முகப்பு
வெள்ளிமணி

பொருநை போற்றுதும்! - 125

பெரிய காலாடியைப் போலவே இன்னுமொரு மாவீரன் சுந்தரலிங்கம்... 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:


பெரிய காலாடியைப் போலவே இன்னுமொரு மாவீரன் சுந்தரலிங்கம்... 

சுந்தரலிங்கம் கதையைக் காண்பதற்கு முன்னர், 1700-களின் பிற்பகுதியில் நெல்லைப் பகுதி எப்படி இருந்தது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். 

பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆதிக்கத்தை எதிர்த்துத்தான் பூலித்தேவனும், பெரிய காலாடியும், வீரபாண்டிய கட்டபொம்மனும், சுந்தரலிங்கமும் கிளர்ந்தெழுந்தனர். இருப்பினும், நேரடியான கிழக்கிந்தியக் கம்பெனி ஆதிக்கம் 1792-இல்தான் தொடங்கியது. 

விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், ஆங்காங்கே நிலைபெற்றிருந்த விஜயநகர வழித்தோன்றல்கள், ஆங்காங்கே ஆட்சி நடத்தினார்கள். இவ்வகையில் மதுரையை மையமாகக் கொண்டு நாயக்கராட்சி தொடர்ந்தது.

நாயக்கராட்சிக் காலத்திலேயே பாண்டிய மண்டலம், பல்வேறு பாளையங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இப்போதைய காலங்களில் சிலாகிக்கப்படுகிற "டிசென்ட்ரலைஸ்ட் கவர்னென்ஸ்' என்னும் வசதியைக் கூட்டுவதற்காகவே இப்படிப்பட்ட ஏற்பாடு. 

குடிபடைகளுக்கான தேவைகளை நிர்வகித்ததோடு, பாதுகாவலுக்கும் இந்தப்பாளையங்கள் பொறுப்பு வகித்தன. இதனால், பாளையங்களில் கோட்டைக் கொத்தளங்கள் அமைக்கப்பட்டு, ஆயுதப்படைகளும் நிறுவப்பட்டன. மொத்தமிருந்த 72 பாளையங்களில் 36 பாளையங்கள் (அப்போதைய) நெல்லை மாவட்டத்தில் இருந்தன. பாளையத் தலைவர்கள், நாயக்கராட்சியின் குறுநிலமன்னர்களாகத் திகழ்ந்தனர். 

கிழக்குப் பகுதிப் பாளையங்களின் தலைவர்கள், பெரும்பாலும் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். மேற்குப் பகுதிப் பாளையங்களின் தலைவர்கள், தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள். ஒரு சில பாளையங்களுக்கு, அண்டையிலிருந்த பாளையங்கள் மீது மேலதிகாரம் செலுத்துகிற உரிமை வழங்கப்பட்டிருந்தது. இவ்வகையில்தான், கிழக்குப் பாளையங்களில் மிகுசெல்வாக்கு பெற்றவராகப் பாஞ்சாலக்குறிச்சிப் பாளையக்காரரும், மேற்குப் பாளையங்களில் மிகுசெல்வாக்கு பெற்றவராக நெற்கட்டுஞ்செவ்வல் பாளையக்காரரும் விளங்கினர். 

மதுரை நாயக்கராட்சியும் முடிவுற்ற பின்னர், மதுரை, நெல்லை உள்ளிட்ட பாண்டிய மண்டலம், ஆற்காடு நவாப்பின் அதிகாரத்திற்குள் வந்தது. இப்பகுதிகளின் வளமையும் உழைப்பும் செழுமையான வருமானத்திற்கு வழிகோலியதால், பாளையத்தாரின் கப்பம், நவாப்பிற்கு இன்றியமையாதது ஆனது. 

1792-வரை நவாப்பின் ஆட்சிக்குக் கிழக்கிந்தியக் கம்பெனி உதவி செய்தது. தங்களிடமிருந்து கப்பமும் கிஸ்தியும் பெற்றுக் கொள்கிற நவாப், தங்களுடைய மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்னும் ஏமாற்றமும் வேற்று தேசத்தாரோடு சேர்ந்து கொண்டு மக்களைப் பகடையாக்குகின்றனர் என்னும் எண்ணமும் பாளையத்தாருக்கு ஏற்பட்டபோது, கப்பம் செலுத்த அவர்கள் 
மறுத்தனர். 

