முகப்பு
வெள்ளிமணி

வையகத்தோர் வணங்கும் வைத்திய நாதர்!

உலகிற்குத் தந்தையான பரமேஸ்வரனே மந்திரமும், தந்திரமும் மருந்தாகிப் பிறவிப் பிணி முதலிய எல்லாப் பிணிகளையும் நீக்கி பேரின்பம் தரக்கூடியவர் என்பதை உணர்த்துவதற்காகவே "ஸ்ரீ வைத்தியநாதர்' என்னும் திருநாமத்து

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:04 PM
பகிர்:

உலகிற்குத் தந்தையான பரமேஸ்வரனே மந்திரமும், தந்திரமும் மருந்தாகிப் பிறவிப் பிணி முதலிய எல்லாப் பிணிகளையும் நீக்கி பேரின்பம் தரக்கூடியவர் என்பதை உணர்த்துவதற்காகவே "ஸ்ரீ வைத்தியநாதர்' என்னும் திருநாமத்துடன் சிவலிங்கத் திருமேனி தாங்க எழுந்தருளியிருக்கும் அற்புதத் தலம் திருப்புள்ளிருக்கும் வேளூர் என்னும் வைத்தீஸ்வரன்கோயில் திருத்தலமாகும். 

சிவபெருமான் மருத்துவராக எழுந்தருளி அருளும் தன்மையால் இத்தலத்திற்கு அக்காரணப் பெயராக அமைந்தது. தேவாரப்பதிகம் பெற்ற காவிரி வடகரைத் தலங்கள் வரிசையில் இது 16-ஆவது தலமாகும். திருக்கயிலாய பரம்பரைத் தருமபுரம் ஆதீன திருக்கோயில்களில் தலைமைக் கோயிலாக விளங்கும் இதன் சிறப்பை அறிவோம்!

சடாயுபுரி, வேதபுரி, கந்தபுரி, பரிதிபுரி, அம்பிகாபுரம், அங்காரபுரம், வினைதீர்த்தான் கோயில் என பற்பல பெயர்கள் இத்தலத்திற்கு உண்டு. பொதுவாக மக்களின் பேச்சு வழக்கத்தில் வைத்தீஸ்வரன் கோயில், தையல் நாயகி கோயில் என்றே அழைக்கப்படுகிறது. (சீர்காழி - மயிலாடுதுறை இடையே உள்ள ஊர்)

தலச்சிறப்பு: மனிதர்களுக்கு தொல்லை அளிக்கும் மொத்த நோய்கள் 4448 என்று அகத்தியர் முதலான பதினெண் சித்தர்கள் கண்டறிந்தபடி சித்த மருத்துவத்தில் வகுக்கப்பட்டுள்ளது. (இதைப்பற்றிய விளக்கநூல் தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் காணலாம்). இந்த பிணிகளைத் தீர்க்க திருவுளங்கொண்டு கயிலாயத்திலிருந்து இறைவி தைலப் பாத்திரமும், சஞ்சீவியும், வில்வமரத்தடி மண்ணும் ஏந்திவர உடன் இறைவன் தாமே மருந்தாகவும், மருத்துவராகவும் இத்தலத்தில் வேப்பமர நிழலில் எழுந்தருளியதாக தலவரலாறு கூறுகிறது. 

உடற் பிணிகள் மட்டுமின்றி பேய், பில்லி, சூனியம் போன்ற வினைகளையும் நீக்குவதாக ஒரு பழம்பெரும் தல பாடல் மூலம் அறியப்படுகிறது. பதினெண் சித்தர்களில் தன்வந்திரி முனிவர் வழிபட்ட பேறு உடையது. நாடி ஜோதிடத்தின் பிறப்பிடம் இத்தலம்.

இத்தலத்தில் வழங்கப்படும் திருச்சாந்துருண்டை (மண் மாத்திரைகள்) உட்கொண்டு, சித்தாமிர்தத் தீர்க்கத்தைப் பருகி வருபவர்கள் வினைகளெல்லாம் தீர்ந்து முக்தியின் பலனை அடைவார்கள். மண்ணுருண்டையே மாமருந்தாகும். இதனை "ஒருண்டை மண்ணை யுண்டால் ஐயிரண்டு பிறப்பு அவர் கொழிக்கலாமே' என இவ்வூர்க் கலம்பகச் செய்யுள் சிறப்பித்துக் கூறுகிறது.

இக்கோயிலில் நடைபெறும் அனைத்து சிறப்பு வழிபாடுகளிலும் முருகனுக்கே முதலிடம். ஏனைய தலங்கள் போலல்லாமல் அர்த்தஜாம பூஜை காலத்தில் ஸ்ரீ செல்வ முத்துக் குமாரருக்கு வழிபாடு நடந்த பின்னர் தான் சுவாமிக்கு வழிபாடு நடைபெறும். இதற்கு புழுகாப்பு என்று பெயர். இப்புழுகாப்பு தரிசனம் இங்குச் சிறப்புடையது. 

பண்பாடு:

ஸ்ரீ செல்வமுத்துகுமார சுவாமி கிருத்திகை மற்றும் விழாக்காலங்களில் வெளியில் எழுந்தருளும் போது சுவாமி, அம்பாள் சந்நிதியில் வலம் வந்து அனுமதி பெற்றுச் செல்வதும், திரும்பி உள்ளே செல்லும் போதும் தான் திரும்பி வந்தமையை அறிவித்துச் செல்லும் பாங்கும் மனித குலம் பின்பற்ற வேண்டிய ஒரு மகத்தான பண்பாட்டினை அறிவிக்கிறது. 

செவ்வாய் தலங்களில் மிகப்பிரதானமானது வைத்தீஸ்வரன் கோயில் ஜாதகத்தில் செவ்வாய் தோஷத்தினால் ஏற்படும் கோளாறுகள் சரியாவதற்கு உகந்த பரிகாரத்தலம் இதுவேயாகும். இங்கு இவருக்கு தனி சந்நிதி உண்டு. செவ்வாய் தோறும் மேஷ வாகனத்தில் அங்காரகன் பிரகார வலம் வரும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. செவ்வாய்க்கிழமைகளில் அங்காரகனோடு செல்வமுத்துக் குமாரசுவாமி, தையல் நாயகியுடன் கூடிய வைத்தீஸ்வர பெருமானையும் சேர்த்து வழிபட்டால் பிணிகள் பறந்தோடும்.

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர் ஸ்ரீ முத்துஸ்வாமி தீட்சதர். திருமணமாகி வெகுநாள் வரை குழந்தை இல்லாமல் தவித்த இவரின் பெற்றோர் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு வந்து ஒரு மண்டலம் விரதம் இருந்து முத்துக் குமார சுவாமி அருளால் இவரைப் பெற்றெடுத்தனர். அவருக்கு இதனால் முத்துஸ்வாமி என்ற பெயர் அமைந்தது.

வைத்தியநாத அஷ்டகம்: கால் முதல் தலை வரையில் உள்ள எல்லா அங்கங்களுக்கும் ஏற்படும் வியாதிகளுக்கு நிவாரணம் அளிக்கும் ஸ்ரீ வைத்தியநாதனை நமஸ்கரிக்கிறேன் என்று ஆதிசங்கரர் தனது வைத்தியநாத அஷ்டக ஸ்தோத்திரத்தில் போற்றித் துதித்துள்ளார். 

தருமையாதீனம் 27-ஆவது குரு மகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வழிகாட்டுதலுடன், அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஏப்ரல் 29-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு மேல் 9.30க்குள் நடைபெறுகிறது. யாகசாலை பூஜைகள் ஏப்ரல் 25 -இல் ஆரம்பமாகிறது.

கும்பாபிஷேக விழாவின் நேரடி ஒளிபரப்பினை ஹ்ர்ன்ற்ன்க்ஷங் க்ட்ஹழ்ம்ஹல்ன்ழ்ஹ ஹக்ட்ண்ய்ஹம், எனும் இணையதளம் வாயிலாகக் காணலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.