முகப்பு
வெள்ளிமணி

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்! - 2020

இந்த சார்வரி வருஷம், தக்ஷிணாயனம் வர்ஷ ருது, புரட்டாசி மாதம் இரண்டாம் தேதி (18. 9. 2020) வெள்ளிக்கிழமை சுக்ல பட்சம் வளர்பிறை துவிதியை, அஸ்த நட்சத்திரம் பிராம்ய நாமயோகம், கெளலவ கரணம் அமிர்தயோகம் கூடிய

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:14 PM
பகிர்:


இந்த சார்வரி வருஷம், தக்ஷிணாயனம் வர்ஷ ருது, புரட்டாசி மாதம் இரண்டாம் தேதி (18. 9. 2020) வெள்ளிக்கிழமை சுக்ல பட்சம் வளர்பிறை துவிதியை, அஸ்த நட்சத்திரம் பிராம்ய நாமயோகம், கெளலவ கரணம் அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி 37 நாழிகை அளவில் இரவு மணி 8. 45 (ஐநப) அளவில் சுக்கிர பகவானின் ஹோரையில் மேஷ லக்னத்தில், கன்னி நவாம்சத்தில் ராகு - கேது பகவான்கள் மிதுன, தனுசு ராசியிலிருந்து முறையே ரிஷப, விருச்சிக ராசிகளுக்கு பெயர்ச்சி ஆகிறார்கள். ராகு பகவான் மிருக சீரிஷ நட்சத்திரம் இரண்டாம் பாதம் முடிவிலும், கேது பகவான் கேட்டை நட்சத்திரம் நான்காம் பாதம் முடிவிலும் வக்கிரகதியில் சஞ்சரிக்கத் தொடங்குகிறார்கள்.

இந்த சார்வரி வருஷம் உத்தராயணம் சிசிர ருது மாசி மாதம் ஒன்றாம் தேதி (13. 2. 2021) சனிக்கிழமையன்று ராகு பகவான் மிருகசீரிஷ நட்சத்திரம் ஒன்றாம் பாதத்தை விட்டு, ரோகிணி நட்சத்திரம் நான்காம் பாதம் முடிவில் சஞ்சரிக்கத் தொடங்குகிறார்.
பிலவ வருஷம் உத்தராயணம் வர்ஷ ருது புரட்டாசி மாதம் மூன்றாம் தேதி (19. 9. 2021) ஞாயிற்றுக்கிழமையன்று ராகு பகவான் ரோகிணி நட்சத்திரம் ஒன்றாம் பாதத்தை விட்டு, கிருத்திகை நட்சத்திரம் நான்காம் பாதம் முடிவில் சஞ்சரிக்கத் தொடங்குகிறார்.

பிலவ வருஷம் உத்தராயணம் சிசிர ருது பங்குனி மாதம் நான்காம் தேதி (17. 3. 2022) வியாழக்கிழமை சுக்லபட்சம் (வளர்பிறை) சதுர்த்தசி பூரம் நட்சத்திரம் சூல நாம யோகம், வணிஜை கரணம், சித்தயோகம் கூடிய சுபயோகம் கூடிய சுபதினத்தில் உதயாதி 6 நாழிகை அளவில் காலை மணி 8. 27 (ஐநப) அளவில் சூரிய பகவானின் ஹோரையில் ராகு-கேது பகவான்கள் ரிஷப, விருச்சிக ராசிகளிலிருந்து முறையே மேஷம், துலாம் ராசிகளுக்கு பெயர்ச்சி ஆகிறார்கள். ராகு பகவான் கிருத்திகை நட்சத்திரம் ஒன்றாம் பாதம் முடிவிலும், கேது பகவான் விசாகம் நட்சத்திரம் மூன்றாம் பாதம் முடிவிலும் வக்கிரகதியில் சஞ்சரிக்கத் தொடங்குகிறார்கள்.

லக்னம் மற்றும் அஷ்டம ஸ்தானத்திற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் லக்னத்தில் மூலத் திரிகோணம் பெற்று பஞ்ச மஹா புருஷ யோகங்களில் ஒன்றான ருசக யோகத்தைப் பெற்று நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார். பூர்வ புண்ணியாதிபதியான சூரிய பகவான் ருணம், ரோகம், சத்ரு ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் மகர ராசியை அடைகிறார்.

பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் பாக்கிய ஸ்தானத்திலேயே மூலத் திரிகோணம் பெற்று நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார். தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்திற்கும், களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான், சுக ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார்.

தைரிய ஸ்தானத்திற்கும், ருணம், ரோகம், சத்ரு ஸ்தானத்திற்கும் அதிபதியான புத பகவான் ஆறாம் வீட்டில் ஆட்சி உச்சம் மூலத்திரிகோணம் பெற்று, நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார்.

சுக ஸ்தானத்திற்கதிபதியான சந்திரபகவான் ஆறாம் வீட்டில் சுய சாரத்தில் அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார்.

ஆறாம் வீட்டில் உன்னதமான புத ஆதித்ய யோகம் ஏற்படுகிறது. குரு பகவானின் ஐந்தாம் பார்வை லக்னத்தின் மீதும் அங்கமர்ந்திருக்கும் செவ்வாய் பகவானின் மீதும் (குரு மங்கள யோகம்) ஏழாம் பார்வையாக தைரிய ஸ்தானத்தின் மீதும், ஒன்பதாம் பார்வையாக பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் மீதும் படிகிறது. குருபகவானின் பார்வை லக்னத்தின் மீது படிவது மேன்மையானது என்பதை அனைவரும் அறிந்ததே. மேஷ லக்னத்திற்கு குரு பகவானின் பார்வை முழுமையான நன்மைகளைக் கொடுக்கும் என்பதால் -குரு பார்க்க கோடி நன்மை- என்பது பொருத்தமாக அமைகிறது. சில வலுவிழந்த ஜாதகங்களுக்கு -குரு பார்க்க கோடி பாப நிவர்த்தி- என்பதும் ஒத்து வருகிறது என்றும் புரிந்து கொள்ள வேண்டும்.

ராகு-கேது பகவான்கள் இடமிருந்து வலம் -அதாவது ஆன்டி க்ளாக் வைஸ் என்கிற ரீதியில்- இந்த பால்வெளி பிரபஞ்சத்தை (சூரிய குடும்பம்) சுற்றி வருகின்றன. மற்ற ஏழு கிரகங்களான சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனிபகவான்கள் வலமிருந்து இடமாக அதாவது பிரதட்சணமாகச் சுற்றி வருகின்றன என்பதை முதற்கண் அறிய வேண்டும்.

ராகு-கேது பகவான்களுக்கு உருவம் கிடையாது என்றும் அவைகள் நிழல் கிரகங்கள் என்றும் சொல்லப்படுகின்றன. இவைகள் சுபாவ அசுப கிரகங்கள் ஆவார்கள்.

இவர்களுக்கு சொந்த இல்லம் (ஆட்சி வீடு) கிடையாது. எந்த ராசியில் சஞ்சரிக்கிறார்களோ அந்த ராசியாதிபதி போல் பலன் தருவார்கள். சுபர் இல்லத்தில் சஞ்சரிக்கும் பொழுது சுப பலனும், அசுபர் இல்லத்தில் சஞ்சரிக்கும் பொழுது அசுப பலனும் உண்டாகும். ராகு-கேது பகவான்கள் ஒரு ராசியைக் கடக்க சுமாராக ஒன்றரை ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார்கள். லக்னத்திற்கோ அல்லது சந்திரனுக்கோ (ராசி) 3, 6, 11-ஆம் இடங்களில் இருந்தால் பிரபல யோகத்தைச் செய்வார்கள் அல்லது ராகு - கேது பகவான்கள் அமர்ந்திருக்குமிடத்திலிருந்து மற்ற மூன்று கேந்திரங்களிலும் கிரகங்கள் இருந்தாலும் இவர்களால் நன்மை விளையும்.