பாளையத்தாரைப் பணிய வைப்பதற்காக பிரிட்டிஷ் உதவியை நவாப் நாடியபோதுதான், சென்னை, கடலூர், மதுரை போன்ற இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படையினரையும் தளபதிகளையும் கம்பெனி அனுப்பியது. கப்பம் வசூலித்துத் தருவதற்காகக் குத்தகையும் எடுத்தது. 

இவ்வாறாக, நேரடியாகக் களத்தில் இல்லாத நிலையிலும், பாளையங்கள் மீது கம்பெனி நிர்வாகம் ஆதிக்கம் செலுத்தத் தலைப்பட்டது. சிலரோடு உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டு, சிலரை எதிர்த்து, சிலரைச் சூறையாடி.... அரசியல் சதுரங்கத்தில் ஆட்டக்காரர்களும் இடம் மாறினார்கள்; பகடைகளும் படை மாறின.

இதனால், எல்லாப் பாளையக்காரர்களும் எப்போதும் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக இருந்தார்கள் என்றும், எப்போதும் அடித்துக் கொண்டார்கள் என்றும் சொல்வதற்கில்லை. பல்வேறு காரணங்களால், கிழக்குப் பாளையங்களும் மேற்குப் பாளையங்களும் பெரும்பாலான காலங்களில் எதிரும் புதிருமாக நின்றன. 

பாளையக்காரர் என்றாலே அநேகமாக எல்லோருக்கும் நினைவு வரக்கூடிய வீரபாண்டிய கட்டபொம்முவின் பாட்டனார் பொல்லாப் பாண்டியர், கம்பெனியாருக்குக் கப்பம் செலுத்தி இணக்கமாகச் சென்றார்; ஆனால், அவருடைய பேரன் வீரபாண்டிய கட்டபொம்மு குறித்து அனைவரும் அறிவோம். 

வீரபாண்டியன் காலத்தில், எட்டையபுரப் பாளையம் பிரிட்டிஷாருக்கு இணக்கமாக இருந்தது; ஆனால், அதற்கு முந்தைய காலத்து மூதாதையர்கள், கம்பெனியாரைஎதிர்த்துள்ளனர். 

1758-59 -வாக்கில், எட்டையபுரப் பாளையம் கம்பெனியாரை எதிர்த்ததால், அந்தப் பகுதி முழுவதுமே பிரிட்டிஷ் படைகளால் சின்னா பின்னமாக்கப்பட்டதாகத் தெரிகிறது. 

பாளையக்காரர்கள் அனைவரையும் ஒன்றிணைக்க பூலித்தேவன் முனைந்தபோது பாஞ்சாலக்குறிச்சியும் எட்டையபுரமும் ஒத்துக்கொள்ள மறுத்தன. 

இப்படிப் பாளையங்களுக்குள் இருந்த ஒற்றுமை-வேற்றுமைகளைக் கம்பெனி தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள முற்பட்டது. ஆற்காடு நவாப்பால் நெடுங்காலத்திற்குச் சமாளிக்க முடியவில்லை. படை பலமின்மை, சந்தா சாஹிப்புக்கும் முஹம்மத்அலிக்கும் நடைபெற்ற சண்டை போன்ற பல காரணங்களால், ஆற்காடு நவாப்புக்கும் கிழக்கிந்தியக் கம்பெனிக்கும் 1792-இல் ஒப்பந்தம் ஒன்று உருவானது. இதன்படி, கம்பெனியே நேரடி ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. ரெவின்யூ போர்ட் அமைக்கப்பட்டு, "கலெக்டர்' என்னும் பெயரில் வரி வசூலிப்பதற்கான வெள்ளைக்கார அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். 

பாளையக்காரர்களைப் பிரித்தாள்வதற்கு மேலும் சில வாய்ப்புகள் இப்போது கிட்டின. பொருநைப் பகுதி முழுவதையும் சர்வே செய்த கம்பெனி நிர்வாகம், பாளையங்களின் எல்லைகளை ஒழுங்குபடுத்துவதாக அறிவித்தது. ஒரு பாளையத்தின் கிராமங்கள் சிலவற்றைப் பிரித்து வேறொரு பாளையத்துடன் இணைத்தது. இதனால், சகோதரப் பாளையங்களுக்குள் எல்லைத் தகராறுகள் உருவாகின. 

இப்படிப்பட்ட சூழலில்தான், வீரபாண்டிய கட்டபொம்மனும், சுந்தரலிங்கமும் 
சீறியெழுந்தார்கள்.   

(தொடரும்)

முழு கட்டுரையைப் படிக்க →