கிருஷ்ணன் தேரிழுக்கும் கிருஷ்ண மான் இத்தனைப் பெருமைகளுக்குரிய வெளிமான்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கும் புகலிடமாக வல்லநாடு காப்பகம் திகழ்கிறது. கடந்த சில ஆண்டுகளில், இந்தக் காப்பகத்தில் உள்ள வெளிமான்களின் எண்ணிக்கை மும்மடங்கு உயர்ந்துள்ளது.
மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், பூலோகத்து உயிர்கள் அனைத்திற்கும் புகலிடம் தருவதில்தான் பொருநையாளுக்கு நிரம்ப மகிழ்ச்சி போலும்!
தாமிராவின் கைபற்றி நடக்க, நம்மை ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுப் பகுதிக்கு அழைத்து வந்துவிடுகிறாள். பொருநையாளின் குறுக்காக இருக்கிற அணைக்கட்டுகள் பலவற்றை நாம் ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். கோடைமேலழகியான் அணைக்கட்டு தொடங்கி மருதூர் அணைக்கட்டு வரை ஏழு அணைக்கட்டுகள். இவை யாவும் மிகப் பழமையானவை. அரசர்களும் குறுநிலமன்னர்களும் ஜமீன்களும் கட்டியவை. இந்த ஏழினுக்கும் அடுத்திருப்பது, எட்டாவதான ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு.
திட்டம் உருவானது - போர் குறுக்கிட்டது
19-ஆம் நூற்றாண்டுவரை, மருதூர் கீழக்கால் வழியாக வருகிற நீரானது, குளங்கள் பலவற்றில் நிரம்பி, பாசனத்திற்குப் பயன்பட்டது. தவிரவும், கொற்கைக் குளம், ஆற்றூர்க் குளம் போன்றவை, ஆற்றிலிருந்து நேரடியாக நீரைப் பெற்றன. இந்த ஏற்பாடு போதவில்லை; பலவகையான நடைமுறைச் சிக்கல்கள் தோன்றின.
மருதூர் அணைக்கட்டுப் பாசனத்தின் கீழிருந்த சுமார் 12,000 ஏக்கர் நிலம், போதுமான நீரின்றிக் காய்ந்தது. தவிர, பொருநையில் வெள்ளப்பெருக்கு வந்த காலங்களில், மருதூர் அணைக்கட்டு நிரம்பி வழிந்து, அதனால் சேதமும் ஏற்பட்டது. அப்போதைய திருநெல்வேலி ஜில்லா கலெக்டர் ரிச்சர்ட் பக்கிள், ஸ்ரீவைகுண்டம் பகுதியில், தாமிராவின் குறுக்காக அணை கட்டினால், விவசாயத்தை மேம்படுத்தலாம் என்று மதராஸ் அதிகாரிகளிடம் தெரிவித்தார். இதன்படி, அப்போதைய மாவட்டப் பொறியாளர் ஹார்ஸ்லி, 1855-இல், திட்டம் ஒன்றை வடிவமைத்தார்.
ஸ்ரீவைகுண்டத்தில் அணை கட்டுவது; வேளாண்மை, போக்குவரத்து - இரண்டுக்கும் ஏற்றனவாக, வடக்குப் பகுதியில் ஒரு கால்வாய், தூத்துக்குடி வரை செல்லும்; தெற்குப் பகுதியில் ஒரு கால்வாய், குலசேகரப்பட்டினம் வரை செல்லும்; அணைக்கட்டுக்கு மேலேயே போக்குவரத்துப் பாலம் ஒன்றும் கட்டப்படும்; இந்த அணைக்கட்டிலிருந்துத் தூத்துக்குடிக்குக் குடிநீர் வழங்கப்படும்; திருச்செந்தூர், தூத்துக்குடி, குலசேகரன்பட்டினம் பகுதிகளில் உள்ள சிறு சிறு நீர்நிலைகளுக்கும் நீர் வழங்கப்படும் - இவை யாவும், ஹார்ஸ்லி வடிவமைத்த திட்டத்தின் பகுதிகள். திட்டம் மிகவும் பயனுள்ளது என்பதையும் அவசியமானது என்பதையும் கண்ட கிழக்கிந்தியக் கம்பெனி போர்ட், 1857-இல், இத்திட்டத்திற்கு 3.80 லட்சம் ரூபாய் வழங்கி ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டத்தைத் தீட்டிய ஹார்ஸ்லி, 1863-67-ஆம் ஆண்டுகளில், ஆந்திரப் பகுதிகளில் பணியாற்றியதாகத் தெரிகிறது. திருமலை-திருப்பதிக்குச் சுமார் 130 கி.மீ. தொலைவில் இருக்கும் ஹார்ஸ்லி மலைகள், இவர் பெயரால் வழங்கப்படுகின்றன.
நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டாலும், 1857-இல் நடைபெற்ற இந்திய சுதந்திரப் போர் குறுக்கிட்டது. அனைத்தும் கிடப்புக்குள் போயின.
இடையூறுகள் - 21 ஆண்டுகள்
1857-இல், கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சி மாறி, இந்திய நாடு, பிரிட்டிஷ் அரசியின் நேரடி அதிகாரத்தின்கீழ் வந்தது. புதியதாக வைஸ்ராய் பொறுப்பேற்ற கானிங் பிரபு, நீர்ப்பாசனத் திட்டங்கள்மீது அதிகவனம் செலுத்தினார். 1859, செப்டம்பர் 24-ஆம் தேதி வெளியான அரசாணை எண்: 1625-இன்படி, ஸ்ரீவைகுண்டம் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தது. இருப்பினும், சில ஆண்டுகளுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. 1866-இல் கலெக்டர் பக்கிள் இத்திட்டம் உடனடியாகச் செயல்படுத்தப்படவேண்டும் என்று அரசிடம் வலியுறுத்தினார். காலப்போக்கில் செலவு மதிப்பீடு உயர்ந்துவிட்டது என்பதால், 1866-67-இல், விவசாயிகள் தாங்களே முன்வந்து 20 ஆயிரம் ரூபாயைச் சேகரித்து அணைக்காக வழங்கினர்.
இருப்பினும், முன்னர் கணக்கிடப்பட்ட செலவு மதிப்பீடு போதவே போதாது என்னும் நிலை உருவாகியிருந்தது. பெண்டர்காஸ்ட் என்னும் பொறியாளர், 1867-இல், மற்றுமொரு மதிப்பீட்டைத் தயாரித்தார். இதன்படி, ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுக்கான செலவு மதிப்பீடு 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆனது. நிதிப் பற்றாக்குறை என்று இம்மதிப்பீடு திருப்பப்பட்டது. 1868-இல், லெஃப்டினென்ட் ஆர்.ஈ.ஷெப்பர்ட் இன்னுமொரு மதிப்பீட்டைத் தயாரித்தார். ஒருவழியாக, 1869-இல், அரசாங்கம் நிதி ஒதுக்கி ஒப்புதல் வழங்கியது.
1869-இல், கட்டுமானம் தொடங்கிவிட்டாலும், ஏராளமான தடைகள் ஏற்பட்டன. செலவு ஏறியதாலும், பணவீக்கம் அதிகரித்ததாலும், திட்ட மதிப்பீட்டை அவ்வப்போது மாற்ற வேண்டிவந்தது. செலவின் காரணமாகப் போக்குவரத்துத் திட்டம் கைவிடப்பட்டது. அணைக்கட்டின் முக்கியமான பகுதி 1871-72-இல் கட்டிமுடிக்கப்பட்டது என்றாலும், தலை மதகுப் பகுதிகள் 1889-க்குச் சற்று முன்னேதான் முடிக்கப்பட்டன. 1873 முதல், அணைக்கட்டிலிருந்து தூத்துக்குடிக்குக் குடிநீர் வழங்குதல் தொடங்கியது.
1868 முதல் 1889 வரை, மொத்தமாக நிறைவு பெற, ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுக்கு 21 ஆண்டுகள் பிடித்தன. அவ்வப்போது தடங்கல்கள், அதீத மழை, வெள்ளம் - இப்படியெல்லாம் இடையூறுகளைச் சந்தித்ததால், செலவும் ஏகத்துக்குக் கூடியது. 1889-இல் நிறைவு செய்தபோது, அணைக்கட்டின் மொத்த செலவு 18 லட்சத்து 69 ஆயிரத்து 809 ரூபாயை எட்டியிருந்தது.
1,380 அடி நீளம் கொண்ட இந்த அணைக்கட்டிலிருந்து வடகால், தென்கால் என்னும் இரண்டு கால்வாய்கள் நீரேந்திச் செல்கின்றன. வடகாலிலிருந்து கொற்கைப் பகுதி, ஆறுமுகமங்கலக் குளம், பேய்க்குளம் ஆகியவையும், தென்காலிலிருந்து கடம்பா குளம், ஆற்றூர்க்குளம், கீரனூர்க் குளம் ஆகியவையும் நீர் பெறுகின்றன. தேவைக்குப் போதவில்லை என்பதால், அவ்வப்போது இந்த அணைக்கட்டானது, சில மாற்றங்களையும் கண்டுள்ளது.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.