2020-ஆம் ஆண்டு ஹிஜ்ரி 1441 -ஆம் ஆண்டு. உலக முஸ்லிம்கள் மக்கா, மினா, அரபாத், முஜ் தலிபா, அகபாவில் கூடி வணக்க வழிபாடுகளில் ஈடுபடும் ஹஜ் செய்ய கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு சவூதி அரேபியாவில் உள்ளோர் மட்டும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் அனுமதிக்கப்படுவர் என்று அறிவித்திருக்கிறது சவூதி அரேபிய அரசு. கரோனா தீநுண்மி நோய்த்தொற்றின் தொடர் விளைவு மக்களைப் பற்றிப் பிடிக்காமல் முற்றிலுமாக ஒழிய மூலவன் அல்லாஹ் அருள் புரிய வேண்டும்.
ஹஜ் பெருநாள் உலகம் முழுவதிலும் நோன்புப் பெருநாள் கொண்டாடியது போல் வீடுகளில் தொழுது கரோனா நோய்த் தொற்றிலிருந்து உலகம் விடுபட்டு பொது முடக்கம், முழு முடக்கம், அரை முடக்கம், கால் முடக்கம் நீங்கி உலகம் உய்ய உலக மக்கள் நலமாய் வாழ இறைவனை இறைஞ்சும் நிகழ்ச்சி 1.8. 2020-இல் நடக்கும்.
இறுதித் தூதர் இனிய நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் மாத பத்தாம் நாளில் ஒட்டகத்தில் அமர்ந்திருக்கும் பொழுது மக்களிடம் "இது எந்த நாள்?' என்று கேட்டார்கள். கேண்மை மிகு தோழர்கள் "மேன்மைமிகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே பதில் சொல்லட்டும்' என்று அமைதி காத்தனர். இறுதி நபி (ஸல்) அவர்கள் "இது பெரிய ஹஜ் பெருநாள்' என்று நவின்றார்கள். அறிவிப்பவர் - அபூ பக்ரா (ரலி) நூல் தப்ஸீர் தபரீ. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அறிவித்தபடியே துல்ஹஜ் பிறை பத்தில் பெருநாள் பக்ரீத் கொண்டாடப்படுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நற்றோழர் முகீரா பின் ஷு அபா (ரலி) ஒரு ஹஜ் பெருநாளின் பொழுது ஒட்டகத்தில் அமர்ந்தவாறு சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். "இது ஹஜ் பெருநாள் ஆகும். இன்றைய நாளே பெரிய ஹஜ் நாள் ஆகும்' என்று குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர் - அப்துல்லாஹ் பின் சினான் (ரஹ்) நூல்- தப்ஸீர் தபரீ. குர்ஆன் விரிவுரையாளர் இப்னு ஜரீர் (ரஹ்) அவர்கள் இக்கருத்தை ஆதரிக்கிறார்கள்.
வைகறை சுபுஹு தொழுகை முடிந்து சூரியன் உதயமாகி இருபது நிமிடங்களுக்குப் பிறகு உள்ள இஸ்ராக் நேரத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை தொழ வேண்டும். தொழுத பின் மூத்தவர்கள் இளையவர்களின் நல்வாழ்விற்கு நல்லாசி வழங்குவர். அதன்பின்னரே வீட்டிற்குச் சென்று காலை சிற்றுண்டி உண்ண வேண்டும்.
தொழுது முடித்தபின் குர்பானி கொடுக்க வேண்டும். தொழுவதற்கு முன் குர்பானி கொடுப்பது கூடாது. குர்பானி கொடுக்கும் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய பிராணிகளின் கண்ணிலும், காதிலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அறிவிப்பவர் - அலி (ரலி) நூல் - நஸஈ 4296.
வெளிப்படையாக ஒற்றைக் கண் குருடான, நொண்டியான, நோய்வாய்ப்பட்ட, எலும்பு வலுவிழந்த பிராணிகளை குர்பானி கொடுக்கக்கூடாது. அறிவிப்பவர் - பரா வு பின் ஆஸிப் (ரலி). நூல் - நஸஈ 4295. கொம்பு உடைந்த, காது கிழிந்த பிராணிகளைக் குர்பானி கொடுக்கக் கூடாது. அறிவிப்பவர் - அலி (ரலி) நூல்- அஹ்மத் 599. காதின் முனைப்பகுதி துண்டிக்கப்பட்ட அல்லது அடிப்பகுதி துண்டிக்கப்பட்ட அல்லது துவாரம் இடப்பட்ட அல்லது காது, மூக்கு, உதடு உள்ளிட்டவை வெட்டப்பட்ட பிராணியைக் குர்பானி கொடுக்கக் கூடாது. அறிவிப்பவர் -அலி (ரலி) நூல் -அஹ்மத் 575. ஓராண்டு பூர்த்தியான ஆட்டையே குர்பானி கொடுக்கவேண்டும். நூல் - முஸ்லிம் 3971.
விலங்குகளை எரித்துக் கொல்வது போன்றது அல்ல குர்பானி. குர்பானி இஸ்லாமிய வரலாற்றின் அடிப்படையில் ஆதாரத்தில் சேதாரமில்லாமல், சிதைக்காமல் வதைக்காமல் கொடுப்பது.
குர்பானி கறியை மூன்றாகப் பிரித்து ஒரு பங்கை ஏழைகளுக்கும், ஒரு பங்கை உறவினர்களுக்கும் கொடுத்துவிட்டு, மீதமுள்ள ஒரு பங்கை மட்டும் குர்பானி கொடுப்பவர் எடுத்துக்கொள்ள வேண்டும். முழு குர்பானி கறியையும் ஏழைகளுக்குக் கொடுப்பது ஏற்றமானது. போற்றத்தக்க இம்முறையில் முழு குர்பானி கறியையும் ஏழைகளுக்குக் கொடுப்போர் ஏராளம். மக்காவிலுள்ள மினாவில் ஹஜ்ஜில் கொடுக்கப்படும் குர்பானி கறி முழுவதும் உலகில் வறிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டு உலகம் முழுவதும் வாழும் ஏழை எளியவர்கள் வயிறார உண்ண அயராது ஆண்டுதோறும் தொடர்கிறது தொண்டு.
இஸ்லாமிய வரலாற்று நிகழ்வையொட்டி நிகழும் தியாக நிகழ்ச்சி குர்பானி. இதனை புரியாது அறியாது, தெரியாது, தெளியாது பூரணமான ஏக இறைவனின் ஏகத்துவத்தை மறுத்து வெறுத்து வீணாக விவாதிப்பது நியாயமற்றது.
ஹஜ் பெருநாள் வாழ்த்துகள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.