வெள்ளிமணி

பஜ்ர் தொழுகையின் பயன்கள்

DIN

பஜ்ர் தொழுகை பொழுது விடியும் முன்னர் அதாவது சூரியன் உதயம் ஆவதற்கு முன் தூக்கத்தைக் கலைத்து எழுந்து தொழும் ஒரு நாளின் துவக்க தொழுகை. சுபுஹு தொழுகை தவிர பிற நான்கு கால தொழுகைகளுக்கு அழைக்கும் பாங்கு ஒலியில் தூக்கத்தைவிட தொழுகை மேலானது என்னும் சொற்றொடர் சொல்லப்படுகிறது. சுபுஹு தொழுகை அழைப்பான பாங்கில் மட்டும் இச்சொற்றொடரைச் சொல்ல அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்தியதை அபூமஹ்தூத் (ரலி) மற்றும் பிலால் (ரலி) அறிவிப்பது திர்மிதீ நூலில் உள்ளது. இத்தகு மேலான தொழுகையின் பயன்களும் மேலானவையே.
 பஜ்ரு தொழுகையை நிலைநாட்டுவீராக! நிச்சயமாக பஜ்ரு தொழுகை சாட்சி பகரும் சான்றாகும் என்று சத்திய குர்ஆனின் 17-78 ஆவது வசனம் வலியுறுத்தி சொல்கிறது. பஜ்ரு தொழுகையில் இரவின் வானவர்களும் பகலின் வானவர்களும் கூடுவதால் அவ்விரு வானவர்களும் பஜ்ரு தொழுகையை தொழுதவர்களுக்குச் சாட்சி பகரும் சான்றாவர் என்பதை இந்த வசனம் இயம்புவதாக இனிய நபி (ஸல்) அவர்கள் நவின்றதை அறிவிக்கிறார் அபூஹுரைரா (ரலி) நூல்- புகாரி.
 பஜ்ரு தொழுதவருக்கு மறுமையில் ஸிராத்துல் முஸ்தகீம் என்னும் பாலம் கடப்பதற்கு எளிதாகும். யார் இரு குளிர்ந்த நேர தொழுகைகளைத் தொழுகிறாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவர் என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் எடுத்துரைத்ததைத் தொடுத்து உரைக்கிறார் அபூமூஸô (ரலி) நூல்- புகாரி, முஸ்லிம். சூரியன் உதிப்பதற்கு முன்னுள்ள வைகறை பொழுதும் சூரியன் மறையும்முன் உள்ள மாலை பொழுதும் ஒரு நாளின் இரு குளிர்ந்த நேரங்கள். மாநபி (ஸல்) அவர்களின் மற்றொரு அறிவிப்பு. சூரியன் உதயமாவதற்கு முன்னுள்ள தொழுகையையும் தொழுபவர் நிச்சயமாக நரகில் புகமாட்டார். அறிவிப்பவர்- அபூஜுஹைர் அமாரத் பின் ருவைபா (ரலி) நூல்- முஸ்லிம்.
 ஒரு நாளின் முதல் தொழுகையான பஜ்ர் தொழுதவர் அந்நாள் முழுவதும் அல்லாஹ்வின் பாதுகாப்பைப் பெறுகிறார். யார் சுபுஹு தொழுதுவிட்டு அதே இடத்தில் சிறிது நேரம் அமர்ந்து அல்லாஹ்வைப் புகழ்ந்து துதித்துக் கொண்டிருப்பவரின் பாவங்களை மன்னித்து அவருக்கு இரக்கம் காட்டுமாறு இறைவனிடம் இறைஞ்சுகின்றனர் வானவர்கள் என்ற வள்ளல் நபி (ஸல்) அவர்களின் வாய்மொழியை அறிவிக்கிறார் அலி இப்னு அபூதாலிப் (ரலி) நூல் -அஹ்மது. சுபுஹு தொழுகையை விடுவது நயவஞ்சகர்களின் அடையாளம் என்ற அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அறிவிப்பை நம் கவனத்திற்குக் கொண்டு வருகிறார் கவ்ப் (ரலி).
 இஷா தொழுகையை மசூதில் கூட்டாக தொழுதவர் பாதி இரவு நின்று வணங்கியவர் போலாகிறார். அவரே சுபுஹு தொழுகையையும் மசூதியில் கூட்டாக தொழுதால் முழு இரவும் வணங்கியதற்கு ஒப்பாவார் என்ற ஒப்பிலா நபி (ஸல்) அவர்களின் அறிவிப்பை உரைக்கிறார் உஸ்மான் (ரலி) நூல்- முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ.
 துபுஹு தொழுகையில் மட்டும் ஓதப்படும் குனூத் என்னும் துஆ இஸ்லாமியர்களுக்கு இடையூறு செய்யும் எதிரிகளிடமிருந்து இஸ்லாமியர்களைக் காப்பாற்றி அந்த எதிரிகளை ஏளனப்பட்டு எண்ணற்ற துன்பத்திற்காளாக்கி அடக்கி ஒடுக்கி விடும்.
 மேன்மையான பயன்களை மேதினியில் தந்து சோதனைகளை கடந்து சாதனை படைத்து வேதனையின்றி வாழ்ந்து மறுமையில் மாறா பேற்றைப் பெற உதவும் உன்னத சுபுஹு தொழுகையை உறக்கத்தைவிட்டு எழுந்து உற்சாகமாய் தொழுது தொய்வில்லாது தூயோன் அல்லாஹ்வின்அருளைப் பெறுவோம்.
 - மு.அ. அபுல் அமீன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT