பூலித்தேவன், தாம் கட்டிய கோட்டைகளுக்குப் பாண்டிய மன்னர் பரம்பரைப் பெயர்களைச் சூட்டினார். களக் காட்டுக் கோட்டைக்கு "வீரபாண்டியன்' என்றும், ஊற்றுமலைக் கோட்டைக்கு "மாறவர்மன்' என்றும், கோலார்ப்பட்டிக் கோட்டைக்குக் "கொல்லம் கொண்டான்' என்றும் பெயர்கள் கொடுத்தவர், தம் மனத்துக்கு மிகவும் பிடித்தமான வாசுதேவநல்லூர்க் கோட்டைக்குக் "குலசேகரன்' என்று பெயரிட்டார். திருக்குறுங்குடியிலும் சாம்பவர் வடகரையிலும் கோட்டைகள் இருந்தன.
1756 மார்ச் 21-ஆம் நாள் நடைபெற்ற திருநெல்வேலிப் போரில், தம்முடைய கெழுதகை நண்பர் மூடேமியா என்பவரை இழக்க நேர்ந்தபோது பூலித்தேவன் மனமுடைந்து போனார். அதே ஆண்டு மே 6-ஆம் தேதி, ஸ்ரீவில்லிப்புத்தூரையும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி கொல்லம் கொண்டானையும் பிரிட்டிஷார் பிடித்தனர்.
டிசம்பர் 1-ஆம் தேதி நடந்த கங்கை கொண்டான் போரில், பூலித்தேவனின் படைகளுக்கு ஏக சேதம். இருப்பினும், பாளையப்பட்டுகளை ஒன்று திரட்டி வலிமையைப் பெருக்கிக் கொண்ட பூலித்தேவனுக்கு ஊற்றுமலையாரும் வடகரையின் சின்னணைஞ்ஞாத் தேவனும் மேலும் துணை நின்றார்கள். 1759 ஜூலை தொடங்கித் தொடர் தாக்குதல்கள்; டிசம்பர் 4-ஆம் நாள், பிரிட்டிஷ் படைகள் வாசுதேவநல்லூர்க் கோட்டையைத் தாக்கின. பீரங்கிகள் வெடித்தன.
தம்முடைய படைகளை இரண்டாகப் பிரித்த பூலித்தேவன், ஒன்றை வாசுதேவநல்லூர் குலசேகரன் கோட்டையிலும், மற்றொன்றை நெற்கட்டுஞ்செவ்வல் நெல்லைத் தங்கவேலிக் கோட்டையிலும் நிறுத்தி, இரண்டு பக்கங்களிலிருந்தும் பிரிட்டிஷாரை எதிர்த்தார். நடுவில் சிக்கிக் கொண்ட பகைப் படை தோல்வியுற்றது.
இந்தத் தாக்குதலும் போரும் நான்கு மாதங்களுக்கு நடந்ததாகத் தெரிகிறது. இருப்பினும், 1761-இல் நடைபெற்ற தாக்குதல்களில் நெற்கட்டுஞ்செவ்வல் கோட்டையை எதிரிகள் வளைத்துவிட, பூலித்தேவன் கடலாடிக்குத் தப்பி விட்டார்.
இதற்கிடையில், திருநெல்வேலிப் பகுதிகளைத் தங்களின் ஆளுகைக்கீழ் கொணர வேண்டும் என்று விரும்பிய பிரிட்டிஷார், மேஜர் டொனால்ட் கேம்பெல் என்பாரை மதுரை-நெல்லைப் படைகளின் தளபதியாக நியமித்தனர். 1764-இல், பாளையங்கோட்டையை பிரிட்டிஷார் கைப்பற்றிவிட, கான்சாஹிப் மருதநாயகம் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டார்.