இப்படியாக ஒரு ஜாதகரின் ஜனன ஜாதகத்தில் அமர்ந்திருந்தால் ராகு தசையிலும் சரி, கேது தசையிலும் சரி பிற்பகுதியில் லட்சாதிபதிகளாகின்றனர். சில கிரந்தங்களில் ராகு-கேது பகவான்கள் சந்திர பகவானுக்கு 3, 6, 10, 11-ஆம் இடங்களிலும், லக்னத்திற்கு, 3, 6, 8, 12-ஆம் இடங்களில் மறையும் போதுதான் நன்மைகள் உண்டாகும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராகு-கேது பகவான்களுக்கு குரு பகவானின் பார்வை கிடைத்தால் -குருட்டு அதிர்ஷ்டம்- என்பார்களே அதுபோல் அமைந்து விடும். திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய 3 நட்சத்திரங்களும் ராகு பகவானின் நட்சத்திரங்களாகும். இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ராகு பகவான் பிரபல யோகத்தைச் செய்வார். அஸ்வினி, மகம், மூலம் இம்மூன்று நட்சத்திரங்களும் கேது பகவானின் நட்சத்திரங்களாகும். இந்த மூன்று நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு கேது பகவான் பிரபல யோகத்தைத் தருவார்.

ராகு பகவான் போக காரகர் என்றும், கேது பகவான் ஞானகாரகர் என்றும் கூறுவார்கள். அதேநேரம் வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக் கொடுப்பதில் இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்ல என்பது அனுபவ உண்மை. வாழ்க்கையைப் புரட்டிப் போட்டு, வாழ்க்கை என்றால் என்ன என்பதைத் தங்களுக்குரிய பாணியில் செய்துவிடுவார்கள்.

ராகு பகவான் காற்று கிரகமாவார். பயணக் கிரகமுமாவர். மாஸ் கம்யூனிகேஷன் துறையைப் பிரதிபலிப்பவர். நவீன விஞ்ஞானத் துறை, போக்குவரத்து, ரியல் எஸ்டேட் இனங்களிலும் ஈடுபடவைத்து லாபங்களைத் தருவார். பொதுவாக, வியாபாரத்தில் கொடிகட்டிப் பறப்பவர்களுக்கு ராகு பகவான் அதிக பலம் பெற்றவராக இருப்பார். வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் வர்த்தகம் அதிக லாபம் தரும். வெளிநாடு சென்று பொருள் திரட்டவும் உதவி செய்வார். அதுவும் பலம் பெற்று சர ராசியிலும் இருந்தால் வெளிநாட்டுப் பயணம் உறுதியாக உண்டாகிறது. ராகுபகவான் வலுத்தவர்களுக்கு வளைகுடா நாடுகளின் தொடர்பினால் ஆக்கம் உண்டாகும்.

ராகு, கேது, சனி, சுக்கிர பகவான்கள் தங்கள் தசையின் பிற்பகுதியிலேயே பலன் தருவார்கள். 3, 6, 11-ஆம் வீடுகள் உப ஜய ஸ்தானங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அதாவது நலம் தரும் நல்ல இடங்களாகும். இந்த இடங்களில் ராகு - கேது பகவான்கள் இருக்க, அவர்களின் தசையில் நற்பலன்கள் பெருகும்.

ராகு பகவான் பன்னிரண்டாம் வீட்டில் இருந்தால் வெளிநாட்டிற்கு சென்று வரும் யோகமுண்டு. அதோடு அங்கு அவர் யோக காரகருடன் இணைந்து விட்டால் வெளிநாட்டில் தங்கி பெரிய வருமானத்தை சம்பாதிக்கும் யோகம் என்று கூறலாம். அதோடு ஆறாம் வீட்டில் கேது பகவானும் சுப பலம் பெற்றிருந்தால் வெளிநாடு யோகத்தால் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும். கால சர்ப்ப தோஷம் உண்டாகி ராகு மஹா தசையில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்பட்டால், கேது பகவானின் புக்தியில் மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்பட்டு விடக்கூடும். ஆகையால் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். பலருக்கு ராகு மஹா தசையில் சுக்கிர புக்திக்குப் பிறகுதான் நற்பலன்கள் கூடுகிறது என்பது அனுபவ உண்மை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.