சோழப்பேரரசர்கள் தொண்டை வளநாட்டில் பல அற்புதமான திருக்கோயில்களை அமைத்து வழிப்பட்டனர். அப்படிப்பட்ட புகழ்ப்பெற்ற வரலாற்று சிறப்புகள் மிகுந்த திருக்கோயில்களில் ஒன்றாகத் திகழும் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், செரப்பணஞ்சேரி கிராமத்தில் அருள்மிகு சொர்ணாம்பிகை உடனுறை ஸ்ரீ வீமீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
வரலாற்றுச் சிறப்பு: இக்கோயிலில் 7 கல்வெட்டுகள் உள்ளன. இக்கோயில் கல்வெட்டுகளில் இவ்வூர் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு தற்போது, செரப்பணஞ்சேரி என்று அழைக்கப்படுகிறது. இவ்வாலய இறைவனை வீமீஸ்வரமுடைய நாயனார் என்று கல்வெட்டுகள் செப்புகின்றன.
மூன்றாம் குலோத்துங்கனின் இரண்டாவது ஆட்சி ஆண்டு முதல் (கி. பி. 1180) தெலுங்குச் சோழ விஜயகண்ட கோபாலனின் (கி. பி. 1265) காலம் வரை கோயிலின் அருகே காணப்படும் 16 ஆம் நூற்றாண்டுத் தனிக்கல்வெட்டு மூலம் இக்கோயில் கி. பி. 12 ஆம் நூற்றாண்டு முதல் 17 ஆம் நூற்றாண்டு வரை சிறப்புடன் இருந்துள்ளதை அறியமுடிகிறது. இவ்வூர் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து ஊற்றுக்காட்டுக் கோட்டத்து வெளிமாநல்லூர் நாட்டுப்பிரிவில் அமைந்திருந்தது என்பது வரலாற்றுச்செய்தியாக உள்ளது. (வெளிமாநல்லுர் நாடு என்று அழைக்கப்பட்ட ஊர் தற்போதைய எழுச்சூர் கிராமமாகும்.
ஆலயத்தின் இன்றைய நிலை: தற்போது இத்திருக்கோயில் மிகவும் சிதிலமாகி காணப்படுகிறது. பிற்கால சோழர் காலத்திய தூங்கானை மாடக்கோயில் வகையிலான இக்கோயில் கிழக்கு நோக்கிய கருவறை, இடைநாழி, அர்த்தமண்டபம், மஹாமண்டபம் என்ற அமைப்புடன் காணப்படுகிறது. கோயிலின் பின்பகுதி தூங்கானை மாடத்தின் கற்சுவர்கள் சிதைந்து செங்கற்பகுதி மட்டுமே காணப்படுகிறது. அர்த்த மண்டபத்தில் சுவர் பகுதி வரை உள்ளது, மேல் தளம் சிதைந்து வீழ்ந்து விட்டது. மஹா மண்டபத்தின் நான்கு புறச் சுவர்களும் விழுந்து தரைப்பகுதி வரையே உள்ளது. இதன் நுழைவாயில் தெற்கு புறமாக அமைந்திருந்ததை தென்புற படிக்கற்கள் அமைப்பினையும் மஹா மண்டபத்தின் கிழக்குப் பகுதியில் நுழைவாயில் அமைப்புகள் ஏதும் இல்லாததாலும் அறியலாம். தேவக்கோட்டங்களில் சிற்பங்கள் ஏதும் காணப்படவில்லை. நந்தி மண்டபமும் உள்ளது.
சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் இக்கோயில் அமைந்துள்ள இடத்தில் சாலை அமைக்கப்படும் போது அங்குள்ள நந்தியம் பெருமானின் சிலை பின்னமானதால் புதியதாக சிலை வடிக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பழைய சிவலிங்கம் மூலஸ்தானத்திலும், அம்பிகை மூலஸ்தானத்திலேயே புதிய சிலா ரூபமாக அமைக்கப்பட்டுள்ளன. விநாயகர், சூரிய பகவான் சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
பரிகாரங்கள்: ஆலயம் அவல நிலைக்குத் தள்ளப்பட்டாலும் இறையருளுக்கு பஞ்சமில்லை. தேவப்பிரசன்ன தகவல்களின்படி நோயினால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் இவ்வீசனுக்கு அபிஷேகம் செய்து அந்த விபூதியை நீரில் இட்டு தினமும் உட்கொண்டால் உடல் நிலை சீராகும். எதிரிகளால் துன்பப்படுபவர்களும், எதிரிகளால் பயம் ஏற்பட்டு அவதிக்கு உள்ளானவர்களின் துன்பங்களை வீமீஸ்வரர் வணங்கிய மாத்திரத்திலேயே தீர்த்தருளுகிறார்.
பழம் பெருமையும் வரலாற்றுச் சிறப்புகளும் மிகுந்த இச்சிவாலயம் வழிபாடு குன்றிய நிலையில் இந்து சமய அறநிலையத்துறையும், கிராமப் பொதுமக்களும் மற்றும் சிவநேயச் செல்வர்களும் முனைந்தால் நிச்சயம் இச்சிவாலயம் புதுப்பொலிவு பெறும்.
ஆலயம் செல்ல: சென்னை - தாம்பரத்திலிருந்து காஞ்சிபுரம் சாலையில் படப்பைக்கு அடுத்து செரப்பனஞ்சேரி ஊர் உள்ளது. தாம்பரத்திலிருந்து (சானடோரியம் பேருந்து நிலையம்) 10 நிமிடத்திற்கு ஒரு பேருந்து செல்கிறது.
தொடர்புக்கு: 9841336838 / 98413 94484.
- க. கிருஷ்ணகுமார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.