தேவன் கொடுத்ததை தேவனுக்கே கொடுத்த அன்னாள்
தாய்மை என்பது பெரும் பாக்கியம். பிள்ளைச் செல்வம் ஒரு பெரும் செல்வம். திருமண வாழ்வில் ஒரு பெண், பிள்ளையைப் பெற்றுக்கொள்வது மிக மகிழ்வான நிகழ்ச்சி.
தாய்மை என்பது பெரும் பாக்கியம். பிள்ளைச் செல்வம் ஒரு பெரும் செல்வம். திருமண வாழ்வில் ஒரு பெண், பிள்ளையைப் பெற்றுக்கொள்வது மிக மகிழ்வான நிகழ்ச்சி.
பெற்றவர்கள் "தாய், தந்தை' எனப் போற்றப்படுகின்றனர். மகப்பேறு மருத்துவர்கள் "பெண்ணின் கர்ப்பத்தில் சிசு வளர்ச்சி பெறுவதை ஓர் அற்புதம்' என்பர். இவ்வுலகினர் பிள்ளை பெற்றுக் கொள்ளாதவரை "மலடி' எனப் பெயர் சூட்டி சிறுமைப் படுத்துவர்.
வேதாகமத்தில் தாய்மை அடையாத அன்னாள் என்ற பெண்ணின் வரலாறு உள்ளது. கி.மு. 350 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரவேல் நாட்டில் ராம தாயீம் என்ற மலை ஊரில் எல்க்கானா என்பவர் தனது இரு மனைவிகளுடன் தெய்வ பக்தி மிக்கவராக வாழ்ந்தார். முதல் மனைவி அன்னாள். இரண்டாம் மனைவி பெனின்னாள்.
அன்னாளுக்கு பிள்ளைகள் இல்லை. பெனின்னாளுக்கு பிள்ளைகள் பலர் பிறந்தனர். அன்னாளை மலடி என்று எல்லோரும் ஏளனமாகப் பேசினர். அவள் மிகவும் நொந்து போனாள். தெய்வத்திடம் மிக பக்தியுடன் விண்ணப்பம் செய்து வந்தாள். எல்க்கானா அன்னாளை மிகவும் நேசித்தார். என்ன இருந்தாலும் மலடி என்பது அவருக்கு பெரும் துன்பமாக இருந்தது.
யூத பெண்களின் வழக்கப்படி அன்னாள் எல்லா தெய்வ வழிபாடுகளையும் சிரத்தையுடன் கைக் கொண்டாள். உண்ணா நோன்பும், விரதமும் அவள் வாழ்வில் முக்கிய இடத்தைப் பிடித்தது.
எல்க்கானா தன் குடும்பத்துடன் சீலோ என்ற ஊரிலுள்ள ஆலயத்துக்கு ஆண்டுதோறும் சென்று பலியிட்டு தேவனை ஆராதிப்பது வழக்கம். மாமிசம், திராட்சை ரசம், கோதுமை அப்பம், பணம் இவற்றைப் பங்கிட்டு தம் மனைவிகளுக்கும், பிள்ளைகளுக்கும் கொடுப்பார். அன்னாள் மட்டும் உண்ணாமல் அழுதுகொண்டே தன் குறை தீர வில்லை என
வேதனைப்படுவாள்.
அன்னாள் தனியாக ஆலய வாயிற்படியில் மிகவும் பணிவுடனும், பக்தியுடனும் இறைவன் முன்பு விழுந்து அழுது தேவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டாள். ""எனக்கோர் ஆண் குழந்தையைக் கொடுத்தால், அப்பிள்ளை தாய்ப்பால் மறந்தவுடன் இவ்வாலயத்தில் உனக்குத் தொண்டு செய்ய கோயில் பிள்ளையாகக் கொடுத்து விடுவேன்'' என்றாள்.
அவள் விண்ணப்பம் கேட்கப்பட்டது.
பின்பு அவள் தன்னுடைய ஊருக்குச் சென்ற பொழுது கர்ப்பம் தரித்தாள். ஆம்... அவள் தெய்வத்தை வேண்டிக் கொண்டது போல் ஓர் அழகான ஆண் மகவைப் பெற்று அதற்கு "சாமுவேல்' என்று பெயரிட்டாள்.
அப்பெயருக்கு தெய்வத்திடம் பிச்சை கேட்டு வேண்டுதலுடன் பிறந்தவன் என்று அர்த்தம். பிள்ளை வளர்ந்தபோது அன்னாள் ""அவன் ஆலயத்தின் பிள்ளை. அவன் நசரேய விரதம் உள்ளவன். பிள்ளையின் தலைமுடி சவரக் கத்தியால் சிரைக்கப்படக்கூடாது'' என்று தன் கணவரிடம் கூறினாள். பின்னர் தம் கணவருடன் சீலோவிலுள்ள ஆலயத்துக்கு மகனை அழைத்து வந்தாள். ஒபேத் என்னும் சணல் ஆடையை (அங்கி) அவனுக்கு அணிவித்து விட்டு, அந்த ஆலயத்தின் ஆசாரியனிடம் ""நான் நேர்ந்து கொண்டு பெற்றெடுத்த என் அழகு, அன்பு, என் குறை தீர்த்த சாமுவேலை உம்மிடம் ஒப்படைக்கிறேன். இப்பிள்ளை இவ்வாலயத்தில் வளரும். இனி சாமுவேல் என் பிள்ளை இல்லை; நசரேய விரதமுள்ள தெய்வப் பிள்ளை'' என்று கூறி ஐந்து வயதுடைய சாமுவேலை தெய்வத்துக்கே கொடுத்து விட்டாள்.
ஆண்டுதோறும் அங்கு வழிபட வரும்போது சாமுவேலுக்கு ஒபேத் என்ற அங்கியை தைத்து வந்து தருவாள். பின்னர் அன்னாளுக்கு ஏழு பிள்ளைகள் பிறந்தனர். சாமுவேல் தெய்வப் பிள்ளையாய் ஏலி ஆசாரியனிடம் வேதம் கற்று, தினமும் தெய்வத்துக்கு ஆராதனைகள் செய்து வந்தான். பார்ப்போர் எல்லாம் இந்தச் சிறு பையனின் தெய்வ பக்தியைக் கண்டு வியந்தனர். இன்றும் அன்னாள் வரலாறு மிகவும் பக்தியுடன் படிக்கப்படுகிறது. தெய்வத்துக்கே தான் பெற்ற பிள்ளையைத் தந்த அன்னாளை போற்றுவோம்.