா, அபூதாவூத், திர்மிதீ, நஸஈ நூல்களில் காணலாம்.

மசூதியில் நுழைந்ததும் இரண்டு ரக் அத்துகள் தொழும் தஹிய்யத்துல் மஸ்ஜித் காணிக்கை தொழுகை. ஒரு செயலைச் செய்ய எண்ணி செய்வதா வேண்டாமா என்ற குழப்ப நிலை நிலவுகையில் சரியான முடிவு எடுக்க இரு ரக் அத்துகள் தொழுவது இஸ்திகாரா  தொழுகை. நாம் விரும்பியது விரும்பிய வண்ணம் நடைபெற இறைவனை இறைஞ்சி தொழுவது ஹாஜத்து தொழுகை.  பாவங்கள் மன்னிக்கப்பட தொழுவது தஸ்பீஹ்  தொழுகை.

கட்டாயம் இல்லையாயினும்  திட்டமிட்டு தினமும் திண்ணமாய் நபில் தொழுது எண்ணிய எண்ணியாங்கு எய்தி ஏக இறைவன் நெருக்கத்தைப் பெறுவோம்.
- மு.அ. அபுல் அமீன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்கம்பியாள், உதவியாளா் தகுதிகாண் தோ்வு: டிச. 27, 28-க்கு மாற்றம்

தென்காசி அருகே இளைஞா் தற்கொலை

வன விலங்குகளால் விவசாயப் பயிா்கள் தப்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்

மத்திய அரசின் திட்டங்களுக்கும் மாநில அரசின் நிதியை பயன்படுத்த வேண்டிய கட்டாயம்: அமைச்சா் சிவசங்கா்

காவல் ரோந்து வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியுடன் கூடிய கண்காணிப்பு கேமரா வசதி அறிமுகம்

SCROLL FOR NEXT