களக்காடு, திருக்குறுங்குடி, பனகுடி, வடகரை போன்ற பகுதிகளில் பாளையத்தாரின் கிளர்ச்சிகள் பொங்கும் என்று எதிர்பார்த்த கேம்பெல், நவாப் மற்றும் பிரிட்டிஷ் படைகளை இந்த இடங்களிலெல்லாம் குவித்தார்.
1766-இல், கடலாடியிலிருந்து பூலித்தேவன் நெற்கட்டுஞ்செவ்வல் திரும்பியதையும், பாளையக்காரர்களின் போராட்டம் வலுப்பதையும் உணர்ந்த கிழக்கிந்தியக் கம்பெனி, மேஜர் வில்லியம் ஃப்ளிண்ட் என்பாரைக் கூடுதல் படைகளோடு திருநெல்வேலிக்கு அனுப்பியது.
1766 டிசம்பர் 23-ஆம் தேதி, ஃப்ளிண்ட், கொல்லங்கொண்டான் கோட்டையைத் தாக்கினார். பூலித்தேவனின் படையினரும் சிவகிரி பாளையத்தாரும் கோட்டையைக் காப்பாற்றினர். ஐரோப்பியர்கள் பலர் மாண்டு போக, ஃப்ளிண்ட் அவசர அவசரமாக ராஜபாளையம் சென்றார். தொடர்ந்து வந்த ஆண்டுகளில் கேம்ப்பெல்லோடு கேப்டன் ஹார்பரும் சேர்ந்து கொள்ள சிவகிரி, வாசுதேவநல்லூர், கொல்லம்கொண்டான், நெற்கட்டுஞ்செவ்வல் கோட்டைகள் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டன.
1767-68 -இல் நடைபெற்ற தாக்குதல்கள் ஒன்றில், தம்முடைய சகாக்களோடு பூலித்தேவன் தப்பியுள்ளார். பின்னர் அவரை பிரிட்டிஷார் சிறைபிடித்து நெல்லைக்கு அழைத்து வர முயன்றதாகச் சொல்லப்படுகிறது. வரும் வழியில், "சங்கரன்கோவிலில் வழிபட வேண்டும் என்று பூலித்தேவன் கேட்டதாகவும், கும்பினிப் படையினர் புடைசூழ கோயிலுக்குள் சென்றதாகவும், அங்கு விலங்குகளும் கட்டுகளும் அறுந்துவிழ சிவஞானஜோதியோடு அவர் கலந்ததாகவும்' செவிவழிப் பதிவுகள் கூறுகின்றன.
சங்கர நாராயணர் திருக்கோயிலில், "பூலித்தேவன் மறைந்த அறை' என்றொரு அறை காட்டப்படுகிறது. "காட்டுப் பகுதியில் குகை ஒன்றினுள் புகுந்தார் என்றும், மீண்டும் திரும்பவில்லை என்றும், தேடிச் சென்றவர்கள் வெறுங்கையோடு திரும்பினர்' என்றும் சிலர் சொல்கிறார்கள்.
பூலித்தேவனைத் தூக்கில் இட்ட பிரிட்டிஷார், அந்தச் செய்தியை வெளியில் சொன்னால் கிளர்ச்சி வெடிக்கும் என்று பயந்து மறைத்து விட்டதாகவும் ஒரு சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
எப்படியாயினும், வெள்ளையரை எதிர்த்துக் குரல் எழுப்பிப் போரிட்ட இந்திய வீரர்களில் பூலித்தேவனுக்கு முதன்மை உண்டு என்பதைப் பொருநையாள் பெருமிதத்துடன் பார்த்திருப்பாள்! பூலித்தேவனைப் பற்றிய நாட்டுப் பாடல்கள் ஒலிக்கும் போதெல்லாம், தன்னுடைய சிற்றலைக் கரங்களால் சிலாகிக்கிறாளோ என்னமோ!
பூலித்தேவனைப் பற்றி நினைக்கையில், பெரிய காலாடியை நினைக்காமல் இருக்கமுடியாது.
யார் இந்தக் காலாடி?
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.