வெள்ளிமணி

ராகு, கேது, சனி தோஷம் நீக்கும் ஸ்ரீ கார்கோடகநாதர்!

தினமணி

மயிலாடுதுறை, கோடங்குடி கிராமத்தில் சுமார் 1000 ஆண்டுகள் பழைமையான திருக்கோயிலாக விளங்குகிறது ஸ்ரீ கார்கோடகநாதர் ஆலயம்!  

ஸ்ரீ கைவல்லி அம்பிகை சமேத ஸ்ரீ கார்கோடகநாதர் ஆலயம், ராகு-கேது மற்றும் சனி தோஷம் நீக்கும் திருக்கோயிலாக திகழ்கிறது.  இங்கு, ஒன்றரை ஆண்டுக்கு ஒருமுறை சாயா கிரகங்களான ராகு-கேது  பகவான்களின் பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு ஹோமங்கள்,  பூஜைகள், விழாக்கள் நடைபெறுகின்றன.

ராகு-கேது பெயர்ச்சி மட்டுமல்லாது நாக பஞ்சமி, நாக சதுர்த்தி, மற்றும் தினந்தோறும் நடைபெறும் ராகு காலத்திலும் பக்தர்கள் இத்தல இறைவன் இறைவியை வழிபட்டு,  நீண்ட ஆயுள், நோயற்ற வாழ்வு, திருமணத்தடை நீக்கம், நாகதோஷங்கள், நவக்கிரக தோஷங்கள், ராகு-கேது தோஷங்கள் விலகி புத்திரப்பேறு கிடைத்து வாழ்வில் எல்லா நலன்களையும் பெறுகின்றனர். இம்மைக்கும் மறுமைக்கும் வரமளிக்கும் தலம் இந்த கோடங்குடி!

கார்கோடகன் என்னும் சர்ப்ப ராஜன், சிவனை பூஜித்து நளனைப் பற்றிய சாபம் விலகிட வேண்டி தவமிருந்து சாபவிமேசனம் பெற்றதால் இத்தலம், "கார்கோடகக்குடி' என்றும் "கோடங்குடி' என்றும் அழைக்கப்படுகிறது.  இங்கு தாமரை தடாகம் என்னும் பத்மஸரஸ் எனப்படும் தீர்த்தக்குளம் உள்ளது.

இத்திருக்கோயிலில் நவக்கிரகங்களில் சூரியனைத் தவிர வேறு நவக்கிரகங்கள் கிடையாது. இங்கு அம்பாள் தெற்கு நோக்கி நின்று ஸ்ரீ துர்க்கையாகவும் ஸ்ரீ பார்வதி தேவியாகவும் இரு கைகளிலும் ஸ்ரீ சக்கரமும் ஜெயசக்கரமும் உடையவளாக  ஸ்ரீ ராஜராஜேஸ்வரியின் அம்சமாக விளங்குகிறார்.  

கார்கோடகன், இத்தலத்தில் இறைவனை தாமரை மலர்களால் அர்ச்சித்து வணங்கி தோஷம் நீங்கப்பெற்றான்.

நள மகாராஜனுக்கு சனிதோஷம் ஏற்பட்டு நாடு முழுவதும் சுற்றிவரும்போது இறுதியாக கோடங்குடி என்னும் கார்கோடக நாதபுதத்திற்கு வந்து இங்குள்ள சிவனை வழிபட்ட பிறகே திருநள்ளாறு சென்று நளன் தீர்த்தம் அமைத்து சனிபகவானை தரிசித்ததாக ஐதீகம். அதன்பிறகே நளனுக்கு சனிதோஷம் விலகியது.  ஆகவே, திருநள்ளாறு சென்று சனிபகவானை வழிபடுமுன்னர், கோடங்குடி சென்று ஸ்ரீ கார்கோடக நாதரை வழிபட்டுச் சென்றால் ராகு-கேது, உள்ளிட்ட  அனைத்து  தோஷங்களும் விலகும்.

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையிலிருந்து காவிரியின் தென்கிழக்கே, நல்லத்துக்குடி வழியாக சுமார் 4 கி.மீ. சென்றால் கோடங்குடியை அடையலாம். 
தொடர்புக்கு: 94446 67454/ 99947 79881.
-எஸ். ராதாகிருஷ்ணன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராபா எல்லையில் இஸ்ரேல் டாங்கிகள்: அதிகரிக்கும் போர்ப் பதற்றம்!

பொறியியல் விண்ணப்பப் பதிவுக்கு என்னென்ன விவரங்கள் தேவை?

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

SCROLL FOR NEXT