சட்டம் பயின்று திருச்சியில் வழக்கறிஞராகப் (அக்காலத்தில், ப்ளீடர்) பணிபுரிந்தவர்; பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்காக லண்டன் சென்று, அங்கு தேசியப் போராட்ட எண்ணங்களில் மூழ்கி அதையே வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டவர்; லண்டன் இந்தியா ஹவுஸில் வீர சாவர்க்கரோடு நெருங்கிப் பழகி, சில ஆண்டுகளுக்கு அவரின் வலது கையாகவே திகழ்ந்தவர்; லண்டனிலேயே பாரிஸ்டர் காந்தியைச் சந்தித்து விடுதலைக்கான செயல்பாடுகள் குறித்து விவாதித்தவர்; புதுச்சேரியில், அரவிந்தருடனும் பாரதியாருடனும் நீலகண்ட பிரம்மசாரியுடனும் நெருங்கிய நட்பு பூண்டிருந்தவர்; மேடம் காமா அவர்களோடு இணைந்து புரட்சிவாதியாக விளங்கியவர்; பல்வேறு வேடங்கள் போட்டு (பிணம் வேடம் உட்பட) பிரிட்டிஷார் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, தேசியப் போராட்ட முயற்சிகளை மேற்கொண்டவர்; இந்திய மொழிகள் மட்டுமல்லாமல் ஐரோப்பிய மொழிகளும் அறிந்த பன்மொழிப் புலவராகத் திகழ்ந்து, பாரத இலக்கியத்திற்குப் பெருமை சேர்த்தவர்; தமிழ் உரைநடை இலக்கிய முன்னோடி; தமிழில் வெளிவந்த முதல் சிறுகதைத் தொகுப்பான "மங்கையர்க்கரசியின் காதல்' என்னும் நூலின் ஆசிரியர்; திருக்குறளையும் கம்பராமாயணத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்; 1915}இல் புதுச்சேரியில் இரண்டாம் முறையாகச் சந்தித்து, அந்தச் செல்வாக்கால் முழுக்க முழுக்க காந்தீயவாதியாக மாறியவர். இன்னும் இன்னும் ... வ.வே.சு. ஐயரைப் பற்றிச் சொல்வதற்கு உண்டு.
பொருநையோடு இவருக்கு ஏற்பட்டுவிட்ட விபரீத உறவை மட்டும் இப்போது காண்போம்.
இயற்கைப் பிரியரான ஐயர், குருகுலப் பிள்ளைகளிடமும் அதே சிந்தனையை வளர்த்தார். அவ்வப்போது அவர்களைச் சுற்றுலா அழைத்துச் செல்வார். மலையேற்றம், நீச்சல், உடல் உறுதிப் பயிற்சிகள் ஆகியவற்றில் ஈடுபடுத்துவார். 1925 }ஆம் ஆண்டு மே மாத ஆண்டுத் தேர்வுகள் முடிவடைந்துவிட்ட நிலையில், பாபநாசப் பகுதிக்குச் சுற்றுலா கிளம்பினார்கள். குருகுல ஆசிரியர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில், பிள்ளைகளையும் பிற ஆசிரியர்களையும் அனுப்பிவிட்டு ஐயர் சேரன்மாதேவியில் தங்கிவிட்டார். ஜூன் 1 }ஆம் தேதி அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். ஐயரின் மகள் சுபத்திராவுக்கு ஏக வருத்தம். அப்பாவை நச்சரித்தாள். மகளின் ஆசையை நிறைவேற்ற நினைத்த ஐயர் மகளையும் மகனையும் அழைத்துக்கொண்டு ஜூன் 2-ஆம் தேதி மாலை கிளம்பினார். அம்பாசமுத்திரத்தில் இரவு தங்கி, அடுத்த நாள் ஜூன் 3 }ஆம் தேதி காலை பாபநாசத்தை அடைந்தார். பிறரோடு சேர்ந்துகொண்டார். பாபநாச அருவியில் எல்லோரும் ஸ்நானம் செய்தார்கள். ஏற்கெனவே தம்மைச் சேரன்மாதேவியில் சந்தித்துவிட்டு, பாபநாசம் பகுதிக்கு வந்து ஏகாந்த தியானத்தில் ஈடுபட்டிருந்த பிரம்மசாரி ஒருவரையும் ஐயர் இங்குச் சந்தித்தார். தம்முடைய தோளில் தொங்கிய கதர்ப்பையை அந்த பிரம்மசாரியிடம் கொடுத்துவிட்டுத்தான் ஸ்நானம் செய்தார். நீராடியபின், அனைவரும் காலைச் சிற்றுண்டி அருந்தினர். ஏகாதசி நாள் என்பதால் ஐயர் மட்டும் முழு உபவாசம் இருந்தார். சிற்றுண்டியை முடித்துக்கொண்டு அனைவரும் மலையேறினர்.
