முகப்பு
வெள்ளிமணி

தவமியற்ற தலைசிறந்த தலம்!

"திருமழிசை', "திருமழிசை அகரம்' என வழங்கப்படும் ஆழ்வார் அவதாரத்தலம் 12 மற்றும் 13-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளிலேயே "திருமழிசை சதுர்வேதி மங்கலம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:29 PM
பகிர்:

"திருமழிசை', "திருமழிசை அகரம்' என வழங்கப்படும் ஆழ்வார் அவதாரத்தலம் 12 மற்றும் 13-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளிலேயே "திருமழிசை சதுர்வேதி மங்கலம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தலம் சென்னை பூவிருந்தவல்லியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. வடமொழியில் "மழிசை' என்பது "பூமிக்கே ஆதாரமானது' என்ற பொருளில் "மஹீஸார úக்ஷத்ரம்' எனப்பட்டது.
அத்ரி, பிருகு முதலிய பிரம்ம ரிஷிகள் சத்ய லோகம் சென்று ""தவமியற்ற சிறந்த தலத்தைக் கூறுங்கள்'' என பிரம்மதேவரிடம் வேண்டினர்.
நான்முகன் தேவசிற்பி சதுர்முகனைத் துலாக்கோல் கொண்டு வரக்கூறி ஒருபக்கத் தட்டில் திருமழிசையையும், மறுபக்கம் ஐம்பது யோசனை பரப்பளவுள்ள நிலப்பரப்பையும் வைக்க, முந்திய தட்டே கனமாகித் தாழ்ந்தும் பிந்திய தட்டு மேலெழும்பியும் நின்றது.
""தவமியற்ற தலைசிறந்த தலம் திருமழிசையே..!'' என முனிவர்கட்கு எடுத்துக் காட்டினார் பிரம்மதேவர்.
அத்தகைய பெருமை வாய்ந்த இத்திருமழிசையில் திருமங்கை வல்லித்தாயார் எனும் தனிக்கோயில் நாச்சியாருடன் ஜெகந்நாதப் பெருமாள் அருள்பாலிக்கின்றார். பூரி ஜெகந்நாதர் வடக்கிலும், கும்பகோணம் அருகே நந்திபுர விண்ணகரம் என்கிற நாதன்கோவில் ஜெகந்நாதர் தெற்கிலும் அமைந்திருக்க நடுவில் உள்ள திருமழிசையில் குடிகொண்ட ஜெகந்நாதர் "மத்திய ஜெகந்நாத'ராக வணங்கப்படுகிறார்.
பாரிஜாதத்தைத் தல விருட்சமாகக் கொண்ட கிழக்கு நோக்கிய ராஜ கோபுரத்துடன் திருமழிசை ஜெகந்நாதப் பெருமாள் ருக்மணி சத்யபாமா, பிருகு, மார்க்கண்டேயருடன் கிழக்கு நோக்கிய சந்நிதியில் காட்சி தருகிறார். திருமங்கை வல்லித்தாயார், லட்சுமி நரசிம்மர், ஆண்டாள், மணவாள மாமுனிகள் ஆகியோருக்கென தனிச் சந்நிதிகள் உள்ளன.
பார்க்கவ முனிவர் திருமழிசையில் யாகம் செய்யும்போது, அவர் மனைவி கருவுற்று 12 மாதங்கள் கழித்து உறுப்புகள் இல்லாத ஒரு பிண்டத்தைப் பெற்றார். அதனை வளர்க்க மனமின்றி பிரம்புப் புதரில் விட்டுச் சென்றனர்.
இறையருளால் கை, கால் முளைத்து அதுவோர் அழகிய ஆண்குழந்தையானது. அழுது கொண்டிருந்த அக்குழந்தையை அவ்வழியே வந்த மழலை பாக்கியமில்லாத திருவாளன்-பங்கயச்செல்வி தம்பதியினர் எடுத்துச் சென்று வளர்த்தனர்.
"பக்திசாரர்', "திருமழிசை ஆழ்வார்' எனப் பிற்காலத்தில் அழைக்கப்பட்ட அக்குழந்தை பக்கத்து ஊரைச் சேர்ந்த வயதான தம்பதியர் அன்புடன் கொடுத்த பாலை ஆர்வத்துடன் குடித்தது.
சில ஆண்டுகள் கழித்து தனக்கு கொடுத்த பாலின் மீதத்தை அந்த வயதான தம்பதியர் உண்ணுமாறு செய்தார் பக்திசாரர். உடனே அத்தம்பதிகளுக்கு முதுமை நீங்கி இளமை மீண்டது. பின்னர் அவர்களுக்குப் பிறந்த ஆண்பிள்ளை கனிகண்ணன் எனும் பெயரோடு பக்திசாரரின் சீடரானார். பக்திசாரர் "நான்முகன் திருவந்தாதி', "திருச்சந்த விருத்தம்' என்னும் பிரபந்தங்களைப் பாடினார். அவை திவ்ய பிரபந்தத்தில் இடம் பெற்றன.
சமயங்கள் பலவற்றை ஆராய்ந்த பிறகு, திருமயிலையில் பேயாழ்வாரை குருவாக ஏற்று வைணவத்தைப் பின்பற்றலானார்.
இவருக்கு வலது காலில் 3-ஆவது கண் உண்டு. திருமழிசை ஜெகந்நாதப் பெருமாள் கோயிலில் திருமழிசைஆழ்வார் சக்கரத்தாழ்வாரின் அம்சமாய் இங்கு தனி சந்நிதியில் எழுந்தருளி மக்களுக்கு அருள் புரிகிறார்.
இக்கோயில் காலை 7.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும் மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும். இக்கோயிலில் வழிபடுவோர் ஞானமும், வாக்கு வன்மையும், தேர்வுகளில் வெற்றியும் பெறுவர். தை மாதம் திருமழிசை ஆழ்வார் அவதார உற்சவம் 10 நாள்களும், ஆனி மாத பிரம்மோற்சவம் 10 நாள்களும் விமரிசையாக நடைபெறும்.
தற்போது இத்திருக்கோயிலில் உரிய அனுமதிகள் பெற்று ராஜகோபுரம் தொடங்கி, விமானம் மற்றும் அனைத்துப் பகுதிகளிலும் திருப்பணிகள் முறைப்படி நடந்து வருகின்றன. விரைவில் குடமுழுக்கு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் விவரங்களுக்கு: 044-26810542 / 9952006384.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.