வெள்ளிமணி

துறையை காட்டி அருளிய இறைவன்!

தினமணி

நாகை மாவட்டத்தில், மயிலாடுதுறை - திருக்கடையூர் சாலையில் 7 கி.மீ தொலைவில் உள்ளது "ஆறுபாதி' எனப்படும் "திருவிளநகர்!' விளநகர் என்பது ஊரின் பெயர், ஆறுபாதி என்பது கோயில் பெயர். விளநகரின் ஆறில் ஒரு பாகம் என்பதால் ஆறுபாதி எனப்படுகிறது. தேவாரப் பதிகம் பெற்ற காவிரித் தென்கரைத் தலங்களில் 40 ஆவது தலம்.

விளாமரங்கள் அடர்ந்த பகுதியாதலால் விளநகர். இவ்வூருக்கு கபித்தபுரம் எனப் பெயர் உண்டு கபித்தம் என்றால் விளா. இறைவனுக்கு உசிரவனேஸ்வரர் எனப் பெயர், "உசிரம்' என்றால் "விழல்' அதனால் விழல் நகர், விளநகர் ஆனது. இக்கோயிலின் தல விருட்சம் விழல் ஆகும்.

தல வரலாறு: தலவரலாற்றுத் தகவல்களின்படி, அருள்வித்தன் என்ற அந்தணர் மலர்களைச் சேகரித்துக்கொண்டு காவிரி ஆற்றில் இறங்கி வந்துகொண்டிருந்தபோது, அவனுடைய சிவபக்தியை உலகத்தவருக்கு உணர்த்திடத் திருவுள்ளம் கொண்டார் சிவனார். ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுக்கச் செய்தார். வெள்ளம் படிப்படியாக உயர்ந்து, அவன் கழுத்தைத் தொட்டபடி ஓட, அப்போதும் அவன் தன் கையில் இருந்த மலர்க் குடலையைக் கையில் இருந்து நழுவவிட்டுவிடாமல் இறுகப் பிடித்துக்கொண்டு, விளநகர் இறைவனை பிரார்த்திக்க இறைவன் கரையேற வேண்டிய துறையின் வழியை உணர்த்தி அருள்புரிந்தார். அதன் காரணமாகவே இத்தலத்து இறைவனுக்குத் "துறைகாட்டும் வள்ளல்' என்ற பெயர் ஏற்பட்டது. மேலும் கபித்தன் என்னும் மன்னன் வழிபட்டுப் பிரமஹத்தி தோஷம் நீங்கப் பெற்லம்.

ஞானசம்பந்தருக்கு அருளியது: திருஞானசம்பந்தப் பிள்ளையார் செம்பள்ளி தரிசனம் முடித்து விளநகர் கோயிலுக்குச் செல்லும்போது, காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதைக் கண்ட ஞானசம்பந்தப் பெருமான், "ஆற்றில் பெருக்கெடுக்கும் வெள்ளத்தைக் கடந்து கரையேற ஒரு துறையினைக் காட்டுவோர் எவரேனும் உளரோ?' என்று மனதளவில் நினைத்த வேளையில், வேடன் ஒருவன் அவரைத் தாம் அழைத்துச் செல்வதாகக் கூறி ஆற்றில் இறங்க, வெள்ளம் ஞானசம்பந்தப் பெருமானின் பாதத்தின் அளவாகக் குறைந்துவிட்டது. காவிரியின் தென்கரை சேர்ந்த சம்பந்தப் பெருமான், தனக்குத் துறை காட்டிய வேடனைத் திரும்பிப் பார்க்க, அங்கே வேடனைக் காணவில்லை. அந்த விளநகர் இறைவனே வேடனாக வந்து தமக்குத் துறை காட்டி அருளியவர் என்று தெளிந்த சம்பந்தர் இறைவனை போற்றி பாடி மகிழ்ந்த தலமே இது.

ஆலய தோற்றம்: கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம்! அதனை கடந்தால், வலதுபுறம் ஆஸ்தான மண்டபம் உள்ளது. அதனை அடுத்து பலிபீடமும், நந்தி மண்டபம் உள்ளது. மகாமண்டப வாயிலில் இரு புறமும் விநாயகர் சிலைகள் உள்ளன. இறைவன் அழகாக வரமளிக்கும் வள்ளலாகக் காட்சி தருகிறார் அம்பிகை. "வேயுறு தோளியம்மை' என்ற பெயருடன் தெற்கு நோக்கி சந்நிதி கொண்டுள்ளார். கருவறை விமானம் துவிதள விமானமாக உள்ளது. சுதை சிற்பங்கள் பல புராணக் கதைகளை சொல்லியபடி இருக்கின்றன. கோட்டத்தில் தென்முகன், விஷ்ணு, பிரம்மன், துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேசர் தனி சிற்றாலயத்தில் உள்ளார். அருகில் விழல் செடிகள் நிரம்பிய தொட்டி உள்ளது.

கோயிலில் இரு பிரகாரங்கள் உள்ளன. முதல் பிரகாரத்தில் மேற்கில் விநாயகர், பன்னிரண்டு கைகள் கொண்ட முருகனும் உள்ளனர். அடுத்து அருணாசலேஸ்வரர், விநாயகர், நால்வர், இரு லிங்க பாணங்கள் உள்ளன. மஹாலட்சுமி தனி சந்நிதியில் உள்ளார். வடகிழக்கில் இரு பைரவர்களும், சனி பகவானும் உள்ளனர். நவக்கிரகத்தில் சூரியனும் சந்திரனும் நேருக்கு நேர் பார்த்தபடி உள்ளது காண்பதற்கு அரிதாக உள்ளது. தருமையாதீனத்திற்குச் சொந்தமானது இந்த திருக்கோயில்! பூஜைகளும் வழிபாடுகளும் விழாக்களும் முறையாக நடைபெறுகின்றன. அவர்களது அருளாட்சியில் விரைவில் திருப்பணி வேலைகள் நடைபெற 
வேண்டும்.

- கடம்பூர் விஜயன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் தொண்டை வலி, இருமலுடன் காய்ச்சல்: சீசன் நோயாக மாறியதா கரோனா?

பாலியல் புகாரில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை: எச்டி குமாரசாமி உறுதி

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

SCROLL FOR NEXT