சேர்வலாறு சேர்கிற இடத்திற்குக் கிழக்காக, இயற்கையான பள்ளத்தாக்கில் தாமிரா வளைந்து நெளிந்து, பிரிந்து சேர்ந்து பாறைத் தீவுகளை உருவாக்கினாள் என்று பார்த்தோமில்லையா? வளைந்து நெளிவதாலும், பாறைகளால் பிரிக்கப்படுவதாலும், அப்போதைய தாமிரா இந்த இடத்தில் அகலமும் ஆழமும் குறைவாக, ஆனால் வேகம் அதிகமாகப் பாய்ந்தாள். ஆற்றில் இறங்கி இக்கரையிலிருந்து மக்கள் அக்கரைக்குச் செல்வது வழக்கம். ஆங்காங்கே பாறைத் திட்டுகளும் இருக்கும். அகலமும் ஆழமும் குறைவாக, தீர்த்தம் போன்ற அமைப்பை உருவாக்கியதாலும், இங்கேயே சிவன் பார்வதி திருமணக் காட்சியை அகத்தியர் கண்டார் என்னும் ஐதீகத்தாலும், இதற்குக் கல்யாண தீர்த்தம் என்று பெயர். இதன் பின்னர்தான், பல்வேறு பாறைகளை அணுகியோடிய தாமிரா, பற்பல சிற்றோடைகளாகப் பாறைகளுக்கு நடுவில் பாய்ந்து, சிற்றருவிகளாகப் பாறைக்குப் பாறை தாவி, நுப்பும் நுரையுமாகக் காற்றில் நீர்த்திவலைகளை மிதக்கவிட்டு, 300 அடி கீழே சரிந்தாள். அந்த அருவியைத்தான், கல்யாண தீர்த்த அருவி என்றும் பாபநாச அருவி என்றும் மக்கள் அழைத்தார்கள். நேர்ச் செங்குத்தாக விழாமல், இந்த அருவியானது இண்டு இடுக்குகளில் புகுந்து, வெகு வேகமாகப் "பொதேர்' என்று கொப்பளித்து விழும்.
மலையேறி வந்து, கல்யாண தீர்த்தத்தை அடைந்தார்கள் ஐயரும் பிறரும். குறிப்பிட்ட இடத்தில் ஆற்றைக் கடக்கவேண்டுமென்று சுபத்திரா வலியுறுத்தினாள். ஐயருக்கு விருப்பமில்லை. பாறைகள் வழுக்கிவிடக்கூடும், தாங்களோ பெரிய கோஷ்டி என்று தயங்கினார். சுபத்திரா பிடிவாதம் பிடித்தாள். மகளுக்காக ஒத்துக் கொண்ட ஐயர், ஆற்றில் இறங்கி, வலுவான பாறை ஒன்றில் நன்றாக ஊன்றி நின்று, பிள்ளைகளை ஒரு கரையிலிருந்து மறுகரைக்குக் கைகொடுத்து மாற்றிவிட்டார். தானும் அவ்வாறே தாவ வேண்டுமென்று சுபத்திரா விரும்பினாள். பாவாடை தடுக்கும் என்று மறுத்தார் தந்தை. தன்னைப் பெண் என்று சுட்டிக் காட்டித் தந்தை தடுக்கிறார் என்று ஆவேசப்பட்ட சுபத்திரா, "இதுதான் நீங்கள் என்னை ஜான்சிராணியாக இருக்கச் சொல்லும் லட்சணமா?' என்று கொந்தளித்தாள். வாய் பேச நா எழாமல், சுபத்திரா அக்கரைக்குச் செல்ல உதவி செய்தார். சுபத்திரா அந்தப் பக்கத்துப் பாறையில் பத்திரமாகச் சேர்ந்துவிட்டாள் என்றெண்ணி, அடுத்த பிள்ளைக்குக் கைகொடுக்கத் திரும்பினார்.
"அப்பா' என்னும் குரல், ஐயரைத் தாக்கியது. பாறை வழுக்கிவிட, சுபத்ரா நீருக்குள் விழுந்துவிட்டாள். நீச்சல் வித்தகரான ஐயர், மகளைக் காப்பாற்ற நீருக்குள் பாய்ந்தார். அநேகமாக மகளைப் பிடித்தும்விட்டார். ஆனால், ஐயரின் கையிலிருந்து மகளின் கூந்தல் நழுவ, சுபத்திரா மொத்தமாக மூழ்கினாள். அவளைப் பற்றும் முயற்சியில் ஐயரும் துழாவ . . . ஆற்றின் வேகம் அதிகம் இருந்த அந்த இடத்தில் . . . சில அடிகளிலேயே அருவியின் சரிவும் நேர்ந்துவிட . . . அருவியின் வேகத்தில் ஐயர் அடித்துச் செல்லப்பட்டார்.
கல்யாண தீர்த்தத்திலேயே, பாறைகளுக்குள் செருகிக்கொண்ட சுபத்ராவின் உடல், ஜூன் 7}ஆம் தேதி கிடைத்தது. ஜூன் 8}ஆம் தேதி, ஐயரின் உடல், பாபநாசம் அருவி கீழே விழுந்து கொப்பளிக்கும் குளத்தில் கிடைத்தது.
வ.வே.சு.ஐயர் தாமிரவருணிக்குள் தஞ்சமடைந்துவிட்டார் என்பது தெரிந்தவுடன், வீர சாவர்க்கர் எழுதினார்: உன்னுடைய நற்குணங்கள் பற்றி எழுத பேனா துடிக்கிறது. எதிரிகள் உன்னைக் காட்டிக்கொடுத்தபோதும் நீ கலங்காமல் எப்படி நின்றாய்...
கடமைப்படாதவர்களுக்கும் தொண்டு செய்தாய் . . . துளியும் உனக்கென புகழ் நாடவில்லை . . .பேனா உடைந்து விட்டதே.
விடுதலைப் போராட்ட வீரர்கள் குறித்த கவியரங்கமொன்றில், வ. வே.சு.ஐயரைப் பற்றி, கவியரங்கத் தலைமை ஏற்ற தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி இவ்வாறு உரைத்தார்: "நீர் வீழ்ச்சிக் கொடுமையால் தமிழ் வீழ்ச்சி அடைந்ததன்றோ!'
-தொடரும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.