வெள்ளிமணி

2000 ஆண்டுகளாக கடலுக்கு நடுவில் உள்ள நவகிரகங்கள்!

பொ.பாலாஜிகணேஷ்


ஒவ்வொருவரும் தங்களின் மறைந்த பெற்றோர், பாட்டன், பாட்டி, மூதாதையர் ஆகியோர்களுக்கு நன்றியுணர்வோடு இருக்க வேண்டும். முன்னோர்களான பித்ருக்களுக்கு உரிய காலத்தில் ஸ்ராத்தம், தர்ப்பணம் போன்றவைகளைச் செய்யாத காரணத்தால் பித்ரு சாபங்கள், தோஷங்கள் உண்டாகின்றன. பித்ரு தோஷம் உள்பட பல தோஷங்களை நிவர்த்தி செய்யும் பரிகாரத் தலம் தேவிபட்டினம்! இங்குள்ள அருள்மிகு நவபாஷாண நவகிரக திருக்கோயில் தனிச் சிறப்பு வாய்ந்தது.

தேவிபட்டினம் நவபாஷாண நவகிரக திருக்கோயில்: ராமாயண காலத்தில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி இக்கோயிலில் வழிபட்டுள்ளதால், இக்கோயிலின் தொன்மையை குறிப்பிட்டு சொல்ல இயலாததாக இருக்கிறது. ஆனால் குறைந்தது 2000 வருடங்களுக்கு மேலாக கடலில் இந்த நவகிரக கோயில் உள்ளது என்றும், இத்தனை ஆண்டு காலமாக பக்தர்கள் இங்கு வந்து, தங்களின் தோஷங்கள் நீங்க வழிபாடு செய்து வருகின்றனர் என்றும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

புராண காலத்தில் இந்த ஊர் "தேவிபுரம்' என அழைக்கப்பட்டு, பின்னர் "தேவிபட்டினம்' என மாறியுள்ளது. இக்கோயிலில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட நவகிரகங்களே பிரதான தெய்வங்களாக இருக்கின்றனர். கடல் நீரே இந்தக் கோயிலின் புனித தீர்த்தமாக இருக்கிறது என்பது வியப்பான தகவல்.

தல புராணம்: மகிஷாசுரன் எனும் அரக்கன் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தான். இக்கொடுமைகளைப் பற்றி பராசக்தியிடம் தேவர்கள் கூறிய போது, தேவர்கள் மற்றும் அனைத்து லோகங்களையும் காக்க மகிஷாசுரனுடன் போரிட பராசக்தி இங்கு வந்தாள். அப்போது, மகிஷாசுரன் கடலிலுள்ள சக்ர தீர்த்தத்தில் ஒளிந்து கொண்டான். அவனை தனது சக்தியால் வெளியே கொணர்ந்து தேவி வதம் செய்து, பின்பு அவனுக்கு சாப விமோசனம் வழங்கிய தலம் இது! 

இங்கிருக்கும் கடலில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி பிரதிஷ்டை செய்த நவகிரகங்கள் இருக்கின்றன. இவை "நவபாஷாண நவகிரகங்கள்' என அழைக்கப்படுகின்றன. இங்கு ராமபிரானுக்கு சனி தோஷம் நீங்கியதாகவும், சிவன் மற்றும் பார்வதி தேவியின் காட்சி கிடைத்து, அவர்களின் ஆசிகளுடன் ராவணனுடனான போரில் ஸ்ரீராமர் வெற்றி பெற்றதாகவும் தல புராணம் கூறுகிறது. பல்லாயிரம் ஆண்டுகள் கடல் நீரில் இருந்தாலும் இன்றும் அந்த நவகிரகங்கள் நல்ல நிலையில் இருக்கின்றன.

இந்த நவகிரகங்களுக்கு பக்தர்கள் தங்கள் கைகளாலேயே அபிஷேகம், ஆராதனைகள் செய்யலாம் என்பது விசேஷம். இக்கோயிலின் கடல் தீர்த்தத்தில் நீராடி, அங்கிருக்கும் நவகிரகங்களுக்கு நவதானியங்கள் சமர்ப்பித்து, ஒன்பது முறை வலம் வந்து வழிபட்டு, அன்னதானம் போன்ற தானங்களைச் செய்வதால் பிரம்மஹத்தி தோஷம், பித்ரு தோஷம் போன்றவை நீங்குகின்றன.

ஆடி அமாவாசை தினத்தன்று இக்கோயிலில் பித்ரு கடன்களைச் செலுத்த லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவர். தை, ஆடி, மகாளய அமாவாசை தினங்களில் ஸ்ராத்தம், தர்ப்பணம் போன்றவைகளை இந்தத் தலத்தில் கொடுப்பதால் பக்தர்கள் நற்பலன்களைப் பெறுகின்றனர். 

கோயில் நடை திறந்திருக்கும் நேரம்: எல்லா நாள்களிலும் அதிகாலை 4.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை கடலில் நீராடி விட்டு, இங்கிருக்கும் நவகிரக நாயகர்களை வழிபடலாம்.

அமைவிடம்: அருள்மிகு நவபாஷாண நவகிரக திருக்கோயில், ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் என்ற ஊரில், கடற்கரையை ஒட்டி அமைந்திருக்கிறது. இங்கு செல்ல ராமநாதபுரம் நகரிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

ஒடிஸாவில் பாஜக முதல்வர் ஜூன் 10-ல் பதவியேற்பார்: மோடி

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

SCROLL FOR NEXT