நம் வாழ்வு இனிமையாக, சுதந்திரமாக, சம உரிமையுடன் உணவு உண்ணவும், வேலை வாய்ப்பு, சம்பாத்தியம், வாழ்விடம், நல்ல வசதிகள், எல்லாருக்கும் எல்லாம் என வாழவும் நமக்கு சட்டங்கள், கட்டுப்பாடுகள் அவசியம். சாலைவிதிகள் நமக்கு பத்திரமான பயணத்தைத் தரும். நல்லொழுக்கம், தெய்வபக்தி, சன்மார்க்க வாழ்வு இவைகளுக்கு கட்டளைகள் அவசியம். நாம் விதிகளையும், கட்டுப்பாடுகளையும், கட்டளைகளையும் கடைப்பிடிக்க வேண்டும்; கீழ்ப்படிதல் அவசியம்.
வேதாகமத்தில் கர்த்தர் நமக்குக் கட்டளைகள், சட்டதிட்டங்களைப் பின்பற்றி வாழ விதிகளையும் கொடுத்துள்ளார். முதன் முதலில் இஸ்ரவேல் மக்களுக்கு பத்து கட்டளைகளைத் தந்துள்ளார். விடுதலைப் பயணத்தைத் தலைமையேற்று நடத்திய மோசே மக்களுக்கு அந்த விதிமுறைகளைத் தந்தார். இஸ்ரவேல் மக்கள் 430 ஆண்டுகள் எகிப்துவில் அடிமைகளாக வாழ்ந்ததனால் அவர்களுக்கு கட்டளைகள் அவசியமாக இருந்தது. சீனாய் மலையை இஸ்ரவேல் மக்கள் பிரயாணப்பட்டு கடக்கும் பொழுது, கர்த்தர் சீனாய் மலையடிவாரத்தில் கூடாரம் போட்டு தங்கும்படி செய்தார். மக்கள் தங்களைப் பரிசுத்தம் செய்துகொண்டு, கர்த்தரை ஆராதனை செய்துகொண்டு தங்கும்படியும், மோசே சீனாய் மலையின் மீது ஏறி வரும்படியும் பணித்தார். மலையின்மேல் மேகமாகத் தங்கிய கர்த்தர் தம் வல்லமையைக் காண்பித்தார்.
வானம் மின்னியது, இடி சப்தம் பெரியதாய்க் கேட்டது. பெரும் வெளிச்சம் வீசியது. இஸ்ரவேல் மக்கள் மிகவும் பயந்தனர். மோசேவுடன் கர்த்தர் பேசினார். மோசே கர்த்தரைப் பார்க்க வேண்டும் என வேண்டினார். ஆனால் கர்த்தரைப் பார்க்க முடியாது. பாறை வெடிப்பில் ஒளிந்து கொண்டிருந்த மோசேவை கர்த்தர் கடந்து போனார். கர்த்தரின் மகிமையின் பின்புறத்தை மட்டும் பார்த்தார் மோசே.
கர்த்தர் இஸ்ரவேல் மக்களுக்கு பத்து கட்டளைகளைக் கொடுத்தார். கற்பாறைப் பலகையில் செதுக்கித் தரப்பட்டது. அக்கட்டளைகள்: 1) உன் தேவனாகிய கர்த்தர் நானே. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம். 2) யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம். 3) கர்த்தருடைய வார்த்தையை வீணிலே வழங்காதிருப்பாயாக. 4) ஓய்வு நாளைப் பரிசுத்தமாய் ஆசாரிக்க நினைப்பாயாக. 5) உன் தகப்பனையும், உன் தாயையும் கனம் பண்ணுவாயாக. 6) கொலை செய்யாதிருப்பாயாக. 7) விபசாரம் செய்யாதிருப்பாயாக. 8) களவு செய்யாதிருப்பாயாக. 9) பிறனுக்கு விரோதமாகப் பொய் சாட்சி சொல்லாதிருப்பாயாக. 10. பிறருக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக.
மோசே இக்கட்டளைகளை கர்த்தரிடமிருந்து பெற்றுக் கொண்டு மலையிலிருந்து இறங்கிய போது, இஸ்ரவேலர் எண்ணினர். "மோசே திரும்பி வரமாட்டார். இடியும் மின்னலும் எங்களைப் பயமுறுத்தின' எனப் பயந்து தங்களது பொன் ஆபரணங்களைக் கொண்டு ஒரு கன்றுக்குட்டி உருவம் செய்து அதை ஆராதித்தனர். அதைக்கண்டு கோபம் கொண்ட மோசே மக்களைக் கண்டித்து, கர்த்தர் கொடுத்த பத்து கட்டளைகளைக் கொடுத்தார். அக்கட்டளைகள் இன்றுவரை மக்களுக்கு போதிக்கப்படுகின்றன (யாத்திராகமம் 20: 3-17).
பத்து கட்டளைகள் மிகக் கடுமையானவை. மனிதன் பாவ சுபாவத்தால் கடைப்பிடிக்காமல் தவறிப் போகிறான். ஆண்டவராகிய இயேசு இக்கட்டளைகள் மனிதன் தான் பாவி என்பதைக் காட்டும் கண்ணாடி. எனவே இப்பத்து கட்டளைகளுக்கு பதிலாக இரண்டு கட்டளைகளைத் தந்தார். அவை: 1) உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனத்தோடும் அன்பு கூர்வாயாக. 2) உன்னிடத்தில் அன்பு கூர்வது போல பிறனிடத்திலும் அன்பு கூர்வாயாக. இவ்விரண்டு கட்டளைகளைப் பின்பற்றினால், மோசே மூலம் பெற்ற பத்து கட்டளைகளை நிறைவேற்றியது போலாகும் என்றார். "கட்டளைகளைப் பின்பற்றுவோரை ஆயிரம் தலைமுறைகள் ஆசீர்வதிப்பேன்' என்று கர்த்தர் கூறுகிறார். கட்டளைகளைப் பின்பற்றுவோம்; கர்த்தரின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.